இன்று வெளிவந்த நக்கீரன் இதழில் கூடுதல் டிஜிபி துக்கையாண்டி பணி
இடைநீக்கம் செய்யப்பட்டது குறித்து ஒரு கட்டுரை வந்துள்ளது. அந்தக்
கட்டுரையை பார்ப்போம்.
‘இவருக்கே இந்த நிலைமைன்னா, நம்முடைய நிலைமையும் எப்படி வேணும்னாலும் ஆகலாம். இதுக்கா இந்த வேலைக்கு வந்தோம்’ – தமிழக போலீஸ் அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் சந்தித்துக்கொள்ளும்போது வெளிப்படும் வார்த்தைகள் இப்படித்தான் இருக்கிறது. இவர் என்று இவர்கள் சொல்வது கூடுதல் டிஜிபி துக்கையாண்டியைத்தான்.
1986ல் டிஎன்பிஎஸ்சி தேர்வு மூலம் நேரடி டிஎஸ்பியாக பணிக்கு வந்தவர் துக்கையாண்டி. 2012 ஜுன் 30ந் தேதி அவருடைய ரிடையர்மென்ட் நாள். டிஜிபி அந்தஸ்தில் இருக்கிறவங்களுக்கு கன்மேன் அணிவகுப்போடு ரிடையர்மென்ட் கொடுப்பாங்க. அதுதான் சர்வீசுக்கு கிடைக்கிற கௌரவம். அந்த கௌரவம் பெறக்கூடிய முழுத்தகுதியும் உள்ளவர்தான் துக்கையாண்டி. ஆனா, அந்த கௌரவம் கிடைக்கக் கூடாதுங்கிறதுக்காக, இப்படியா ரிடையர்மெண்டுக்கு முதல் நாள் சஸ்பெண்ட் பண்ணுவாங்க ?“ என அதிர்ச்சி விலகாமல் பேசிக்கொள்கிறார்கள். , இந்த ஆட்சியில் பவர்புல்லான போஸ்டிங்கில் இருக்கும் காக்கி அதிகாரிகள். துக்கையாண்டி மீதான சஸ்பெண்ட் நடவடிக்கைகளால் உறைந்து போயிருக்கும் உயர்அதிகாரிகள் பலரும், இந்த அரசாங்கம் செய்த பெரிய தவறு இது என்று சொல்வது ஆச்சரியமான உண்மை
ரிடையர்மெண்ட்டுக்கு முன்னாடி அவரை சஸ்பெண்ட் பண்ணியாகணும் என்ன செய்வீங்களோ தெரியது என ஜெ.வின் நேரடி உத்தரவையடுத்துதான் இந்த நடவடிக்கை என்கிறது கோட்டை வட்டாரம். ஒரு போலீஸ் உயரதிகாரி மீது ஆட்சிக்குத் தலைமை வகிப்பவருக்கு ஏன் இத்தனை கோபம் ?
1996ம் ஆண்டு திமுக ஆட்சியில், ஜெ. மீது கலர் டி.வி ஊழல் வழக்கு பதிவாகிறது. உடனடியாக அவர் கைது செய்யப்படுவார் என எதிர்ப்பார்க்கப்பட்டது. அப்படியான அவசரம் எதுவும் காட்டப்படவில்லை. திமுகவின் கூட்டணியிலிருந்த த.மா.கா தலைவர் மூப்பனார், கலைஞரை சந்தித்து, ஜெ. ஆட்சியில் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்போம் என்று சொல்லித்தானே மக்களிடம் ஓட்டு வாங்கினோம். கைது செய்ய ஏன் தாமதம் ? என்று கேட்குமளவுக்கு வழக்கு பரபரப்பாக இருந்தது. அப்போது சிபி.சிஐடி எஸ்.பியாக இருந்த துக்கையாண்டிதான், இந்த வழக்கை கவனித்தவர். குற்றம்சாட்டப்படடவர்கள் முன்ஜாமீன் போடுவார்கள். அதில் கோர்ட் என்ன உத்தரவிடுகிறது என்பதைப் பார்த்து நடவடிக்கை மேற்கொள்ளலாம் என்றார். முன்ஜாமீன் மனு மீதான விசாரணை பல நாட்கள் நடந்தன. உயர்நீதிமன்ற நீதிபதி சிவப்பா, இந்த வழக்கில் முகாந்திரம் உள்ளது ஏன் இன்னும் கைது செய்யவில்லை எனக் கேட்டு மனுவைத் தள்ளுபடி செய்தார். இதன்பிறகே, அந்த ஆண்டு டிசம்பர் 7ம் தேதி ஜெ மீதான கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. போயஸ் கார்டனில் ஜெ. பூஜையில் இருந்ததால், 2 மணி நேரம் காத்திருந்து, கைது நடவடிக்கையை மேற்கொண்டவர் துக்கையாண்டிதான். ஜெ 2001ல் ஆட்சிக்கு வந்ததும், அவரை நாகர்கோவிலில் எவ்வித பவரும் இல்லாத நல்ல அலுவலகமும் இல்லாத போக்குவரத்துத் துறை விஜிலென்சுக்கு தூக்கியடித்தார்கள்.
பெங்களுரு சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெறும் ஜெ. மீதான சொத்துக் குவிப்பு வழக்கின் பொறுப்பு அதிகாரியாக, திமுக ஆட்சியில் பதவி வகித்த துக்கையாண்டியை நியமித்தார்க்ள. ஜெவும் அவருடன் குற்றம் சாட்டப்பட்டவர்களும் வாய்தா மேல் வாய்தா வாங்கிக் கொண்டிருந்த சமயத்தில் கோர்ட்டில் சரியாக ஆஜராகி விடுவார் துக்கையாண்டி. அவரால்தான் இந்த வழக்கு நெருக்கடியாகிறது என்று கார்டனுக்குத் தகவல் சொன்ன ஜெ தரப்பு வழக்கறிஞர்கள், கோர்ட் ஹாலிலேயே ஆட்சி மாறியதும் உன்னை உள்ளே வைக்கிறது நிச்சயம் என்று துக்கையாண்டியைப் பார்த்து கமென்ட் அடிப்பதும் வழக்கம் என்கிறார்கள் கர்நாடக வழக்கறிஞர்கள்.
துக்கையாண்டியை திமுக அரசின் ஆதரவாளர் என்றே கார்டன் தரப்பு முத்திரை குத்தி வைத்திருந்தது. ஆனால் விஜிலென்ஸ், சி.பி.சிஐடி என திமுக ஆட்சியில் பொறுப்பு வகித்த துக்கையோ, பவல்புல் நபர்கள் இன்னாரைக் கைது செய் என்றாலோ, விட்டுவிடு என்றாலோ கேட்கமாட்டார். சட்டப்படியான புகாரோ, நீதிமன்ற உத்தரவோ இருந்தால்தான் செய்ய முடியும் என நேரடியாக சொல்லிவிடுவார் என்கிறார்கள் நியாயமான ஐபிஎஸ் அதிகாரிகள்.
2011ல் அதிமுக ஆட்சி அமைந்ததும் 6 மாதத்திற்கு மேல் காத்திருப்பில் வைக்கப்பட்டார் துக்கையாண்டி. தனக்குப் போஸ்டிங் போடவேண்டும் என டிஜிபிக்கு அவர் கடிதம் எழுதியபிறகுதான் மாநகர போக்குவரத்தில் அதிகாரமோ, அலுவலக வசதிகளோ இல்லாத பதவிக்கு போஸ்டிங் போடப்பட்டார். அவர் மீதான நடவடிக்கை என்னவாயிற்று என்பதுதான் மேலிடத்தின் தொடர் கேள்வியாக இருந்தது என்கிறார்கள் டிப்பார்ட்மெண்டில் உள்ளவர்கள்.
கடந்த சனிக்கிழமை துக்கை ரிடையர்டாக வேண்டிய நிலையில், வியாழனன்று ஒரு நபர் அவர் மீது புகார் அளிக்கிறார். அவர் ஏற்கனவே டிபார்ட்மென்ட்டில் தவறாக நடந்து கொண்டதால் சிபி.சிஐடியில் இருந்தபோது துக்கையாண்டி அவர் மீது கைது நடவடிக்கை மேற்கொண்டார். அந்தத் தவறு நிரூபணமானதால் விஜிலென்ஸில் இருந்தபோது டிஸ்மிஸ் செய்தார். இப்படிப்பட்டவர், தனது பணி நிறைவடையும் நேரத்தில் உள்நோக்கத்தோடு தரும் புகாரை ஏற்பது தவறு என விஜிலென்ஸ் அதிகாரிக்கும் உயரதிகாரிகளுக்கும் துக்கையாண்டி கடிதமும் எழுதியிருந்தார்.
புகாரின் நோக்கம் அறிந்த தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர் உள்ளிட்டோர், அதில் நடவடிக்கை எடுக்க முடியாது எனத்தெரிவித்த போதும், அரசின் சட்டப் பிரிவைச் சேர்ந்த முக்கியப் பொறுப்பில் இருப்பவர், அவரைக் கம்பி எண்ண விடாமல் வெளியே விடக்கூடது. கேர்ட்டில் கேஸ் அடிபட்டாலும் பரவாயில்லை. அவரை அசிங்கப்படுத்தியாகனும் என்று மேலிடத்தின் எண்ணத்தை வெளிப்படுத்த, இதனையடுத்து, ரிடையர்மெண்டுக்கு முதல் நாளான ஜுன் 29 அன்று வேறு புகாரில் சஸ்பெண்ட் செய்யப்பட்டார் ஏடிஜிபி துக்கையாண்டி.
அவர் மீதான புகாரின் விபரம் என்னவென்று விசாரித்தோம். கிழக்குக் கடற்கரைச் சாலையில் உள்ள பனையூரில் 2007ம் ஆண்டு தனலட்சுமி என்பவர் தனக்குப் பவர் உள்ள 10 கிரவுண்ட் நிலத்தை விற்க, அதில் 5 கிரவுண்டு துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி பெயரிலும், மீதி 5 கிரவுண்டு மூத்த மகள் யாமினி பெயரிலும் பதிவு செய்யப்பட்டு, இரண்டு வீடுகளும் கட்டப்பட்டுள்ளன. 2007ல் வீடு கட்டப்பட்ட நிலையில், 2010ல் சுப்புலட்சுமி பெயரிலான 5 கிரவுண்டு நிலம் தங்களுக்குச் சொந்தமானது என மும்பையைச் சேர்ந்த மகேந்திரகுமார் கம்பானி என்பவருடைய உறவினர் ஆலந்தூர் கோர்ட்டில் கேஸ் போடுகிறார். கமிஷனரிடமும் இது தொடர்பாக புகார் கொடுக்கப்பட்டது. இடம் தங்களுக்குச் சொந்தமானது என்பதற்கான ஆவணங்களை துக்கையாண்டித் தரப்பு கோர்டில் தாக்கல் செய்ய, மும்பை பார்ட்டியோ வழக்கில் ஆஜராகமல் வாய்தா வாங்கி இழுத்தபடி இருந்தது. கமிஷனரிடமும் துக்கைத் தரப்பு எல்லா ஆவணங்களையும் கொடுத்திருந்தது. இந்த இடம் தொடர்பாக துக்கைத் தரப்புக்கு ஆதரவாக கோர்ட் ஸ்டே கொடுத்ததுடன், புகார் மீது போலீஸ் பதிவு செய்த எப்ஐஆருக்கும் தடை கொடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ராஜய்யா என்பவர் இந்த இடத்தை வாங்குவதற்காக 2009ல் ரவி என்பவரிடம் அக்ரிமென்ட் போட்டதாகவும், ஆனால் நிலம் துக்கை குடும்பத்திடம் இருக்கிறது எனவும் கமிஷனரிடம் புகார் கொடுத்தார். 2007லேயே வீடு கட்டப்பட்ட நிலத்திற்கு 2009ல் எப்படி அக்ரிமென்ட் போட முடியும் எனக்கேட்டு, உரிய ஆவணஙகளை துக்கை தரப்பு கமிஷனரிடம் கொடுத்தது. போலீஸ் தரப்பில் ராஜய்யாவுடன் அக்ரிமென்ட் போட்ட ரவியிடம் புகார் கேட்டு நெருக்கடி தந்துள்ளனர். அவர் புகார் தரவில்லை. மேலும், துக்கையின் மூத்த மகள் பெயரில் உள்ள 5 கிரவுண்டு நிலம் தங்களுக்கு சொந்தமானது என் உபந்திர சலால் என்பவரின் வாரிசு புதிய புகார் ஒன்றை கமிஷனரிடம் அளித்தார். இதற்கும் பதில் ஆவணங்களை அளித்தது துக்கை தரப்பு. கமிஷனரிடம் புகார் தரப்பபட்டு, போலீசாரால் துக்கை குடும்பத்திற்கு எதிராகப் போடப்பட்ட எப்ஐஆர்கள் அனைத்திலும் ஸ்டே வாங்கப்பட்டுள்ளது என்கிறது வழக்கறிஞர்கள் தரப்பு.
கிழக்கு கடற்கரைச் சாலையில் உள்ள ரியல் எஸ்டேட் நிறுவனத்தாரிடம் பேசியபோது, இங்குள்ள “இடங்களை வட மாநிலத்தவர்கள் பல ஆண்டுகளுக்கு முன்பே குறைந் விலைக்கு வாங்கி, லோக்கலில் உள்ளவங்ககிட்டே பவர் கொடுத்து நல்ல விலைக்கு விற்கச் சொல்லிட்டு போயிடுவாங்க. தனலட்சுமியும் அப்படி பவர் வாங்கியிருக்கலாம். அவர் மோசடியா விற்றிருந்தா, அவர் மேலத்தானே நடவடிக்கை எடுக்கணும், மோசடிக்குள்ளான துக்கையாண்டி குடும்பம் மேலே குறி வைப்பது எப்படி சரியாக இக்கும்” என்கிறார்கள்.
கடைசி நேரத்தில் பல புகர்கள் பெறப்பட்டுள்ள நிலையில், துக்கையாண்டியின் மனைவி சுப்புலட்சுமி நடத்தும் ரியல் எஸ்டேட் பிசினெஸ் விவகாரத்திலும் நிலமோசடி என்றொறு எப்ஐஆரும் போடப்பட்டுள்ளளது. இந்த எப்ஐஆர்கள் எதிலும் துக்கையாண்டியை நேரில் தொடர்பு படுத்த முடியாததால் மத்திய குற்றப் புலனாய்வு டிஎஸ்பி நீலாங்கரை ரிஜிஸ்டிராரை துக்கை மிரட்டினார் என அறிக்கை தர, அதனடிப்படையில் அவர் பணி ஓய்வுக்கு முதல் நாள் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளார்.
அரசு ஊழியர்கள் மீதான புகார்கள் தொடர்பாக கடைசி நாளில் சஸ்பெண்ட் நடவடிக்கை எடுக்கப்பபட மாட்டாது என 2006 திமுக தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி அளிக்கப்பட்டதுடன், கலைஞர் முதல்வரானதும் இது தொடர்பாக தமிழக அரசு ஜி.ஓவுடத வெளியிட்டுள்ளது. அந்த அரசாணையையும் மீறி துக்கையாண்டியை சஸ்பெண்ட் செய்துள்ளது ஆள்வோரின் பழிவாங்கும் வெறி.
நமது நிருபர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக