புதன், 24 அக்டோபர், 2012

அமெரிக்காவில் ஆந்திர பெண்ணை கொன்று 10 மாத குழந்தை கடத்தல்

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paperவாஷிங்டன்: அமெரிக்காவில் ஆந்திர பெண்ணை சுட்டுக் கொன்று விட்டு அவரது 10 மாத பேத்தியை மர்ம நபர்கள் கடத்தி சென்றது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது. மாயமான குழந்தையை போலீசார் தேடி வருகின்றனர். ஆந்திராவின் பிரகாசம் மாவட்டம் குடுமுலகுண்ட்லா கிராமத்தை சேர்ந்தவர் வேலுகொண்டா ரெட்டி. ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர். இவரது மனைவி சத்யவதி (61). இந்த தம்பதிக்கு சிவபிரசாத் ரெட்டி, கிருஷ்ணா ரெட்டி ஆகிய 2 மகன்கள் உள்ளனர். இருவரும் அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியர்களாக உள்ளனர். பென்சில்வேனியா மாநிலத்தில் உள்ள கிங் ஆப் பிரஷ்யா பகுதியில் சிவபிரசாத் ரெட்டி வசித்து வருகிறார்.


இவரது மனைவி லதா. இவரும் சாப்ட்வேர் இன்ஜினியர். இவர்களது 10 மாத பெண் குழந்தை சாவ்னி. சிவபிரசாத், லதா இருவரும் வேலைக்கு செல்வதால் குழந்தையை கவனித்து கொள்ள 6 மாதங்களுக்கு முன்பு சத்யவதி மகன் வீட்டுக்கு சென்று தங்கியிருந்தார். நேற்று மகனும் மருமகளும் வேலைக்கு சென்று விட்டனர். வீட்டில் பேத்தியுடன் இருந்தார் சத்யவதி. அப்போது வீட்டுக்குள் மர்ம நபர்கள் 3 பேர் திடீரென நுழைந்தனர். குழந்தையை தூக்கினர்.
இதை பார்த்து அதிர்ச்சியடைந்த சத்யவதி அவர்களை தடுக்க முயன்றார்.

அப்போது அவர்கள் வைத்திருந்த துப்பாக்கியால் சத்யவதியை சுட்டனர். இதில் குண்டு பாய்ந்து சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில் அவர் இறந்தார். பின்னர் குழந்தையை தூக்கிக் கொண்டு மர்ம நபர்கள் ஓடிவிட்டனர். இந்த பயங்கர சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். குழந்தையை தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. இதுகுறித்து ஆந்திராவில் சத்யவதியின் கணவர் வேலுகொண்டா ரெட்டி கூறுகையில், ‘சத்யவதி தனியாக இருப்பதை அறிந்து, கருப்பர் இன அமெரிக்கர்கள் வீட்டுக்குள் நுழைந்துள்ளனர். அவரை சுட்டு கொன்று விட்டு பணத்துக்காக குழந்தையை கடத்தி உள்ளனர்’ என்றார்.

கருத்துகள் இல்லை: