திங்கள், 22 அக்டோபர், 2012

தி.மு.க.வுக்குள் ‘உப தேவர்களின்’ பகிரங்க fight


Viruvirupu
தி.மு.க. மத்திய அமைச்சருக்கும், அதே கட்சியின் எம்.பி.க்கும் இடையே வெளிப்படையாக நடந்த இழுபறி சண்டையின் பின்னணி பற்றி, நேற்றிரவு (ஞாயிற்றுக்கிழமை) கருணாநிதியை சந்தித்து விளக்கம் அளித்தார் மத்திய அமைச்சர்.
தி.மு.க. மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கம், “நாடாளுமன்ற தி.மு.க. குழு தலைவர் டி.ஆர்.பாலு விளம்பரத்துக்காக தன்னிச்சையாக ரயில்வே திட்டங்களை அறிவிக்கிறார்” என்று நேற்று முன்தினம் (சனிக்கிழமை) வெளிப்படையாகவே குற்றம்சாட்டினார். இந்தக் குற்றச்சாட்டு, தி.மு.க.-வுக்குள் பரபரப்பை ஏற்படுத்தி விட்டது.
மத்திய அமைச்சர் எஸ்.எஸ்.பழநி மாணிக்கத்தின் குற்றச்சாட்டு காரணமாக திகைத்துப்போன டி.ஆர்.பாலு, உடனடியாகவே சென்னைக்கு வந்து கருணாநிதியை சந்தித்ததாக கூறப்படுகிறது.
“ஒரே கட்சிக்குள் இருந்துகொண்டு இப்படி பேசலாமா? பழநி மாணிக்கம் கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயலை செய்கிறார்” என பாலு கோபப்பட்டதாக சொல்கிறார்கள். இதையடுத்தே விளக்கம் கொடுக்க பழநி மாணிக்கம் அழைக்கப்பட்டாராம்.

“தஞ்சை மாவட்டச் செயலாளராக இருந்து வருகிறேன். இதுவரை டி.ஆர்.பாலு அறிவித்த திட்டங்கள் குறித்து என்னிடம் கலந்தாலோசிக்கவில்லை. கட்சி கட்டுப்பாட்டை மீறும் செயலை நான் செய்யவில்லை. அவர்தான் (டி.ஆர்.பாலு) தொடர்ந்து கடைப்பிடித்து வருகிறார். வரும் மக்களவைத் தேர்தலில் தஞ்சையில் போட்டியிட டி.ஆர்.பாலு விரும்புவதாலேயே தஞ்சையில் அதிகமாக உழைக்கிறார்” என்று பழநி மாணிக்கம் தன் பங்குக்கு புகார் கூறியிருக்கிறார்.
அதில், உண்மை இல்லாமல் இல்லை.
வரும் லோக்சபா தேர்தலில், சிட்டிங் தொகுதியான ஸ்ரீபெரும்புதூர் தொகுதியிலோ, சென்னை தொகுதிகளிலோ போட்டியிட்டால் வெற்றி பெற முடியாது என்பது டி.ஆர்.பாலுவுக்கு நன்றாகவே தெரியும். ஏற்கனவே தனக்கு மத்திய அமைச்சர் பதவி கிடைப்பதற்கு தடையாக உள்ள ஸ்டாலின், சென்னையை ஒட்டியுள்ள பகுதிகளில் போட்டியிட்டால், உள்ளடி வேலை செய்து, தோற்கடித்து விடுவார் என்ற பயமும் உள்ளது.
கட்சித் தலைவர் கருணாநிதியே கடந்த சட்டமன்ற தேர்தலில் சென்னையில் போட்டியிட பயந்து, சொந்த ஊரைப் பார்த்து போன அதே பாணியில், சொந்த ஊருக்கு தொகுதியை மாற்ற டி.ஆர்.பாலு முடிவு செய்துள்ளாராம். தஞ்சாவூர் லோக்சபா தொகுதியில் உள்ள, மன்னார்குடி சட்டசபை தொகுதியில், டி.ஆர்.பாலு பிறந்த, தளிக்கோட்டை கிராமம் உள்ளது.
தஞ்சை தொகுதியில் போட்டியிடுவது என, அவர் முடிவு செய்து,  தஞ்சை மாவட்டத்தில், புதிய ரயில் பாதைகளுக்கான பணிகள், புதிய ரயில்களை இயக்குவதற்கான முயற்சிகளில், டி.ஆர்.பாலு இறங்கினார். மத்திய ரயில்வே நிலைக்குழு தலைவராக இருப்பதால், இந்த விவகாரங்களை அவரால் எளிதாக நிறைவேற்றிக் கொள்ள முடிந்தது.
இவரது இந்த காய் நகர்த்தல், யாருக்கு ஆப்பு வைக்கும்? தஞ்சை மாவட்ட தி.மு.க. செயலரும், மத்திய இணை அமைச்சருமான பழனி மாணிக்கம் அடுத்த தடவை இதே தொகுதியில் போட்டியிடுவதில்லையா? அதுதான், அவரது குமுறல்.
இப்போது இரண்டு பார்ட்டியும், தலைவரிடம் பஞ்சாயத்துக்கு போயிருக்கிறார்கள்!

கருத்துகள் இல்லை: