புதன், 24 அக்டோபர், 2012

கசாப்பின் கருணை மனுவை நிராகரித்தது மத்திய உள்துறை அமைச்சகம்

மும்பை தாக்குதல் வழக்கில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்ட, பயங்கரவாதி அஜ்மல் கசாப்பின் கருணை மனுவை, உள்துறை அமைச்சகம் நிராகரித்துள்ளது.
பாகிஸ்தானிலிருந்து வந்த, 10 பயங்கரவாதிகள், 2008 நவம்பர், 26ல், மும்பையின் பல்வேறு இடங்களில் தாக்குதல் நடத்தினர். இதில், அப்பாவி பொதுமக்கள், பாதுகாப்பு படையினர் உட்பட, 166 பேர், பரிதாபமாக உயிரிழந்தனர்.தாக்குதல் நடத்திய பயங்கரவாதிகளில், ஒன்பது பேர், பாதுகாப்பு படையினரால் கொல்லப்பட்டனர். அஜ்மல் கசாப் என்ற பயங்கரவாதி மட்டும், உயிருடன் பிடிபட்டான். கசாப்புக்கு, மும்பை விசாரணை கோர்ட்டில், தூக்கு தண்டனை விதிக்கப்பட்டது.மும்பை ஐகோர்ட்டிலும், அதன்பின், சுப்ரீம் கோர்ட்டிலும், கசாப்புக்கான தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து, கசாப் சார்பில், ஜனாதிபதியிடம் கருணை மனு தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனு, மத்திய உள்துறை அமைச்சகத்தின் பரிசீலனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்நிலையில், கசாப்பின் கருணை மனுவை, உள்துறை அமைச்சகம் நேற்று நிராகரித்தது. கசாபின் கருணை மனுவை நிராகரிக்கும்படி, ஜனாதிபதி பிரணாப் முகர்ஜிக்கு, உள்துறை அமைச்சகம் பரிந்துரை செய்துள்ளது.இதையடுத்து, கசாப்பின் கருணை மனு மீது, இறுதி முடிவு எடுக்கும் பொறுப்பு, தற்போது ஜனாதிபதியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை: