புதன், 24 அக்டோபர், 2012

ஒபாமாவுக்கு 48 % மிட் ரோம்னிக்கு 40 % ஆதரவு

 ரோமனி வந்தால் சீனா பொருட்களுக்கு இறக்குமதி வரி விதிப்பேன் என்று கூறுகிறார்..அது இந்தியாவுக்கு நல்லது ..ஒபாமா இந்தியாவின் மென்பொருள் இறக்குமதிய கட்டுபடுத்த வேண்டும் என்று சொல்கிறார்...அது நம்மை பாதிக்கும்...
புளோரிடா:அமெரிக்க அதிபர் தேர்தலில் ஒபாமாவுக்கு 48 சதவீதம் வெற்றி வாய்ப்பு உள்ளதாக கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.
அமெரிக்க அதிபர் தேர்தல் அடுத்த மாதம், 6ம் தேதி நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில், அதிபர் ஒபாமா மீண்டும் போட்டியிடுகிறார். குடியரசு கட்சி சார்பில், மாசாசூசெட்ஸ் முன்னாள் கவர்னர், மிட் ரோம்னி போட்டியிடுகிறார். இருவரும் பல்வேறு மாகாணங்களில், சூறாவளி பிரசாரம் செய்து வருகின்றனர்.அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், ஒரே மேடையில் விவாதிப்பது, 1960ம் ஆண்டு முதல் நடைமுறையில் உள்ளது. மூன்று முறை, இவர்கள் பல்வேறு இடங்களில் ஒரே மேடையில் விவாதித்து, தங்கள் தரப்பு வாதத்தை எடுத்துரைத்தனர்.
முதல் சுற்று விவாதம், டென்வர் நகரிலும், இரண்டாவது சுற்று விவாதம் நியூயார்க்கிலும், மூன்றாவது சுற்று விவாதம் நேற்றுமுன்தினம், புளோரிடாவிலும் நடந்தன.

புளோரிடாவில், ஒரே மேஜையில், அருகருகே உட்கார்ந்து ஒபாமாவும், மிட் ரோம்னியும், பொருளாதாரம் மற்றும் உள்நாடு மற்றும் வெளிநாட்டு விவகாரங்களை 90 நிமிடங்கள் காரசாரமாக விவாதித்தனர். "இஸ்ரேலுடன் உறவை மேம்படுத்த வேண்டும்' என, ரோம்னி கூற, "இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்தும் நாட்டை முறியடிப்போம்'என, ஒபாமா உறுதியளித்தார். ஒபாமாவின் வெளியுறவு கொள்கையை மிட்ரோம்னி குறை கூறினார்.

இதற்கு பதிலளித்த ஒபாமா கூறியதாவது:துனிசியா, எகிப்து, லிபியா போன்று சிரியாவிலும் ஆட்சி மாற்றம் வரும். லிபியா நாட்டின் அமெரிக்க தூதரகத்தில் நடந்த சம்பவத்தினால், நம்நாட்டின் மீதான ஆதரவு குறைந்து விட வில்லை.அமெரிக்க ராணுவத்துக்கு போதுமான நிதி ஒதுக்கப்பட்டு வல்லரசு நாடுகளுக்கு இணையாக படைகளை வைத்துள்ளோம். இதை ரோம்னி அறிந்திருக்கவில்லை.பயங்கரவாதிகளை ஒடுக்க தவறியதாக கூறி பாகிஸ்தானுடனான உறவை துண்டித்து கொள்ள முடியாது. அந்த நாட்டின் ஒத்துழைப்புடன் தான் ஒசாமாவை கொல்ல முடிந்தது.இவ்வாறு ஒபாமா கூறினார்.
ஈரானை கட்டுப்படுத்த ஒபாமா அரசு தவறி விட்டதாக ரோம்னி புகார் தெரிவித்தார்.இதற்கு மறுப்பு தெரிவித்த ஒபாமா, "ஈரான்மீது பொருளாதார தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால், அந்நாட்டின் பொருளாதார பலமடங்கு சரிந்து விட்டது. எண்ணெய் உற்பத்தியும் கணிசமாக குறைந்து விட்டது' என்றார்.
இந்தியா குறித்து இவர்கள் விவாதத்தில் ஏதும் இடம் பெறவில்லை.சீனாவின் முறையற்ற வர்த்தகத்துக்கு முற்று புள்ளி வைக்க வேண்டும், என்றார் ரோம்னி. ஏற்கனவே, சீனாவின் முறையற்ற வர்த்தகம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. அந்நாட்டின் போலி டயர் கம்பெனிகளுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாகவும், அமெரிக்க பொருட்கள் சீனாவுக்கு அதிகம் ஏற்றுமதி செய்யப்படும் சூழ்நிலை ஏற்படுத்தப்பட்டுள்ளதாக ஒபாமா தன் தரப்புவாதத்தை வைத்தார்.
ஒரு கட்டத்தில் ஒபாமாவின் வெளியுறவு கொள்கையை மிட் ரோம்னி ஏற்றுக்கொண்டார். மூன்றாவது சுற்று விவாதத்தின் மூலம் ஒபாமாவின் வெற்றி வாய்ப்பு அதிகரித்துள்ளதாக சி.என்.என்.,கருத்து கணிப்பு தெரிவிக்கிறது.அடுத்த மாதம் நடக்க உள்ள தேர்தலில் ஒபாமாவுக்கு 48 சதவீத ஆதரவு உள்ளதாகவும், மிட் ரோம்னிக்கு 40 சதவீத ஆதரவு உள்ளதாகவும் கருத்து கணிப்புகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை: