புதன், 24 அக்டோபர், 2012

ஜெயாவின் இருட்டாட்சிக்கு எதிராக மக்கள் போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்


கோவில்களில் அன்னதானம், ஆடு மாடுகள் மீது அக்கறை, யானைகளை சுற்றுலாவுக்கு அனுப்புவது என்று ஜீவராசிகள் மீது பாசம் காட்டும் பாசிச  ஜெயாவின் ஆட்சி என்றாலே தமிழகம் எப்போதும் பின்னோக்கி இருண்டகாலத்திற்கு சென்று விடும். தமிழகம் முழுவதும் தற்போது 16, 17 மணி நேரத்திற்கு விட்டு விட்டு மின் இணைப்பு துண்டிக்கப்படுகிறது.
கல்வி, மருத்துவம், குடிநீர், மின்சாரம் உள்ளிட்ட சேவைகளை வழங்குவதிலிருந்து அரசு விலகிக்கொள்ள வேண்டும் என்பதை வலியுறுத்துகின்ற மறுகாலனியக்க கொள்கைகளை அமல்படுத்தத்துவங்கிய பிறகு நாடு முழுவதும் புதிய மின் உற்பத்தி நிலையங்கள் எதுவும் பெரிய அளவுக்கு துவக்கப்படவில்லை.  மின்சாரம் வழங்கும் பொறுப்பிலிருந்து அரசு விலகிக்கொண்டு தனியார் கொள்ளையர்களை மின் உற்பத்தி துறைக்குள் நுழைப்பது அரசின் திட்டம். அற்கான பல சதி வேலைகளும். சதி ஆலோசனைகளும் நடக்கின்றன.

ஜெயாவின் இருட்டாட்சிக்கு எதிராக தமிழகம் முழுவதும் மக்கள் தன்னிச்சையாக பல போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.  மக்களே தெருவுக்கு வரும் போது மக்களுக்காக உழைக்க காத்திருப்பதாகவும், லட்சக்கணக்கிலும், கோடிக்கணக்கிலும் உறுப்பினர்களை வைத்துக்கொண்டிருப்பதாகவும் பீற்றிக்கொள்ளும் ஓட்டுக்கட்சிகளால் ஏன் அரசை அடிபணிய வைக்கும் போராட்டத்தை நடத்த முடியவில்லை ? மக்களே தெருவில் இறங்கிவிட்ட பிறகும் அமைதியாக இருந்தால் நாறிப்போய்விடுவோம் என்பதாலும், ஜெயா அரசை எதிர்ப்பதற்காகவும் தான் அனைத்து ஓட்டுப்பொறுக்கி கட்சிகளும் பெயரளவுக்கு சில போராட்டங்களை நடத்திக்கொண்டிருக்கின்றனர்.
தமிழக மக்கள் கடுமையாக போராடியதன் விளைவாக தான் சென்னையில் 2மணி நேர மின்வெட்டு அமல்படுத்தப்பட்டு பிற பகுதிகளுக்கு சிறிது நேரம் கூடுதலாக மின்சாரம் வழங்கப்படுகிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு அளவற்ற மின்சாரத்தை வாரி வழங்கும் அரசு மக்களை இருளுக்குள் தள்ளுவதை எதிர்த்து அனைவரும் தெருவில் இறங்குவது தான் தீர்வு என்று அறைகூவி ம.க.இ.க, பு.மா.இ.மு, பு.ஜ.தொ.மு, பெ.வி.மு, வி.வி.மு உள்ளிட்ட புரட்சிகர அமைப்புகள் தமிழகம் முழுவதும் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.
அதே போல மனித உரிமை பாதுகாப்பு மையமும் பிரச்சாரத்தில் ஈடுபட்டுள்ளது.  விருத்தாசலம் நகரம் முழுவதும் கடந்த ஒருவாரகாலமாக மின்வெட்டு பிரச்சினைக்கு தீர்வு உண்டு என்பதை விளக்கி ம.உ.பா.மை வழக்குரைஞர்கள் தெருமுனைப்பிரச்சாரம் செய்தனர். மின்பற்றாக்குறையை தீர்க்க முடியாது என அவநம்பிக்கையோடு இருந்த மக்களிடம் சமச்சீர் மின்வெட்டை முடக்கியிருக்கும் குத்தாலம், வழுதாவுர், மேட்டுர், வடசென்னை போன்ற அரசு மின் நிலையங்களை போர்க்கால அடிப்படையில் சீர் செய்தாலே மின்வெட்டை பெருமளவு சரிசெய்யமுடியும் என ஆதாரங்களுடன் பேசியதை மக்கள் ஆர்வமாக கவனித்தனர்.
அதைத் தொடர்ந்து கடந்த20 -ம் தேதி காலை 10மணி முதல் மாலை 5 மணி வரை விருத்தாசலம் பாலக்கரையில் நடைபெற்ற போராட்டத்தில் பல தரப்பினரும் கலந்து கொண்டனர். மழையால் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டுள்ள நிலையில் போராட்டம் நடக்குமா நடக்காதா என்கிற சூழல் இருந்தது. எனினும் ஒரு வார காலமாக வீடுவீடாக செய்திருந்த விரிவான பிரச்சாரத்தால் மழையையும் பொருட்படுத்தாமல் மக்கள் போராட்டம் நடந்தது.
‘பவரை கையிலெடுத்தால் பவர் வரும்’ என்ற முழக்கம் அனைவரையும் ஈர்த்தது. வீட்டுக்கு ஒருவர் வீதியில் இறங்கு விலகும் உடனே மின்வெட்டு என்று போராட்டத்தை ஆதரித்து பேசியவர்கள் அனைவரும் இதற்காக ஒன்றிணைவதன் அவசியத்தை வலியுறுத்தி பேசினர். தனியார்மயத்தை கொண்டு வருவதற்காக தான் மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது. பன்னாட்டு கம்பெனிகளுக்கு 24 மணி நேரம் தடையற்ற மின்சாரத்தை வழங்கும் அரசு சிறுதொழில் நிறுவனங்களுக்கு 18 மணிநேரம் வெட்டுவதை ஏற்கக் கூடாது என்று ரிப்ராக்டரி சங்க தலைவர் திரு.சோமசுந்தரம் பேசினார். அதோடு போராட்ட நிதியை அளித்து அடுத்தடுத்து நடைபெறும் அனைத்து போராட்டத்தில் நாங்கள் கலந்து கொள்கிறோம் என்றும் அறிவித்தார்.
அனைவருக்கும் வேலை இருக்கிறது. பொதுப்பிரச்சினைகளுக்கு தனியாக நேரம் ஒதுக்கிதான் வரவேண்டும். மின்சாரம் சமமாக பகிர்ந்தளிக்கப்பட வேண்டும். மின் உற்பத்தியில் தனியார்மயத்தை அகற்ற வேண்டும். பழுதான மின் நிலையங்களை சீர் செய்ய வேண்டும் என தீர்வை சொல்லி நடைபெறும் இந்த மக்கள் போராட்டத்தில் அனைவரும் கலந்து கொள்ள வேண்டும். அதிகாரிகளும் ஆட்சியாளர்களும் ஊழலுக்காக நாட்டை பங்கு போட்டு விற்கின்றனர். அனைத்தும் மோசமாகிவிட்டது. பிரதிபலன் பாராமல் உண்மையாக நடத்தப்படும் இந்த போராட்டத்திற்கு நான் தொடர்ந்து ஆதரவளிப்பேன் என முன்னால் நகர் மன்றத்தலைவரும் கண் சிகிச்சை மருத்துவருமான டாக்டர் வள்ளுவன் கொட்டும் மழையிலும் குடையை பிடித்துக்கொண்டே தனது உரையை முடித்தார்.
விருத்தாசலம் வழக்கறிஞர் சங்கத்தலைவர் பட்டி முருகன் பேசும்போது சட்டியில் இருந்தால் தான் அகப்பையில் வரும் என்று மின்வாரிய அதிகாரிகள் பேசுகிறார்கள். சட்டியில் இல்லைன்னா பூட்டிட்டு போயேன். ஒன்னும் இல்லைன்னா அப்புறம் எதுக்கு மின்வாரியம், எதுக்கு  ஒழுங்குமுறை ஆணையம். இந்த பக்கம் வத்திய கொளுத்தி வச்சா கொசு அந்தாண்ட காதுல கொய்ன்னு சத்தம் போடுது தூங்க முடியல.  அந்த நேரத்துல பொம்பளைங்க கோவத்துல என்ன சொல்லி ஏசுமோ அதை அப்படியே லட்டரா எழுதி இவனுங்களுக்கு போடனும்.  எல்லோரும் கொசுவலையில தூங்க இடவசதி இல்ல. சட்னி, அரிசி மாவு எல்லாம் கிரைண்டர்ல அரைச்சு அப்படியே பாதியில நின்னு போச்சின்னா இந்த பொம்பளங்க அது இதுன்னு என்னம்மா சொல்லி ஏசுதுவோ தெரியுமா ? அப்படியே அதையெல்லாம் லெட்டர் எழுதி போடனும். சென்னக்கு ஒரு சட்டம் தமிழகத்திற்கு ஒரு சட்டமா ? இவ்வளவு பிரச்சினையிலும் மின்திருட்டு வேற.  இந்த புத்தகத்துல விவரமாக எல்லாம் இருக்கு.  இது கடையில தான் விக்குது மின்வாரிய அதிகாரிகள் படிப்பான்களா மாட்டான்களா ? படிச்சா ஏன் நடவடிக்கை எடுக்கல.
ராஜுவ் காந்தி எங்கேயோ ஓட்டல்ல சாப்பிடும் போது சோனியாவ பார்த்தாராம். அது நம்மோட கேடுகாலம். சுதந்திர போராட்டத்துல தியாகம் செஞ்ச பலபேர் பஞ்சாப்காரங்க.  அங்கயிருந்து வந்த மன்மோகன்சிங் பிளைட்டுல இருந்து எறங்குன கையோட அடுத்த பிளைட்டுல ஏறிபோறாரு. எப்பபார்த்தாலும் அந்நிய மூலதனம், அந்நிய மூலதனம், பன்னாட்டுகம்பெனி கதை தான்.  இந்திய மக்களை பத்தி ஒன்னும் பேசறது இல்ல. எல்லாத்தையும் விற்பதுதான் தனியார்மயம் அதுதான் நாட்டு வளர்ச்சியாம். இதையெல்லாம் மக்கள் கடுமையாக எதிர்த்து போராட ரோட்டுக்கு வரணும் என அரசியலை நகைச்சுவையோடு பேசி மக்களை உற்சாகப்படுத்தி சென்றார்.
அடுத்து புரட்சிகர மாணவர் இளைஞர் முன்னணியை சேர்ந்த தோழர் சேகர் பேசினார். தோழர் குழந்தை வேலு நிகழ்ச்சியை ஒருங்கிணைக்க வழக்கறிஞர் புஷ்பதேவன் மற்றும் போரட்டத்தை ஆதரித்து பேசிய சிதம்பரம் கலையரசன், முஜுபுர் ரஹ்மான், பெற்றோர் சங்க தலைவர் வெங்கடேசன், கருவேப்பிலங்குறிச்சி நந்தகுமார், செல்வக்குமார் என பலரும் உற்சாகமாக கலந்துகொண்டனர். மதிய உணவு அங்கேயே முடிந்தது. உணவு இடைவேளைக்கு பிறகு மீண்டும் போராட்டம் தொடர்ந்ததை கண்டு மக்கள் வியப்படைந்தனர்.
இறுதியாக மனித உரிமை பாதுகாப்பு மையத்தின் ஒருங்கிணைப்பாளர் ராஜு பேசினார். நாங்கள் மக்களிடம் விழிப்புணர்வு பிரச்சாரம் மட்டுமே செய்ய முடியும். அனைவரையும் பாதிக்ககூடிய மின்வெட்டுக்கு எதிராக பெருந்திரளான மக்கள் ஒன்றினைந்து போராடும் போது தான் வெற்றி பெற முடியும். தமிழகம் முழுவதும் மக்கள் போராடியதால் தான்,  ஏன் மின்வாரிய அலுவலகத்திற்கு தீ வைக்கும் அளவிற்கு கூட கொந்தளித்ததால்தான் சென்னையில் 2 மணி நேர மின்வெட்டு அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழக-மின்வெட்டு-ஜெயலலிதா-கார்டூன்மின்கட்டணத்தை பல மடங்கு உயர்த்தி மின் உற்பத்தி துறையை தனியார்மயமாக்குவதற்காக செய்யப்படும் பலவேலைகளில் இந்த மின்வெட்டும் ஒன்று.  தனியார் மின் உற்பத்தி நிலையங்கள் 18500 மெகாவாட் மின் உற்பத்தி செய்வதற்கு தமிழக அரசு அனுமதியளித்து சலுகைகளையும் வழங்கியுள்ளது. அதற்கு தேவையான நிலக்கரியை தங்கு தடையின்றி வழங்க மத்திய அரசும் ஒப்புதல் அளித்துள்ளது. மக்களின் சிறு சிறு சேமிப்புகளையும் உறிஞ்சி எடுக்கத்தான் பொதுச்சொத்தான மின்சாரத்தை தனியாருக்கு தாரை வார்க்கின்றனர்.
பன்னாட்டு கம்பெனிகளுக்கு 24 மணி நேரமும் தடையற்ற மின்சாரம் வழங்கப்படுகிறது. அவர்கள் பெரிய ஜெனரேட்டர்களை வைத்திருக்கிறார்கள் 2,3,மணி நேர மின்வெட்டை அவர்களால் சாதாரணமாக சமாளிக்கமுடியும். ஆனால் அரசு அதை செய்ய மறுக்கிறது. ஆறுமாதத்தில் மின்மிகை மாநிலம் ஆக்குவேன் என வாக்களித்து ஆட்சியில் அமர்ந்த முதல்வர் இதற்கெல்லாம் பதில் சொல்ல மறுக்கிறார். போலீசை அனுப்பி லத்திசார்ஜ் செய்கிறார். நம்பிக்கையோடு வாக்களித்த மக்களுக்கு வாய்கரிசியாக மின்வெட்டு அமல்படுத்தப்படுகிறது.
சுனாமியின் கோரத்தை, தானே புயலின் பாதிப்பை காட்சி படிமங்களாக நாம்மால் பார்க்க முடிந்தது. அது இயற்கையின் சீற்றம். அரசு நிவாரணம் ஓரளவு கிடைத்தது. அனைவரும் ஆறுதல் கூறினோம்,உதவி செய்தோம். அதே போல மின்வெட்டின் கோரத்தை,  பாதிப்பை ஒவ்வொரு பிரிவு மக்களையும் பேசச்சொல்லி கேளுங்கள். மின் வெட்டால் அழிந்த சிறு தொழிலைப்பற்றியும், கருகிய பயிர்களைப்பற்றியும், தினக்கூலிகளான தூக்கமிழந்த தாய்மார்களின் ஆத்திரத்தை, தூக்கம் கெட்டு கொசுக்கடியில் அழும் குழந்தைகளை, ஏற்கனவே பன்றி தொழுவமாக உள்ள அரசு மருத்துவமனைகள் இந்த மழை நேரத்தில் மின்சாரம் இல்லாமல் இருக்கும் நிலையை எல்லாம் அவர்களிடம் பேசிப்பாருங்கள் இந்த அரசின் கோரமுகம் தெரியும். இந்த போராட்டத்தை அனைவரும் ஆதரிக்கிறார்கள் யாருக்கும் மாற்றுக்கருத்து இல்லை. ஆனால் எப்படி நமது கோரிக்கையை சாதிப்பது ? நமக்கு குறுக்கு வழிகள் எதுவும் கிடையாது. நாம் அனைவரும் பாதிக்கப்பட்டவர்களாக ஒன்றினைந்து போராடினால் மட்டுமே தற்போதுள்ள மின்வெட்டையும், இனி வரவிருக்கின்ற கட்டண உயர்வையும் தடுத்து நிறுத்த முடியும்.
காலை முதல் இரவு வரை நாம் அனைவரும் வாழ்க்கைக்காக ஓடிக் கொண்டுதான் இருக்கிறோம். நமக்கான அடிப்படை வசதிகள் கூட நிறைவு செய்யப்படவில்லை. உத்திரவாதம் இல்லாத வாழ்க்கைக்காக உயிரை பணயம் வைக்கும் நீங்கள் ஒருமுறை அரசை எதிர்த்து உங்களுடைய கோரிக்கைகளுக்காக போராடி வென்று பாருங்கள். அந்த வெற்றி வாழ்க்கையில் நாம் இதற்கு முன்பு இழந்த அனைத்தையும் பெறச் சொல்லும்.  எங்களுக்கு ஏற்படுகின்ற இந்த மகிழ்ச்சியான அனுபத்தில் உங்களையும் இணைத்துக் கொள்ள சொல்கிறோம். மின்வெட்டை மட்டுமல்ல அனைத்தையும் நாம் போராடி பெற முடியும். அடுத்தகட்ட போராட்டத்தை அனைத்து சங்கங்களையும் ஆலோசித்து அறிவிக்கிறோம். விருதை மக்கள் அனைவரும் போராட்டத்தில் பங்கு பெறுங்கள் என்று கூறி தனது உரையை முடித்தார்.

கருத்துகள் இல்லை: