பல லட்சம் கோடி கிரானைட் ஊழல் !இந்தாண்டு மே மாதத்தில் சந்தி சிரிக்கத் தொடங்கிய கிரானைட் ஊழல் கடந்த 5 மாதங்களாக ஊடகங்களுக்குத் தீனியாகவும், வாசகர்களுக்குப் பசியாற்றிக் கொண்டும் ஓடிக் கொண்டிருக்கிறது. ராணித் தேனீயைப் பிடித்துக் கொண்டு போய் கூண்டில் அடைத்து தேன் கூடு கட்டுவது போல் மலை விழுங்கி மகாதேவன் பி.ஆர்.பி.ஐப் பிடித்து உள்ளே வைத்துக் கொண்டு, சிலரைப் பட்டியிலடைத்து விட்டுப் பலரைத் தேடிக் கொண்டிருக்கிறது அரசு.
மலைகளை விழுங்கிய மகாதேவர்களுக்கு 50 ஆயிரம் ஏக்கர் சொத்துக்கள் !
ஆமை வேகத்தில் நகரும் அரசின் கண் துடைப்பு நடவடிக்கை !
20 ஆண்டுகளுக்கும் மேலாக இதைக் கண்டு கொள்ளாத அரசுகள், அதிகாரிகள் இப்போது அவர்களாகவே அவர்களது கட்டுப்பாட்டின் கீழ் வைத்துக் கொண்டே கிரானைட் காட்சிகளை அரங்கேற்றிக் கொண்டிருக்கிறார்கள். ஊடகங்களை அரசு-காவல்துறை-மாவட்ட நிர்வாகம் அடங்கிய கூட்டணி தனது கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டு தாங்கள் விரும்புகிற அளவுக்குச் செய்திகளைக் கட்டவிழ்த்து விடுகிறார்கள். தங்களுக்கு வேண்டிய செய்தியாளர்களுக்கு புள்ளி விபரங்களைக் கொடுத்து விலாவாரியாக வெளியிடச் செய்து கொண்டிருக்கிறார்கள்.
கிரானைட் கொள்ளை அம்பலமான பின் மத்திய அரசின் நிலக்கரி ஊழல் வெளிவந்து 1 லட்சத்து 86 ஆயிரம் கோடி என்று பழைய ஊழல்களையெல்லாம் பீட் அடித்தது. பிரதமர் பொறுப்பிலுள்ள துறையென்பதால் மன்மோகன் பதவி விலக வேண்டும் என்று பா.ஜ.க தலைமையில் எதிர்க்கட்சிகள் வழக்கம் போல் சப்பாணி பாராளுமன்றத்தை மேலும் முடக்கி அல்லோகலப்படுத்தின. சந்தடிச்சாக்கில் டீசல் விலை உயர்வு, சமையல் எரிவாயுக்கு கட்டுப்பாடு, சில்லரை வர்த்தகத்தில் அந்நிய முதலீடு; அதையெதிர்த்து மம்தா விலகல், தமிழ்நாட்டில் கூடங்குளம் போராட்டம், போலீஸ் துப்பாக்கிச் சூட்டில் இருவர் பலி – ஆகிய எல்லா பரபரப்புக்கும் மத்தியில் கிரானைட் ஊழல் பத்திரமாகப் பாதுகாக்கப்பட்டு, ஒரு ஓரமாக தமிழ்நாட்டுச் செய்தித்தாள்களில் பயணித்துக் கொண்டிருக்கிறது.
கிரானைட் ஊழல் தொடர்பான எல்லாச் செய்திகளையும் திரட்டி வைத்துக் கொண்டு, பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகளே அணுகிச் சென்று, புகார்களைப் பெற்று வழக்குப் பதிவு செய்து கொண்டிருக்கிறார்கள். இது ஏதோ மக்கள் திரண்டெழுந்து போய் புகார்களைக் கொடுப்பதைப் போன்றதொரு தோற்றத்தை ஏற்படுத்திக் கொண்டிருக்கிறார்கள். அது போலவே செய்தி ஊடகங்களிலும் அன்றாடம் பி.ஆர்.பி. அன் கோ மீது நடவடிக்கை பாய்வது போல் வழக்குகளைத் தொடுத்து விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள் அதிகாரிகளும், அரசும். கே.என்.நேரு, பொன்முடி, துரை தயாநிதி போன்ற திமுக புள்ளிகள் முன் ஜாமீன் தேடி ஓடிக் கொண்டிருக்கிறார்கள்.
கிரானைட் முறைகேடு தொடர்பாக இது வரை 42 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் 30 வழக்குகள் பி.ஆர்.பி. மீது. ஆனால் இந்த வழக்குகள் வலுவான பிரிவுகளின் கீழ் தொடுக்கப்பட்டுள்ளதாகத் தெரியவில்லை என்று சட்ட வல்லுநர்கள் கூறுகின்றனர். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு போராட்டக்காரர்கள் மீது தேசத் துரோகம், அரசைக் கவிழ்க்க சதி செய்தது போன்ற 300 வழக்குகளுக்கு மேல் அரசு போட்டு வைத்திருக்கிறது. வழக்குகளின் எண்ணிக்கை வளர்ந்து கொண்டே போவதைப் பார்க்கிற மக்கள் இந்த மலைக்கள்ளர்கள் மீது கடும் நடவடிக்கை இருக்கும் என்று நம்பத் தயாராக இல்லை.
மேலும் இந்தக் கொள்ளையின் பண மதிப்பீடு எவ்வளவு என்பதை இது வரை அரசு அறிவிக்கவில்லை. முந்தைய மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் அரசுக்கு அனுப்பிய அறிக்கையில் சுமார் ரூ.16,500 கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என்று தெரிவித்திருந்தார். அண்மையில் மாவட்ட நிர்வாகம் வெளியிட்ட செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ள தொகை சில கோடிகள் மட்டுமே. நடவடிக்கையில் ஈடுபட்டிருக்கும் மதுரை மாவட்ட ஆட்சியர் அன்சுல் மிஸ்ரா, காவல்துறைக் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் ஆகியோருடன் அரசுத்துறை அதிகாரிகளின் எல்லாத் தரப்பும் ஒத்துழைக்க மறுப்பதாகச் செய்திகள் கசிகின்றன. மேலும் இழப்பை மதிப்பீடு செய்வதற்கான பெரும்பாலான தடயங்கள் அழிக்கப்பட்டு விட்டதால், எளிதாக மதிப்பீடு செய்ய முடியாது என்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர். மேலும் ஊழல் செய்த அதே அரசு இயந்திரத்தை வைத்துக் கொண்டு அதே ஊழலைக் கண்டுபிடிப்பது இருட்டுக்குள் கருப்புப் பூனையைத் தேடுவதைப் போன்றதே.
இந்தக் கொள்ளைக் கூட்டணி மெகா கூட்டணி மட்டும் அல்ல. பலம் வாய்ந்த கூட்டணியும் கூட. எனவே இதைத் தாண்டி உண்மைகள் வெளி வருவது கடினம். ஜெயலலிதாவுக்கும் பி.ஆர்.பி அன் கோ வுக்கும் இடையே ரகசிய பேரம் தொடங்கி விட்டதாகவும், பேரம் இது வரை படியவில்லை – படிய வேண்டியது மட்டுமே பாக்கி என்றும் சொல்லப்படுகிறது. இந்தப் பிரச்சினையை ஆணி வேர் வரை தோண்டினால் தோண்டுகிறவர்களுக்கே அதிர்ச்சி ஏற்படும் என்பது மக்கள் அறிந்தது தான். கிரானைட் கொள்ளை தொடர்பாக இது வரை ஊடகங்களில் வெளியிடப்படாத செய்திகளும் நிறையவே உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக