புதன், 4 ஜூலை, 2012

நித்யானந்தா சிஷ்யைகளுக்கு நேற்றிரவு சாய முடியாமல் ஏற்பட்ட சங்கடம்!


Viruvirupu.com
 காத்திருந்த சிஷ்யைகள், என்மீது சாய முடியவில்லை என வருந்த வேண்டாம். வெளிப்படையாக சாய முடியாத வகையில் நிலைமை உள்ளது.
நித்தியானந்தாவின் பவுர்ணமி லீலைகள், அவரது பக்தகோடிகளிடம் மிகப் பிரபலம். பவுர்ணமி இரவுகளில், ‘சத்சங்கம்’ என்ற பெயரில் விடியவிடிய அருள் வழங்கப்படும். நேற்று பவுர்ணமி என்பதால், பக்தர்களுக்கு திருவண்ணாமலையில் உள்ள நித்தி ஆச்ரமத்தில் அருள் சப்ளை நடைபெற்றது.
சமீப காலமாக பல சர்ச்சைகளில் சிக்கியுள்ளார் நம்ம மதுரை ஆதீனத்தின் இளையவர். இதனால், மீடியாவின் கவனம் முழுவதும் நித்தியின் லீலைகளை சுற்றிச் சுற்றி வருவது, இவருக்கு இடைஞ்சலை ஏற்படுத்தியுள்ளது. நேற்று அது பற்றி தமது சத்சங்கத்தில் கூறினார் சுவாமிகள்.

முன்பெல்லாம், பவுர்ணமிகளில் நித்தியின் சிஷ்யைகளுக்கு அவர் மீது ‘சாயும்’ பாக்கியம் கிட்டுவது வழக்கம். நித்யானந்தா சிஷ்யைகளை தம்மீது சாயவைத்து, அருள்வாக்கு ஓதி, புனிதமாக்கும் திருப்பணி அது என்று ஆச்ரமத்தில் விளக்கம் கொடுக்கிறார்கள்.
“தற்போதெல்லாம் மீடியாக்கள் கவனம் எம்மீது உள்ளதால், சிஷ்யைகளின் ஆவலை பூர்த்தி செய்ய முடியவில்லை. அவர்களை பப்ளிக்கில் எம்மீது சாய வைக்க முடியவில்லை” என்று மனவருத்தம் தெரிவித்து பேசினார் நித்தி.
நேற்றிரவு சாயும் நிகழ்வு நடைபெறும் என்ற எதிர்பார்ப்பில் திருவண்ணாமலைக்கு அவரது சிஷ்யர்கள், சிஷ்யைகள் அதிகளவில் வந்திருந்தனர். நடிகை மாளவிகா அம்மையார் உட்பட சிஷ்யைகள் பலர் சாயத் தயாராக வந்திருந்தனர். பிரதம சிஷ்யைகளில் ஒருவரான ரஞ்சிதா அம்மையாரைக் காணவில்லை.
அவர்தான் சுவாமிகள்மீது ஏற்கனவே சாய்ந்து விட்டதால், அதிக ஆர்வம் காட்டவில்லையோ, என்னவோ.
நேற்று பேசிய நித்யானந்தா, “என் சீடர்களுக்கு இது முக்கியமான தருணம். இன்றைய தினத்துக்காக காத்திருந்த சிஷ்யைகள், என்மீது சாய முடியவில்லை என வருந்த வேண்டாம். வெளிப்படையாக சாய முடியாத வகையில் நிலைமை உள்ளது. பத்திரிகைக்காரர்கள் இங்கே சுற்றிக் கொண்டிருப்பதால், சிலவற்றை தியாகம் செய்ய வேண்டியுள்ளது” என்றார்.
சிம்மாசனம் போன்ற இருக்கையில் நித்யானந்தா அமர்ந்திருந்தார். சீடர்கள் அவருக்கு தங்க நகைகளை அணிவித்தனர். கூடை கூடையாக மலர்கள் அவரது தலையில் கொட்டப்பட்டன. அதன்பின், சாய வந்திருந்த சிஷ்யைகளுக்கு, தலையில் கை வைத்து அருள் பாலித்து அனுப்பி விட்டார்.
மதுரை மூத்த ஆதீனத்தையும் பவுர்ணமி நிகழ்வில் காண முடியவில்லை.
மூத்த ஆதீனம் இப்போதெல்லாம், தமது தலையில் தாமே கைவைத்த நிலையில் இருப்பதால், சிஷ்யைகளின் தலையில் நித்தி கை வைத்ததை காண, மதுரையில் இருந்து வரவில்லை

கருத்துகள் இல்லை: