லகம் எங்கிலும் உன்னை வென்றிட யாரு,
உன்னைப் பெற்றதில் பெருமை கொள்ளுது நாடு,
உலக நாஅஅ யகனே!”
என்று பாடல் பெற்றவர் தமிழ் திரைத்துறையை உலக அளவுக்கு எடுத்துச் செல்ல அவதரித்த மகான் என்று விதந்தோதப்படும் கமல்ஹாசன். முதலாளிகளின் கூட்டமைப்பான பிக்கியின் ‘ஊடகங்கள் மற்றும் பொழுதுபோக்குத் துறை’ பற்றிய இரண்டு நாள் மாநாட்டை தலைமை ஏற்று நடத்தியிருக்கிறார் கமல்ஹாசன்.
மாநாட்டை ஒட்டிய செய்தியாளர் கூட்டத்தில் “தமிழ்நாட்டில் ஒரு சினிமா தயாரிப்பது கோலா பானம் தயாரிப்பதை விட அதிக செலவு பிடிப்பதாக இருந்தாலும் தமிழ்நாட்டு திரையரங்குகளில் டிக்கெட் விலை, வளர்ந்த நாடுகளில் விற்கப்படும் கோலாவின் விலையை விட குறைவாக இருக்கிறது. எனவே திரை அரங்குகளில் டிக்கெட் விலையை ஏற்ற வேண்டும்” என்று தனது பொருளாதார தத்துவத்தை உலகறியத் தந்துள்ளார்.
“சினிமாத்துறை இந்தியாவில் ஒரு பொழுதுபோக்கு ஊடகமாக மட்டுமே கருதப்படுகிறது. மருத்துவமனைகள் போல அத்யாவசிய சேவையாக கருதப்படுவதில்லை” என்றும் அவர் வருத்தம் தெரிவித்துள்ளார்.
குழந்தைகள் எலிகளால் தாக்கப்படும் மருத்துவமனைகள்தான் நாட்டில் அத்தியாவசியச் சேவையின் தரம் என்பது அவருக்கு தெரிந்திருக்கவில்லை.
தான் அப்பல்லோவில் சிகிச்சை பெறுவது போல சாதாரண மக்களும் ஆயிரக் கணக்கில் மருத்துவத்துக்கு செலவழிப்பதால் சினிமா பார்க்கவும் ஆயிரக் கணக்கில் செலவழிக்கலாமே என்று ஆதங்கப்படுகிறார்.
‘டிக்கெட் விலை உயர்வு காமன் மேனை பாதிக்காதா’ என்று செய்தியாளர்கள் கேட்ட பொழுது,  உன்னைப்போல் ஒருவனில் ‘ரேஷன் கடையில் அரிசி வாங்க நிற்கும் காமன் மேனாக’ நடித்த கமல் “ரூ 10,000 கொடுத்து ஜீன்ஸ் வாங்கும், ரூ 5,000 கொடுத்து ஷூ வாங்கும் மக்கள் சினிமாவுக்கு கூடுதல் கட்டணம் கொடுக்க முடியாதா” என்று நியாயப்படுத்தினார். “ரோட்டோரக் கடையில் டீ குடிக்க வேண்டுமா அல்லது ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் டீ குடிக்க வேண்டுமா என்பதை மக்கள்தான் முடிவு செய்ய வேண்டும்” என்று தனது கொள்கையை மேலும் விளக்கியிருக்கிறார்.
‘திரைப்பட டிக்கெட்டுகளின் கட்டணத்தை உயர்த்துவதை நான் உறுதியாக ஆதரிக்கிறேன்’ என்று முடிக்கிறார் அவர். ஐந்து நட்சத்திர டீலக்ஸ் ஓட்டலில் டீ குடித்து சொகுசாக வாழும் மக்கள் மலிவான டிக்கெட்டில் திரைப்படம் பார்ப்பதன் மூலம் கமல் போன்ற ஏழைகளின் வயிற்றில் அடிப்பதை அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை.
கமல் தன்னையே காமன் மேனாக பார்க்கிறார், தன்னைச் சுற்றிய வாழ்க்கையை உலகமாக பார்க்கிறார். அவரே காமன் மேன் என்பதால் பிரச்சனைகளின் தீர்வுகள் அவரைச் சார்ந்தே இருக்கின்றன. அவர் ரூ 10,000 மதிப்பிலான ஜீன்ஸ் போடுவார், ஐந்து நட்சத்திர ஹோட்டலில் டீ குடிப்பார், குளிரூட்டப்பட்ட கக்கூசில் கக்கா போவார். அவற்றோடு ஒப்பிட்டு டிக்கெட் விலையை ஏற்றித் தரும்படி மக்களிடம் அறைகூவல் விடுக்கிறார்.
“நூறு ஆண்டு நிறைவை கொண்டாடும் நம் இந்திய சினிமா, அளவில் பெரியதாய் இருந்தாலும் வருமானத்தைப் பொறுத்த வரை முதலிடத்தில் இல்லை” என்று வருத்தப்படுகிறார். “சினிமாத் துறையில் கட்டமைப்பு மோசமாக இருக்கிறது, குறிப்பாக மின் வெட்டு அதிகமாய் இருக்கிறது” என்றும் கவலைப் படுகிறார் உலகநாயகன்.
கடந்த மூன்று ஆண்டுகளாக மின் வெட்டினால் மக்கள் அனுபவிக்கும் அவலங்களும் ஒரு ஆண்டுக்கு மேலாக கூடங்குளத்தில் அணு உலைக்கு எதிராக நடக்கும் போராட்டமும் இந்த உலகக் கலைஞரின் கண்ணில் படவில்லை, ஒரு கலைப்படைப்பாக பீறி வெளிவரவும் இல்லை. மின்தடை காரணமாக படப்பிடிப்பும், திரையரங்குகளும் பாதிக்கப்பட ஆரம்பித்ததும் மின்பற்றாக்குறை பற்றி பேசுகிறார்.
உலக அளவில் தமிழ் சினிமா எந்த இடத்தில் இருக்கிறது என்று கேட்டதற்கு, “அதைப் பற்றி எனக்குத் தெரியாது. நான் என் மொழியை வைத்துக் கொண்டு உலக அளவில் போக விரும்புகிறேன். அதற்கான முயற்சிகளை செய்கிறேன்” என்று தெரிவித்தார்.
கவலைப் படாதீர்கள் உலகநாயகனே! வால் மார்ட் தயாரிப்பில் தா பாண்டியன் நல்லாசியுடன், கூடங்குளம் கரண்ட்டை பயன்படுத்தி அன்பே சிவம் பாகம் இரண்டு எடுங்கள். தமிழை வைத்து உலக அளவில் போய் விடலாம்.
ரொட்டி கிடைக்காமல் மக்கள் பசியில் வாடும் போது கேக் சாப்பிடச் சொன்ன பிரெஞ்சு அரசியும், ரோம் நகரம் தீப்பிடித்த போது பிடில் வாசித்த நீரோ மன்னனும் இன்று இல்லையே என்ற ஏக்கத்தை கலைஞானி கமல்ஹாசன் போக்குகிறார். “வாழ்க வளமுடன்!”
படிக்க: