வரும் 28ம் தேதி ஞாயிறு அன்று மத்திய அமைச்சரவை மாற்றி அமைக்கப்படும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. மன்மோகன் சிங் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசில் இருந்து திருணாமுல் காங்கிரஸ் விலகியதால் அக்கட்சியின் பிரதிநிதிகளாக இருந்த 6 பேர் விலகினார்கள். திமுக அமைச்சர்கள் இருவர் ராஜினாமா செய்தனர். தேசியவாத காங்கிரஸ் பிரதிநிதியாக இருந்த அகதா சங்மா, அவரது தந்தை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டதால் விலக நேர்ந்தது. ஒளிபரப்புத்துறை அமைச்சராக இருந்த மேற்கு வங்கத்தின் பிரிய ரஞ்சன் தாஸ் முன்ஷி பக்கவாத நோயால் பாதிக்கப்பட்டதால் பதவியில் இருந்து விடுவிக்கப்பட்டார். தொழில்நுட்பத்துறை அமைச்சராக இருந்த மகாராஷ்டிராவின் விலாஸ்ராவ் தேஷ்முக் திடீரென உடல்நலம் குன்றி சென்னையில் மரணம் அடைந்ததால் ஒரு இடம் காலியானது. இவ்வாறு பல பதவிகள் காலியாக உள்ளதால் சில அமைச்சர்கள் கூடுதல் பொறுப்புகளை வகித்து வருகின்றனர். இதற்கிடையில் அரசு மீதும் அமைச்சர்கள் மீதும் தினமும் புதிது புதிதாக குற்றச்சாட்டுகள் கிளப்பப்படுவதால் அவற்றையும் சமாளிக்க வேண்டியிருக்கிறது. அரசு பலவீனம் அடைந்து விட்டதாகவும் எந்த நேரத்திலும் கவிழலாம் என்றும் மம்தா போன்ற தலைவர்கள் பேசி வருகின்றனர். இதற்கெல்லாம் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் மத்திய அமைச்சரவையை பிரதமர் விரைவில் மாற்றி அமைப்பார் என்று ஒரு மாதமாகவே பேச்சு அடிபடுகிறது.
பிரதமர் மன்மோகன் சிங்கும், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியும் ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சந்தித்து நீண்ட நேரம் ஆலோசனை நடத்தினர். பின்னர் ராகுல் காந்தியும் ஜனாதிபதி, பிரதமர் ஆகிய இருவரையும் சந்தித்து பேசினார். இதனால் அமைச்சரவை மாற்றத்தின்போது ராகுலுக்கு பதவி வழங்கப்படும் என்று கூறப்பட்டது. அவர் இதுவரை கட்சியின் இளைஞர் அமைப்பை பலப்படுத்துவதில் கவனம் செலுத்தினார். ஒவ்வொரு தேர்தலின்போதும் தீவிர பிரசாரம் செய்தாலும் அமைச்சரவையில் சேர ஆர்வம் காட்டவில்லை. இப்போது அவர் தன் மனதை மாற்றிக் கொண்டதாக தெரிகிறது.
வரும் ஞாயிற்றுக்கிழமை அமைச்சரவை மாற்றம் நடக்கும் என்று உறுதியான தகவல்கள் தெரிவிக்கின்றன. மேற்கு வங்கத்தை சேர்ந்த 2 அல்லது 3 காங்கிரஸ் தலைவர்களுக்கு பதவி வழங்கப்படும். தாஸ்முன்ஷியின் மனைவி தீபாவுக்கு வாய்ப்பு கிடைக்கலாம். தேஷ்முக் இடம் மகாராஷ்டிராவை சேர்ந்த மற்றொரு காங்கிரஸ் தலைவருக்கு தரப்படும். திமுக தான் விலகிய இரு இடங்களையும் கேட்கப் போவதில்லை என்று கட்சியின் தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். புதுமுகங்களுக்கு அதிக வாய்ப்புகள் வழங்கப்படும் என்றும், இப்போது இணை அல்லது துணை அமைச்சர் பொறுப்பு வகிக்கும் இளம் அமைச்சர்களுக்கு கேபினட் அந்தஸ்து அல்லது தனி பொறுப்பு வழங்கப்படும் என்றும் வட்டாரங்கள் தெரிவித்தன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக