வியாழன், 25 அக்டோபர், 2012

புதிய சட்ட திருத்தம்! முறைகேடு செய்யும் ஊராட்சித் தலைவர்களின் பதவிகளுக்கும் சிக்கல்

பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில், அவர்களின் கணவர் அல்லது குடும்ப உறுப்பினர்கள் நிழல் தலைவர்களாக செயல்படுகின்றனர். இவர்களின் முறைகேடு மற்றும் அதிகார துஷ்பிரயோகம் ஆகியவற்றை தடுக்க, உள்ளாட்சி துறையில் அரசு புதிய சட்ட திருத்தம் கொண்டு வருகிறது.

கிராம மக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்து கொடுப்பதில், உள்ளாட்சி அமைப்புகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. தமிழகத்தில், கடந்த ஆண்டு, அக்டோபர், 17,19ம் தேதிகளில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்பட்டது.மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சிகள் நீங்கலாக, 12 ஆயிரத்து 534 ஊராட்சிகள், 31 மாவட்ட பஞ்சாயத்துகளின் தலைவர்கள், 99 ஆயிரத்து, 333 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் உட்பட, ஒரு லட்சத்து 19 ஆயிரத்து 399 பதவிகளுக்கு தேர்தல் நடத்தப்பட்டது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு, 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. இதனால், 4,289 ஊராட்சிகளில் தலைவர்களாக பெண்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு பெண்கள் தலைவர்களாக உள்ள ஊராட்சிகளில், அவர்களின் கணவர் அல்லது உறவினர்களின் சாம்ராஜ்யம்தான் நடக்கிறது.
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி தலைவர்கள், மாநகராட்சி வார்டு கவுன்சிலர் என, பதவியில் உள்ள பெண்களின் கணவர்களே, பெரும்பாலும் நிழல் தலைவர்களாக செயல்படுகின்றனர். சில இடங்களில், அவர்களின் உறவினர்கள் இவ்வாறு செயல்படுகின்றனர். படுகொலை:காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டு அருகே, காட்டாங்கொளத்தூர் மற்றும் திருக்கழுக்குன்றம் ஒன்றியத்திற்கு உட்பட்ட பஞ்சாயத்து தலைவர்கள், இருவர் சமீபத்தில் படுகொலை செய்யப்பட்டனர். இதற்கு பல காரணங்கள் கூறப்படுகின்றன. எனினும் கமிஷன் பிரச்னைகளே, பல்வேறு சிக்கல்களுக்கு காரணமாக சொல்லப்படுகிறது.உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த நிதியாண்டில், 11 ஆயிரத்து 699 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியை திட்டப் பணிகளுக்கு செலவிடுவதில், பெண் ஊராட்சி தலைவர்களின் கணவர்கள் தலையிடுகின்றனர். பணிகளுக்கு செலவிடும் தொகையில் குறிப்பிட்ட சதவீதம் கமிஷன் பெறுவது, தங்களுக்குவேண்டப்பட்டவர்களுக்கு கான்ட்ராக்ட் பணிகளை ஒதுக்குவது, ஆகிய செயல்களில் நிழல் தலைவர்கள் ஈடுபடுகின்றனர்.

இதனால், ஊராட்சி அமைப்புகளில், மற்ற பதவிகளில் இருப்பவர்களுக்கும், நிழல் தலைவர்களுக்கும் பகை ஏற்படுகிறது. இந்த பிரச்னைக்கு தீர்வுகாண அரசு முடிவு செய்துள்ளது. "உள்ளாட்சி அமைப்புகளில் இனிமேல் தேர்தெடுக்கப்பட்ட தலைவர்கள் தவிர, நிழல் தலைவர்கள் செயல்படுவது கண்டறியப்பட்டால், பஞ்சாயத்து தலைவரின் பதவியை பறிப்பது, முறைகேடுகளுக்கு துணை போகும் பஞ்சாயத்து தலைவர்களை தண்டிப்பது, அவர்கள் அடுத்து வரும் தேர்தல்களில் போட்டியிட தடைவிதிப்பது போன்ற நடவடிக்கைகளை ஏன் எடுக்கக் கூடாது' என்று, கேட்டு, உள்ளாட்சித் துறைக்கு மாநில தேர்தல் ஆணையம், சமீபத்தில் ஒரு கடிதம் எழுதியது.இதன் அடிப்படையில், உள்ளாட்சி தலைவர்களின் அதிகாரங்களை வரைமுறைபடுத்தவும், நிழல் தலைவர்களின் செயல்பாடுகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், முறைகேடுகளை தடுக்கவும், புதிய சட்டம் கொண்டு வர, அரசு முடிவு செய்துள்ளது. இதற்காக, உள்ளாட்சி அமைப்புகள் சட்டத்தில், திருத்தம் கொண்டு வரப்படுகிறது. இதற்கான வரைவு மசோதா தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே, விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்பட வேண்டும் என்று, எல்லாஊராட்சி தலைவர்களுக்கும் உள்ளாட்சித் துறையில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டுள்ளது. ஏற்கனவே, ஆயிரம் ஊராட்சி தலைவர்கள் மீது வந்துள்ள புகார்கள் குறித்து, விசாரணை நடந்து வருகிறது.
இந்த நிலையில் அரசு கொண்டு வர உள்ள புதிய சட்டத்திருத்தம், பெண் பஞ்சாயத்து தலைவர்களுக்கு மட்டுமின்றி, முறைகேடு செய்யும் ஊராட்சித் தலைவர்களின் பதவிகளுக்கும் சிக்கல் ஏற்படும் அபாயம் எழுந்துள்ளது. கலக்கம்:முறைகேடு, புகார்கள் தொடர்பாக, 247 ஊராட்சி தலைவர்கள் பதவி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். சில தலைவர்கள் ஆண், பெண் பஞ்சாயத்து தலைவர்கள் மீதான புகார் குறித்து விசாரணை நடந்து வருகிறது. இந்நிலையில் அரசு கொண்டு வர உள்ள புதிய சட்ட திருத்தத்தினால், ஊராட்சி தலைவர்கள் கலக்கம் அடைந்துள்ளனர்.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: