புதன், 4 ஜூலை, 2012

1 லட்சம் திமுகவினர் கைது


தமிழகம் முழுக்க திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டம் : 1 லட்சம் திமுகவினர் கைது திமுகவினரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது

 தாம்பரத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய திமுக தலைவர் கருணாநிதி, ‘திமுகவினரிடையே பெரும் எழுச்சி ஏற்பட்டுள்ளது. இந்த போராட்டத்தில் திமுக தொண்டர்கள் அனைவரும் பங்கேற்க வேண்டும். கைதாகி சிறைக்கு சென்றால் யாரும் ஜாமீனில் வெளியே வரக் கூடாது’ என்று கூறினார். செயற்குழு முடிவின்படி தமிழகம் முழுவதும் திமுகவினர் இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இன்று காலையிலேயே திமுகவினர் அணி அணியாக திரண்டு மறியலில் ஈடுபட்டு கைதாகினர். சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் உள்பட அனைத்து மாவட்டங்களிலும் திமுகவினர் சாரை சாரையாக மறியலில் ஈடுபட்டனர். மாநிலம் முழுவதும் திமுக முன்னணி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள், முன்னாள் அமைச்சர்கள் உள்பட ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் கைதாகினர். அவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள திருமண மண்டபம், சமூக நல கூடங்களில் வைக்கப்பட்டுள்ளனர்.
சென்னையில் 16 இடங்களில் மறியல் போராட்டம் நடந்தது. கொளத்தூர் பகுதி சார்பில் செம்பியம் சார்பதிவாளர் அலுவலகம் அருகே நடந்த போராட்டத்துக்கு கட்சியின் பொருளாளர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார். இதற்காக காலை 9.40 மணிக்கு ஸ்டாலின் வந்தார். அங்குள்ள ஒரு மண்டபத்தில் திரண்டிருந்த திமுகவினருடன் சிறிது நேரம் அமர்ந்திருந்தார். 10 மணிக்கு அங்கிருந்து அனைவரும் ஊர்வலமாக புறப்பட்டனர். ஸ்டாலின் முதல் ஆளாக திமுக கொடியை பிடித்தபடி நடந்து சென்றார். பெரம்பூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே அவர்களை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். ஸ்டாலினை முதலில் பஸ்சில் ஏற்றினர். ஆனால், அவர் கீழே இறங்கிவிட்டார்.

‘எல்லாரையும் கைது செய்த பிறகு கடைசியாக நான் வருகிறேன்’ என்றார். அதையடுத்து ஐசிஎப் முரளிதரன், கிரிராஜன், தேவ ஜவகர் உள்பட 2 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் கைது செய்யப்பட்டனர். அவர்களை பஸ்களில் ஏற்றி அருகில் உள்ள திருமண மண்டபத்துக்கு போலீசார் அழைத்து சென்றனர்.  ஸ்டாலின் கடைசியாக பஸ்சில் ஏறி சென்றார். அங்கு துணை கமிஷனர் கார்த்திகேயன் தலைமையில் போலீசார் பாதுகாப்புக்கு நிறுத்தப்பட்டிருந்தனர்.

சேப்பாக்கம், திருவல்லிக்கேணி பகுதி திமுக சார்பில் எழிலகம் அருகே போராட்டம் நடந்தது. முன்னாள் மத்திய அமைச்சர் தயாநிதி மாறன், மாவட்ட செயலாளர் ஜெ.அன்பழகன் ஆகியோர் தலைமையில் நடிகை குஷ்பு, எம்.பி.வசந்திஸ்டான்லி, முன்னாள் அமைச்சர் ரகுமான்கான், முன்னாள் எம்எல்ஏ உசேன், பகுதி செயலாளர் மதன்மோகன், காமராஜ், நிர்வாகிகள் வீனஸ் வீரஅரசு, பூச்சி முருகன், எல்.ராஜேந்திரன் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் சேப்பாக்கம் எழிலகம் அருகே காலை 9.50 மணிக்கு திரண்டனர்.

பின் அங்கிருந்து ஊர்வலமாக சென்று காமராஜர் சாலையில் மறியலில் ஈடுபட்டனர். அவர்களை இணை கமிஷனர் சேஷசாயி, துணை கமிஷனர் பாஸ்கரன் ஆகியோர் தலைமையிலான போலீசார் கைது செய்தனர். சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே கனிமொழி எம்பி, முன்னாள் மேயர் மா.சுப்பிரமணியன், பகுதி செயலாளர் மகேஷ்குமார் தலைமையில் ஆயிரக்கணக்கானவர்கள் திரண்டு மறியலில் ஈடுபட்டனர். அவர்களை இணை கமிஷனர் சண்முகராஜேஸ்வரன் தலைமையிலான போலீசார் கைது செய்தனர்.

சென்னை மாநகராட்சி 8வது மண்டல அலுவலகம் முன்பு அண்ணா நகர் பகுதி செயலாளர் ராமலிங்கம் தலைமையில் மறியல் போராட்டம் நடந்தது. தேனாம்பேட்டை டிஎம்எஸ் அலுவலகம் எதிரில் ஆயிரம் விளக்கு பகுதி சார்பில் மா.பா.அன்புதுரை தலைமையில் திமுகவினர் திரண்டு அண்ணாசாலையில் மறியலில் ஈடுபட்டனர். கோடம்பாக்கம் ஆற்காடு சாலையில் உள்ள மாநகராட்சி மண்டல அலுவலகம் எதிரில் தி.நகர் பகுதி செயலாளர் ஏழுமலை, சா.கணேசன், கு.க.செல்வம் ஆகியோர் தலைமையிலும், மாம்பலம் - கிண்டி தாசில்தார் அலுவலகம் எதிரில் க.தனசேகரன் தலைமையிலும், மயிலாப்பூர் தாசில்தார் அலுவலகம் எதிரில் மயிலை பகுதி செயலாளர் த.வேலு தலைமையிலும் திருவான்மியூர் ஆர்டிஓ அலுவலகம் எதிரில் வேளச்சேரி பகுதி செயலாளர் மு.ரவி தலைமையிலும் போராட்டம் நடந்தது.

வடசென்னை ராயபுரம் மாநகராட்சி 5வது மண்டல அலுவலகம் எதிரில் மறியலில் ஈடுபட்ட திமுக துணை பொதுச் செயலாளர் சற்குணபாண்டியன், முன்னாள் எம்எல்ஏ மதிவாணன், கட்பீஸ் பழனி உள்ளிட்ட ஏராளமானோர் கைதாகினர். வியாசர்பாடியில் உள்ள தமிழ்நாடு குடிசை மாற்று வாரிய செயற் பொறியாளர் அலுவலகம் அருகே ஜெயராமன், மாவட்ட பொறுப்பாளர் ஆர்.டி.சேகர், மா.நெடுமாறன் தலைமையில் போராட்டம் நடந்தது.

தண்டையார்பேட்டை மாநகராட்சி 4வது மண்டல அலுவலகம் எதிரே டன்லப் ரவி, முன்னாள் எம்எல்ஏ சேகர்பாபு தலைமையிலும், பெரம்பூர் - புரசைவாக்கம் தாசில்தார் அலுவலகம் எதிரே செ.தமிழ்வேந்தன், முன்னாள் எம்எல்ஏ செங்கை சிவம் தலைமையிலும், சென்னை கலெக்டர் அலுவலகம் முன்பு மணிவேலன், எல்.பலராமன் தலைமையிலும் மறியல் நடந்தது.

நேரு விளையாட்டு அரங்கம் அருகே ஏகப்பன், தேவராசன் தலைமையிலும் அயன்புரம் மத்திய வட்டார போக்குவரத்து அலுவலகம் அருகே பகுதி செயலாளர் சதீஷ்குமார், கோ.சிட்டிபாபு தலைமையிலும் நூற்றுக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். சென்னையில் 16 இடங்களில் நடந்த மறியலில் பல்லாயிரக்கணக்கானோர் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்கள் அனைவரும் அந்தந்த பகுதியில் உள்ள தனியார் மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர்

கருத்துகள் இல்லை: