மும்பை:
ஐபிஎல் குழுவில் இருந்து டெக்கான் சார்ஜர்ஸ் அணி நீக்கப்பட்ட நிலையில்,
ஹைதராபாத் நகரை அடிப்படையாக கொண்ட புதிய அணியை சன் டிவி குழுமம்
வாங்கியுள்ளது.
ஐபிஎல் குழுவில் இருந்து ஹைதராபாத் நகரை அடிப்படையாக
கொண்ட டெக்கான் சார்ஜர்ஸ் அணி செயல்பட்டு வந்தது. ஆனால் வீரர்களுக்கு
சம்பள பாக்கி வைத்தது தொடர்பான பிரச்சனையில், விதிமுறைகளை மீறியதாக அந்த
அணி ஐபிஎல் குழுவில் இருந்து நீக்கப்பட்டது.இதையடுத்து புதிய ஐபிஎல் அணிக்கான ஏலம் இன்று மும்பையில் நடைபெற்றது. இதில் பல முன்னணி தொழிலதிபர்கள் கலந்து கொண்டனர். இதில் சன் டிவி குழுமமும் கலந்து கொண்டது. பல்வேறு நகரங்களை கொண்ட அணிகள் ஏலம் விடப்பட்டன. அதில், ஹைதராபாத்தை அடிப்படையாக கொண்ட புதிய ஐபிஎல் அணியை, சன் டிவி குழுமம் ரூ.85.05 கோடிக்கு வாங்கியது.
பிசிசிஐயின் புதிய விதிமுறைகள்:
இதற்கிடையே, புதிய அணி தொடர்பாக இந்திய கிரிக்கெட் வாரியம் புதிய விதிமுறைகளை உருவாக்கியுள்ளது.
* புதிய அணியின் ஒப்பந்தம் சமர்ப்பிக்கும் போது ரூ.20 கோடி முதலீட்டு தொகையாக செலுத்த வேண்டும்.
*ஆண்டு வங்கி உத்தரவாதம் அளிக்க தவறும் பட்சத்தில், முதலீட்டு தொகை திரும்ப அளிக்கப்பட மாட்டாது.
*வீரர்களுக்கு சம்பளம் அளிக்காமல் இருத்தல், பிசிசிஐயிடம் முன்னறிவிப்பு இல்லாமல் அணியின் உரிமையை மாற்ற முயற்சி செய்தல் ஆகிய நடவடிக்கைகளில் ஈடுபட்டால், அணியின் ஒப்பந்தத்தை ரத்து செய்ய பிசிசிஐக்கு அதிகாரம் உண்டு.
பிசிசிஐயின் புதிய விதிமுறைகளின் கீழ் தற்போது சன் டிவி வாங்கியுள்ள புதிய ஹைதராபாத் அணியின் செயல்பாடு அமையும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சன் டிவியின் புதிய அவதாரம்
இதுவரை சன் குழுமம், டிவி, விமானப் போக்குவரத்து உள்ளிட்ட ஏரியாக்களில்தான் புழங்கி வந்தது. தற்போது முதல் முறையாக விளையாட்டுத் துறையில் அதுவும் பணம் கொட்டிக் கொழிக்கும் ஐபிஎல்லுக்குள் காலடி எடுத்து வைத்திருப்பது அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. பல்வேறு சோதனைகளை சந்தித்து வரும் சன் குழுமத்திற்கு இந்த ஐபிஎல் பிரவேசம் பெரும் 'பிரேக்'காக அமையும் என்பதில் சந்தேகமில்லை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக