சனி, 7 ஜூலை, 2012

Akilesh Yadav மேட்டுக்குடியின் ‘கருணை’ அரசியல்!

அகிலேஷ் யாதவ்
ஜூலை 3-ம் தேதி உத்தர பிரதேசத்தின் முதல் அமைச்சர் அகிலேஷ் யாதவ், மாநிலத்தின் சட்ட மன்ற உறுப்பினர்கள் 20 லட்சம் ரூபாய் வரை மதிப்புள்ள கார்களை வாங்கிக் கொள்ளலாம் என்று சட்டசபையில் அறிவித்தார். அதற்கு சட்ட மன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியை பயன்படுத்திக் கொள்ளலாம்.  இதன் மூலம் அவரது கட்சியின் முக்கியமான தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றி விட்டதாக சொன்னார்.
ஊடகங்களில் பெருத்த எதிர்ப்பு எழுந்ததைத் தொடர்ந்து அடுத்த நாளே அந்த உத்தரவை அவர் திரும்பப் பெற்றுக் கொண்டார். நாம் கவனிக்க வேண்டியது இத்தகைய திட்டத்தை அறிவிப்பதற்கான அரசியல் பின்னணியும் சூழலும்தான்.
மனித வள மேம்பாட்டு குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவின் 35 மாநிலங்களில்  உத்தர பிரதேசம்  34வது இடத்தில் இருக்கிறது (புனிதர் நிதீஷ் குமார் ஆளும் பீகார்தான் அந்த கடைசி இடத்தைப் பிடித்திருக்கிறது). உலக நாடுகளின் வரிசையில் ஒப்பிட்டால் உத்தர பிரதேசம் கானா, காங்கோ, லாவோஸ், கென்யா, பாகிஸ்தான், பங்களாதேஷ் ஆகிய நாடுகளை விட பின் தங்கியிருக்கிறது.

அந்த மாநிலத்தில் குழந்தைப் பேறின் போது இறக்கும் பெண்களின் வீதம் ஏற்றுக் கொள்ள முடியாத அளவுக்கு அதிகமாக (தமிழ் நாட்டை விட 3 மடங்கு, சீனாவை விட சுமார் 8 மடங்கு) இருக்கிறது. வசிக்கும் மக்களில் 30% (சுமார் ஆறு கோடி) பேருக்கு எழுதப் படிக்கத் தெரியாது. மாநிலத்தின் புண்டல்கண்ட் பகுதியில் விவசாயிகள் தற்கொலை செய்து கொள்கிறார்கள். 20 கோடி பேரில் 8 கோடி பேர் வறுமைக் கோட்டிற்கு கீழ் வசிக்கிறார்கள். மாநில தலைநகரான லக்னோவில் 8 மணி நேரமும், பிற நகரங்களில் 10 மணி நேரம் வரையிலும், கிராமப் புறங்களில் 18-19 மணி நேரம் வரையிலும் மின்வெட்டு செய்யப்படுகிறது.
இத்தகைய கடுமையான வாழ்க்கைப் போராட்டத்தை எதிர் கொண்டிருக்கும் மக்களுடைய பணத்திலிருந்துதான் அவர்களின் ‘பிரதிநிதி’களான சட்ட மன்ற உறுப்பினர்கள் 20 லட்சம் ரூபாய் வரை கார் வாங்க செலவிடலாம் என்று திட்டமிடப்பட்டது.  அனைத்து உறுப்பினர்களும் இந்த திட்டத்தை பயன்படுத்திக் கொண்டிருந்தால் சுமார் ரூ 80 கோடி மக்கள் வரிப்பணம் ஆடம்பர கார்களை வாங்குவதில் செலவிடப்பட்டிருக்கும். இந்தப் பணத்தைக் கொண்டு 400 புதிய பேருந்துகள் வாங்கலாம், 260 ஆரம்ப சுகாதார நிலையங்கள் அமைக்கலாம், 250 மருத்துவமனைகளுக்குத் தேவையான பரிசோதனை கருவிகளை கொடுக்கலாம், 4000 மாணவர்களுக்கு மாதம் ரூ 2000 வீதம் கல்வி உதவித் தொகை அளிக்கலாம் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
அகிலேஷ் யாதவ், அவரது தந்தை முலாயம்சிங் யாதவ்(ஆரம்பத்தில் மட்டும்) போன்று, கட்சி அரசியலில் கீழ் மட்டத்தில் இருந்து வளர்ந்து, தொண்டர்களோடு கலந்து பழகி, சாதாரண மக்களோடு உறவாடி முதலமைச்சர் ஆனவர் இல்லை. அவரது கட்சியின் சட்ட மன்ற உறுப்பினர்களில் 62% பேர் (224 பேரில் 140 பேர்) கோடீஸ்வரர்கள் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இவர்களுக்கு சாதாரண மக்களின் வாழ்க்கையைப் பற்றி எந்த விதமான அக்கறையும் அறிவும் இருப்பதில்லை.
குளிரூட்டப்பட்ட அறைகளிலும், சொகுசு கார்களிலும், மடிக்கணினியிலும் உலகம் அடங்கியிருக்கிறது என்று கற்பனையில் மிதக்கும் இவர்கள்தான் 20 லட்ச ரூபாய் கார்களை வாங்க அரசு பணத்தை செலவழிக்க ஒப்புதல் அளிக்கிறார்கள். அத்தகைய கார்களில் போவதற்கான சாலைகள் கூட உத்தர பிரதேசத்தின் பல பகுதிகளில் இல்லை. இருக்கும் சாலைகளில் 49% மட்டுமே தார் போடப்பட்டவை, சுமார் 37% போக்குவரத்துக்கு முறையான சாலைகளே கிடையாது. எம்எல்ஏக்கள் கார்களில் போனால் பெரும் பகுதி தொகுதி மக்களை போய்ச் சேரக் கூட முடியாது. வார இறுதியில் தில்லிக்குப் போய் பார்ட்டி நடத்துவதற்கு வேண்டுமானால் கார்களை பயன்படுத்தலாம்.
உத்தர பிரதேசத்தின் சராசரி தனிநபர் ஆண்டு வருமானம் ரூ 26,000. உத்தர பிரதேசத்தைச் சேர்ந்த சராசரி குடிமகன் 80 ஆண்டுகளுக்கு உழைத்தால்தான் 20 லட்சம் ரூபாயை சம்பாதிக்க முடியும்.
மக்கள் பிரநிதிகள் என்ற பெயரில் ஆட்சியில் இருக்கும் ஆளும் வர்க்க கும்பல்கள் மக்களை மேலும் மேலும் சுரண்டி கொழுப்பதில்தான் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார்கள். இது உத்தர பிரதேசத்திற்கு மட்டுமின்றி அனைத்து மாநிலங்களுக்கும் மத்திய அரசுக்கும் பொருந்தும்.
________________________________________________
- அப்துல்

கருத்துகள் இல்லை: