சனி, 27 அக்டோபர், 2012

தமிழகத்தை இருண்ட நாடாக ஆக்கிய ஜெயலலிதாவுக்கு மின்சாரம் பற்றி பேச தகுதியில்லை: கலைஞர் பதிலடி


தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கடும் மின்தட்டுப்பாடு குறித்து முதல்வர் ஜெயலலிதா 26,10,2012 அன்று விளக்கம் அளித்தார். அப்போது கடந்த கால தி.மு.க. ஆட்சிதான் மின்தட்டுப்பாட்டுக்கு காரணம் என்று குற்றம் சாட்டியிருந்தார்.
இதையடுத்து தி.மு.க. தலைவர் கலைஞர் நிருபர்களை சந்தித்தார். அப்போது நிருபர்களின் கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி:- தமிழகத்திலே உள்ள மின்சாரப் பற்றாக்குறைக்கெல்லாம் கடந்த கால அரசுதான் காரணம் என்றும், அப்போது மின் உற்பத்திக்காக தொடர் முயற்சிகள் எடுக்கப்படவில்லை என்றும் திடீரென்று முதலமைச்சர் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்:- மின்சாரத்தைப் பற்றி பேசுவதற்கோ, அறிக்கை விடுவதற்கோ - இன்றைக்கு தமிழ்நாட்டையே இருண்ட நாடாக
ஆக்கியிருக்கின்ற முதலமைச்சர் ஜெயலலிதாவுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
கேள்வி :- தொழில்நுட்ப ரீதியாக மத்திய அரசிடமிருந்தும், மற்ற மாநிலங்களிலிருந்தும் மின்சாரத்தைக் கொண்டு வருவதற்கான வழி வகைகளை உங்கள் காலத்தில் காணவில்லை என்றும், தி.மு.க.வும் காங்கிரசும் இதில் எந்தவிதமான அக்கறையும் காட்டவில்லை என்றும் ஜெயலலிதா சொல்லியிருக்கிறாரே?
பதில்:- இப்போது ஆட்சியில் அவர்தானே இருக்கிறார். அவர் முதலில் அக்கறை காட்டட்டும். மூன்று மாதங்களில் மின் தட்டுப்பாடே இல்லாமல் செய்கிறோம் என்று சொல்லித்தானே ஆட்சிக்கு வந்தார்.
இப்போது எத்தனை மாதங்கள் ஆகிறது? கடந்த காலத்தில் இரண்டு மணி நேரமோ, மூன்று மணி நேரமோதான் மின்வெட்டு இருந்தது. இப்போது என்ன நிலை? 14 மணி நேரம், 15 மணி நேரம் என்று மின்வெட்டு இருக்கிறதா இல்லையா?
கேள்வி :- ''காரிடார்'' இல்லாததுதான் பிரச்சினை என்கிறாரே?
பதில் :- ஜெயலலிதா ஆட்சியிலே இருப்பதுதான் பிரச்சினை. இவர்கள் செய்கிற தவறுக்கு மத்திய அரசு மீதும், தி.மு. கழக அரசு மீதும் குறை கூறி, தப்பித்துக் கொள்ளப் பார்க்கிறார்கள்.
கேள்வி :- தி.மு. கழகத்தைப் பொறுத்தவரை மின்சாரம் கோரி மத்திய அரசுக்கு வேண்டுகோள் விடுப்பீர்களா?
பதில் :- ஆட்சிப் பொறுப்பிலே இருப்பவர் மத்திய அரசுக்குக் கடிதம் எழுதியிருக்கிறார். இந்த மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகளும் மத்திய அரசிடம் வேண்டுகோள் விட வேண்டுமென்று முதலமைச்சர் கேட்டுக் கொண்டு,
அனைத்து எதிர்க்கட்சிகளுக்கும் கடிதம் எழுதினால், எல்லோருமே அந்த வேண்டுகோளை தங்கள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மூலமாக மத்திய அரசுக்கு விடுப்பார்கள்.
கேள்வி :- கடந்த வாரம் நீங்கள் விடுத்த அறிக்கையில் வல்லூரிலும் மேட்டூரிலும் தி.மு.கழக ஆட்சியில் தொடங்கப்பட்ட மின் உற்பத்தி திட்டங்களைப் பற்றியெல்லாம் விரிவாக எழுதியிருந்தீர்கள். ஆனால் அங்கிருந்து மின் உற்பத்தியை விரைந்து பெறுவதற்கோ, மின் தட்டுப்பாட்டினைப் போக்குவதற்கோ என்ன வாய்ப்புகள் இருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில் :- மின் தட்டுப்பாட்டை தீர்க்க எத்தனையோ வாய்ப்புகள் இருக்கின்றன. அதையெல்லாம் பயன்படுத்திக் கொள்ள இந்த அம்மையார் நினைக்கவும் இல்லை. செயல்படுத்தக் கூடிய திறமை உடையவர்கள் யார் என்பதில் அக்கறை காட்டவும் இல்லை. அவர்களை யெல்லாம் அழைத்துப் பேசவும் இல்லை.
கேள்வி :- திடீரென்று முதலமைச்சர் இப்படி ஒரு விளக்கத்தைக் கொடுக்க வேண்டிய அவசியம் என்ன?
பதில் :- அவசியத்திற்குக் காரணம் தெரியுமே, தமிழகமே இருண்டு கிடப்பதுதான்!
இவ்வாறு கலைஞர் கூறினார்.

கருத்துகள் இல்லை: