செவ்வாய், 3 ஜூலை, 2012

உள்ளாட்சி துறையில் தலை விரித்தாடும் லஞ்சம்

உள்ளாட்சி துறையில், அதிகாரிகள் பணி மாற்றம் முதல், சிறு சிறு வேலைகளுக்கும், அதிகாரிகளிடம் இருந்தே கட்டாயமாக லஞ்சம் வாங்கப்படுவதால், அதிகாரிகள் மத்தியில், பெரும் கலக்கம் ஏற்பட்டு உள்ளது.பணம் பெற்று வேலைகளை செய்வதால், அடிமட்டத்திலிருந்து மேல்மட்டம் வரை நடக்கும் முறைகேடுகளை, தட்டிக் கேட்க முடியாமல், மூத்த அதிகாரிகள் திணறி வருகின்றனர்.பணிகளுக்கான லஞ்சத் தொகையும் அதிகரித்து உள்ளதால், "இந்த ஆட்சியை விட, கடந்த ஆட்சியில் லஞ்சம் குறைவாகத் தான் இருந்தது' என, ஒப்பந்ததாரர்கள் குமுறத் துவங்கி உள்ளனர்.
அதிகாரிகள் குமுறல்:மாநிலத்தில் உள்ள 10 மாநகராட்சிகளில், சென்னை மற்றும் தூத்துக்குடி மாநகராட்சிகளில் மட்டுமே, ஐ.ஏ.எஸ்., அதிகாரிகள், கமிஷனர்களாக உள்ளனர்.கடந்த ஆட்சியின் போது, மாநகராட்சிகளில், ஐ.ஏ.ஏஸ்., அதிகாரிகளை நியமிக்காததால், பணிகளில் முறைகேடுகள் நடப்பதாக, அ.தி.மு.க.,வினர் குற்றம் சாட்டினர். ஆனால், தற்போது, தி.மு.க., பின்பற்றிய அதே நடைமுறையை, அ.தி.மு.க.,வும் கடைபிடித்து வருகிறது.
தற்போது, பல்வேறு விஷயங்களுக்கு, அதிகாரிகள் கொடுக்க வேண்டிய லஞ்சம் மற்றும் மாதந்தோறும் கட்ட வேண்டிய, "கப்பம்' என, லஞ்ச நிலவரம் கட்டுக்கடங்காமல் உள்ளதாக, துறை அதிகாரிகள் குமுறுகின்றனர்.


அதிகாரிகள் தரப்பில் வைக்கப்படும் புகார் பட்டியல்:
*மாநகராட்சிகளில், கமிஷனர்களை நியமிக்க, ஒரு கோடி ரூபாய் வரை பணம் பெறப்படுகிறது.
*உள்ளாட்சி துறையில் இருந்து, அயல் பணிக்கு அனுப்பப்பட்ட அதிகாரியை திரும்பப் பெற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டும், அவரிடம் சில லட்சங்கள் பெறப்பட்ட பிறகே, பணி மாறுதல் உத்தரவு வழங்கப்பட்டு உள்ளது.
* சென்னையில், கடந்த ஆட்சியின் போது, பாலங்கள் கட்டியதில் முறைகேடு நடந்ததாக குற்றம் சாட்டப்பட்ட அதிகாரிக்கு, முறைகேடுகள் தொடர்பான குற்றச்சாட்டுகளை திரும்பப் பெற்று, பதவி உயர்வு அளிக்கப்பட்டு உள்ளது. இதற்கு, 60 லட்ச ரூபாய் வரை, பணம் கைமாறி உள்ளது.
*மாநகராட்சிகளை போலவே, சென்னையை சுற்றியுள்ள நகராட்சிகளில், கமிஷனர்களை நியமிக்கவும், பணம் பெறப்பட்டு உள்ளது.
*பத்து ஆண்டுகளுக்கும் மேலாகவே, சென்னையை சுற்றியுள்ள தாம்பரம், ஆவடி மற்றும் மாநகராட்சியில் இணைக்கப்பட்ட பகுதிகளில், மண்டல உதவி கமிஷனர் உள்ளிட்ட பதவிகளுக்கும், பணம் பெறப்பட்டு உள்ளது.
*தி.மு.க., ஆட்சியின் போது, உள்ளாட்சி அமைப்புகளில் நியமிக்கப்பட்ட அதிகாரிகள், தொடர்ந்து அந்த பதவிகளில் நீடிக்க, பணம் அளித்துள்ளனர்.
* இது தவிர, மாதந்தோறும், மாநகராட்சிகள், ஐந்து லட்ச ரூபாய் வரையும்; நகராட்சிகள், இரண்டு முதல், மூன்று லட்ச ரூபாய் வரையும், அவற்றின் நிலைகளுக்கு ஏற்ப பணம் அளிக்கவும், மறைமுகமாக உத்தரவிடப்பட்டு உள்ளது.

கொடுத்த பணத்தை...:இதுகுறித்து, பெயர் வெளியிட விரும்பாத உள்ளாட்சி துறை உயர் அதிகாரி ஒருவர் கூறியதாவது:பணி இட மாறுதல்களுக்கு, உள்ளாட்சி துறை அமைச்சர் அலுவலகத்திலிருந்தே பணம் கேட்கப்படுகிறது. கொடுத்தால் மட்டுமே, மாறுதல் உத்தரவுகள் அளிக்கப்படுகின்றன. கடந்த தி.மு.க., ஆட்சியில், பணி மாறுதல்களுக்கு, இந்த அளவில் பணம் வாங்கவில்லை.லட்சம் ரூபாய் முதல், ஒரு கோடி ரூபாய் வரை பணம் கொடுத்து, பணி மாறுதல்களைப் பெறும்போது, கொடுத்த பணத்தை திரும்ப எடுப்பதற்காக, உள்ளாட்சி அமைப்புகளில் செய்யப்படும் அனைத்துப் பணிகளிலும், கமிஷன் அடிப்படையில், பணம் வாங்க வேண்டி உள்ளது.வீடு கட்ட அனுமதி அளித்தல் போன்ற அடிப்படை பணிகளுக்கு எல்லாம், பொதுமக்களிடம் பணம் கேட்க வேண்டி உள்ளது. இதனால், நிர்வாகத்தை செம்மையாக நடத்த முடியவில்லை. அமைச்சர் அலுவலகம் வரை கொடுக்க வேண்டும் என்பதற்காக, எதைப் பற்றியும் கவலையில்லாமல், பணம் வாங்கப்படுகிறது.இவ்வாறு அவர் கூறினார்.

15 சதவீதம்!ஒப்பந்ததாரர்களுக்கு டெண்டர் விடப்பட்டு, பணிகளை ஒதுக்கும்போது, பணம் பெற்ற பின்னரே, பணி ஆணைகள் வழங்கப்படுவதாக, ஒப்பந்ததாரர்கள் புகார் தெரிவிக்கின்றனர். பணி ஆணை பெறும் முன்பே பணத்தை அளிப்பதால், பணியின் தரத்தை, அதிகாரிகளால் கண்காணிக்க முடிவதில்லை.

இதுகுறித்து, சென்னையை சேர்ந்த ஒப்பந்ததாரர் ஒருவர் கூறும்போது, ""கடந்த ஆட்சியில், பணிக்கு, 5 சதவீதம் பணம் வாங்கப்பட்டது. இதில், இரண்டு சதவீதத்தை பணி நடக்கும்போதும், பணி முடிந்து ஒப்பந்தத் தொகையை பெறும்போது, மீதமுள்ள மூன்று சதவீதத்தையும் அளிப்போம். இதனால், எங்களுக்கு நஷ்டம் ஏற்படவில்லை. ஆனால், இப்போது, 10 முதல், 15 சதவீதம் அளிக்கும்போது, நஷ்டம் ஏற்படாமல் இருக்க, பணியில் சமரசம் செய்ய வேண்டி உள்ளது,'' என்றார்.

இது வேறு கணக்கு:ஒப்பந்ததாரர்களிடம் பெறப்படும் கமிஷனில், உள்ளாட்சி அமைப்பின் கவுன்சிலர்களுக்கும், பங்கு அளிக்கப்பட்டு வந்தது. இப்போது, கவுன்சிலர்களுக்கு கொடுக்காமல் இருப்பதால், கவுன்சிலர்கள், தங்கள் இஷ்டம் போல், "கை' நீட்ட ஆரம்பித்து விட்டனர். ஒருபுறம், பணி மாறுதலுக்கு கொடுத்த பணத்தை எடுக்க, அதிகாரிகள் செயல்பட, மற்றொரு புறம், தேர்தலில் செலவு செய்த காசை பார்க்க, கவுன்சிலர்கள் வசூல் வேட்டையைத் துவக்கி உள்ளனர்.இதுமட்டும் அல்லாமல், உள்ளாட்சி துறைகளோடு தொடர்புடைய, குடிநீர் வடிகால் வாரியம், சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் போன்ற துறைகளிலும், இதே நிலை தான் நீடிக்கிறது.சென்னை கவுன்சிலர்களை அடக்க, சாட்டையை சுழற்றிய முதல்வர், அதிகாரிகள் மட்டத்தில் நடக்கும் லஞ்ச வேட்டையை தடுக்க, என்ன செய்யப் போகிறார் என்ற கேள்வி எழுந்து உள்ளது.

- நமது நிருபர் -

கருத்துகள் இல்லை: