வியாழன், 5 ஜூலை, 2012

வரலாறு காணாத வெற்றி ஜெயித்தது திமுகதான்...!

 Dmk Has Some Reasons Smile
சென்னை: திமுகவின் சிறை நிரப்பும் போராட்டம் நிச்சயம் அதிமுக அரசுக்கு பெருத்த டென்ஷனை ஏற்படுத்தி விட்டது உண்மையே. இந்தப் போராட்டத்தில் திமுகதான் கண்டிப்பாக ஜெயித்துள்ளது என்று கூறலாம்- 
உண்மையிலேயே சிறைக்குப் போகாவிட்டாலும் கூட.
அதிமுக அரசு ஆட்சிக்கு வந்த நாள் முதல் தினசரி திமுகவினர் மீது நில அபகரிப்பு உள்ளிட்ட வழக்குகளைப் போட்டு வருவதாக திமுகவினர் குற்றம் சாட்டுகிறார்கள். கடைசியில் வீரபாண்டி ஆறுமுகம் மீது குண்டர் சட்டத்தை அதிமுக அரசு பிரயோகித்தபோது திமுகவில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டு விட்டது. இதை இப்படியே வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்தால் தொண்டர்கள் சோர்ந்து போய் விடுவார்கள். நமது எதிர்ப்பை ஏதாவது ஒரு விதத்தில் காட்ட வேண்டும் என்று அவர்கள் கோரிக்கை வைத்தனர் தலைமைக்கு.
இதையடுத்து கூட்டப்பட்ட திமுக செயற்குழுவில் பல்வேறு வகையான போராட்டங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இறுதியில் மிகப் பெரிய அளவில் சிறை நிரப்பும் போராட்டத்தை நடத்த தீர்மானிக்கப்பட்டது.
ஆனால் இந்தப் போராட்டத்திற்கு திமுக தொண்டர்கள் ஆதரவு தர மாட்டார்கள், தலைவர்கள் ஜாலியாக வெளியே இருக்க தாங்கள் மட்டும் எப்படி சிறையில் அடைபடுவது, அதுவும் ஜெயலலிதாவை நம்பி ஜெயிலுக்குப் போனால் என்ன நடக்குமோ என்றெல்லாம் திமுகவினர் தயங்குவதாக தகவல்கள் வெளியாகின.

இதையடுத்து நேரடியாக களம் இறங்கினார் கருணாநிதி. எந்த ஒரு போராட்டத்திற்கும் ஒரு அறிக்கையோடு நின்று விடும் வழக்கம் கொண்ட கருணாநிதி இந்த முறை தொடர்ந்து சிறை நிரப்பும் போராட்டம் தொடர்பாக பொதுக் கூட்டங்கள் போட்டு பேசினார், அறிக்கை விட்டார், பேட்டி கொடுத்தார்.
மேலும், இப்போராட்டத்திற்கு வந்தால்தான் கட்சியில் எதிர்காலத்தில் பதவி உள்ளிட்டவற்றை எதிர்பார்க்க முடியும் என்ற தகவலும் கட்சியினரிடையே பரப்பப்பட்டது.
முன்பெல்லாம் கருணாநிதி ஒரு அறிக்கை விட்டாலே உடன் பிறப்புக்கள் ஓடி வந்துவிடுவர். இப்போது அவர்களை போராட்டத்துக்குக் கொண்டு வரவே திமுக ஒரு போராட்டம் நடத்த வேண்டிய நிலை வந்துவிட்டது கொடுமை தான்.
இதற்கிடையே, அதிமுக அரசும், காவல்துறை மூலம் போராட்டத்தை ஒடுக்க பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகின. முன்னெச்ச்சரிக்கை நடவடிக்கையாக கைது நடவடிக்கை பாயலாம் என்ற எதிர்பார்ப்பும் எழுந்தது.
இதையடுத்து முன்கூட்டியே உயர்நீதிமன்றத்தை அணுகியது திமுக. போராட்டத்தை நசுக்க முன்கூட்டியே கைது செய்யக் கூடாது என்று அது கோரியது. இப்படி திமுகவும் தன் பக்கம் காய் நகர்த்தியது.
இப்படி மாறி மாறி நடந்து வந்த நிகழ்வுகள் நேற்று கிளைமேக்ஸை எட்டின. திமுகவின் நேற்றைய போராட்டத்திற்கு யாருமே எதிர்பாராத அளவுக்கு ஆதரவு கிடைத்தது. இதை திமுகவே கூட எதிர்பார்க்கவில்லை.
50,000 பேர் வரை திரள்வார்கள் என்றுதான் திமுக தரப்பில் எதிர்பார்த்திருந்தனராம். அந்த அளவுக்குக் கூட வராது என்பது உளவுத் துறையின் கணிப்பாக இருந்தது. ஆனால் நேற்று கூடிய கூட்டத்தைப் பார்த்து திமுக தலைவர் கருணாநிதிக்கு வாயெல்லாம் சிரிப்பாகி விட்டதாம். படு உற்சாகமாக இருந்தாராம் கருணாநிதி. இது குறித்து செய்தியாளர்கள் கேட்டபோது எதிர்பார்த்ததை விட அதிகமாகவே ஆதரவு காணப்படுகிறது என்று சிரித்தபடி கூறினார் கருணாநிதி.
போலீஸார் கணக்குப்படி 70,000 பேர் வரை கைது செய்ததாக கூறினார்கள். ஆனால் ஸ்டாலினோ,2 லட்சம் பேர் கூடினார்கள் என்று கூறினார். அவர் சொல்வதே சரியாக இருக்கும் என்று தெரிகிறது. காரணம், பல்வேறு ஊர்களில் நேற்று காணப்பட்ட நிலவரத்தைப் பார்த்தபோது அப்படித்தான் இருந்திருக்கும் என்றே நம்பத் தோன்றுகிறது.
வடிவேலு பட பாணியில் ஜெயிலுக்குப் போறேன், ஜெயிலுக்குப் போறேன் என்று படு குஷியாக திமுக தொண்டர்கள் சாரை சாரையாக கிளம்பியது செம ஆச்சரியமான விஷயம். கருணாநிதி கூறியிருந்தபடி ஆளுக்கு ரெண்டு செட் டிரஸ்ஸுடன் மஞ்சப் பையை கையில் பிடித்துக் கொண்டு திமுகவினர் ஏதோ ஏற்காடு, ஏலகிரிக்கு பிக்னிக் போவது போல கிளம்பி வந்து விட்டனர்.
இந்த இடத்தில்தான் திமுகவினர் தங்களது கட்சி உணர்வை வெளிப்படுத்தியுள்ளனர். தங்களைப் பற்றித் தப்புக் கணக்குப் போட்டதை அதிமுக அரசுக்கும், உளவுத் துறைக்கும் நேற்று அவர்கள் உணர்த்தி விட்டதாகவே கருதப்படுகிறது.
நிச்சயம் இந்தப் போராட்டம் திமுகவுக்கு சமீப காலத்தில் நடந்த ஒரு வரலாறு காணாத வெற்றிப் போராட்டம் என்பதில் சந்தேகமில்லை. ஆட்சியை இழந்த பெரும் சோகத்தில் இருந்து வரும் திமுகவினர் தங்களைத் தாங்களே தட்டிக் கொடுத்து கொள்ள ஒரு உற்சாக டானிக்காக இந்தப் போராட்டம் அமைந்து விட்டது.
மறுபக்கம், ஆட்சி, அதிகாரம் என அனைத்தும் கையில் இருந்தும் இந்தப் போராட்டத்தை முறியடிக்க முடியாமல் விழி பிதுங்கி நிற்கிறது அதிமுக அரசும், காவல்துறையும். முன்னெச்சரிக்கைக் கைது நடவடிக்கையை மேற்கொள்ள முடியாமல் போய் விட்டது, போராட்டத்தின்போது திமுகவினரை முரட்டுத்தனாக ஹேண்டில் செய்யவும் வழியில்லாமல் போய் விட்டது - காரணம் கூடிய கூட்டம். கைது செய்தவர்களை சிறையில் அடைக்கவும் முடியாமல் போய் விட்டது. கடைசியில் அத்தனை பேரையும் விடுவித்தாக வேண்டிய இக்கட்டான நிலைமை.
இப்படி திமுகவினருக்கு எந்த வகையிலும் பாதிப்பை ஏற்படுத்த முடியாமல் பத்திரமாக அனுப்பி வைக்க வேண்டிய நிலை காவல்துறைக்கு.
நேற்று தமிழ்நாடு பூராவும் திமுகவினரின் சிறை நிரப்பும் போராட்டம் குறித்த பேச்சுததான். இவ்வளவு பேர் சேர்ந்து விட்டார்களே என்று அத்தனை பேரும் ஆச்சரியத்துடன் இந்தப் போராட்டம் குறித்துப் பேசியதைக் காண முடிந்தது. ஒரு திமுக தொண்டரைக் கூட சிறையில் அடைக்காமல் அதிமுக அரசு விடுவித்ததையும் பலர் கேலியாக விமர்சித்ததையும் காண முடிந்தது.
மொத்தத்தில் எல்லாம் இருந்தும் நோ பீஸ் ஆப் மைன்ட் என்று சிவாஜி கணேசன் வசனம் பேசுவது போல கையில் எல்லாம் இருந்தும், ஒன்றும் செய்ய முடியாமல், நேற்று அதிமுக அரசு படு டென்ஷனாக காணப்பட்டது. அதேசமயம், கையில் ஒன்றும் இல்லாவிட்டாலும் கூட படு தெம்பாக திமுக காணப்பட்டது.
வெற்றி என்னவோ திமுகவுக்குத்தான்..அந்தப் பக்கம் எந்தத் 'தலை' உருளப் போகுதோ!

கருத்துகள் இல்லை: