வியாழன், 5 ஜூலை, 2012

வேதாரண்யம்..காதல்ஜோடிகளை கொல்லும் காட்டுமிராண்டிகள்

காதல் ஜோடி கொடூர கொலை! வேதாரண்யம் அருகே நெஞ்சைப் பதற வைக்கும் சம்பவம்! 
 நாகை மாவட்டம், வேதாரண்யத்தை அடுத்த வாய்மேடு போலீஸ் சரகம், சேனாதிக்காடு பகுதியைச் சேர்ந்தவர், நடராஜன். இவரது மகள் கரிஷ்மா (வயது 19). பி.ஏ. பட்டதாரி. ஆதனூர் கிராமத்தைச் சேர்ந்த ரெத்தினம் மகன் சுதாகர் (21). பெயிண்டராக வேலை பார்த்து வந்தார்.
ரெத்தினம் குடும்பத்துடன் சமீபத்தில் சேனாதிக்காட்டிற்கு குடிபெயர்ந்தார். அப்போது கரிஷ்மாவிற்கும், சுதாகருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது. இது நாளடைவில் காதலாக மாறியது. அவர்கள் இருவரும் கடந்த ஒரு ஆண்டு காலமாக உயிருக்கு உயிராக காதலித்து வந்தனர்.
இந்த நிலையில், அவர்களின் காதல் விவகாரம் தெரிய வந்ததால், இருவருடைய பெற்றோரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அத்துடன் ஒருவரையொருவர் சந்திக்கவும் தடைவிதித்தனர். பெற்றோர் கண்டித்ததால் கரிஷ்மாவுடனான தனது காதல் தோல்வியில் முடிந்து விடுமோ? என்று சுதாகர் பயந்தார்.
இதனால் பெற்றோர் எதிர்ப்பை மீறி அவரை திருமணம் செய்து கொள்ள சுதாகர் முடிவு செய்தார். அதன்படி, கடந்த 28-ந் தேதி சுதாகர், கரிஷ்மாவை அழைத்துக்கொண்டு ஊரை விட்டு சென்று விட்டார். இதனால் அவர்களுடைய பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.
அவர்களை பல இடங்களிலும் தேடிப்பார்த்தும், எங்கு சென்றார்கள் என்ற தகவல் தெரியாமல் இருந்தது. இதற்கிடையில் சுதாகர் நேற்று கரிஷ்மாவின் அண்ணன் தங்கவேலுவை (25) தொலைபேசியில் தொடர்பு கொண்டார். அப்போது, கரிஷ்மா தற்போது கர்ப்பமாக இருப்பதாகவும், தங்கள் காதலை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் சுதாகர் தெரிவித்தார்.

அதற்கு தங்கவேல், உடனடியாக இருவரும் ஊருக்கு வாருங்கள் பேசிக்கொள்ளலாம் என்று அழைத்ததால், ஊருக்கு திரும்ப காதல் ஜோடி மகிழ்ச்சியுடன் சம்மதம் தெரிவித்தனர். திருத்துறைப்பூண்டியில் உள்ள தியேட்டர் ஒன்றில் சினிமா பார்த்துக்கொண்டிருந்த காதல் ஜோடியினர் படம் முடிந்ததும் நேற்று மாலை சேனாதிகாட்டுக்கு சென்றனர்.

அங்கு தங்கவேலுவை காதல் ஜோடியினர் சந்தித்தனர். தங்கவேல் வீடு அருகே தாணிக்கோட்டகம் செல்லும் வழியில் உள்ள பகவான் ஆலமரத்தடியில் அமர்ந்து அவர்கள் பேசி கொண்டிருந்தனர். அப்போது தங்கவேலின் நண்பர் சசிகுமார் (21) என்பவரும் உடன் இருந்தார்.

அப்போது தங்கவேலின் நண்பர் சசிகுமார் (21) என்பவரும் உடன் இருந்தார். காதல் விவகாரம் தொடர்பாக அவர்கள் பேசிக்கொண்டிருந்த போது திடீரென கரிஷ்மாவின் அண்ணன் தங்கவேலுவிற்கும், சுதாகருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

இந்த தகராறு முற்றி அவர்களுக்கிடையே கைகலப்பு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த தங்கவேல், அவரது நண்பர் சசிகுமார் (21) ஆகியோர் அருகில் கிடந்த இரும்பு பைப்பை எடுத்து சுதாகரை சரமாரியாக தாக்கினார்கள்.
காதல்ஜோடிகளை கொல்லும் காட்டுமிராண்டிகள் 
தனது கண்முன்னாலேயே காதலன் தாக்கப்படுவதை கண்டு அதிர்ச்சி அடைந்த கரிஷ்மா அவர்களை தடுக்க முயன்றார். ஆனால் கரிஷ்மாவையும் அவர்கள் இருவரும் ஆவேசமாக தாக்கினார்கள். இதில் பலத்த காயம் அடைந்த சுதாகரும், கரிஷ்மாவும் நிலைகுலைந்து கீழே விழுந்தனர். சிறிது நேரத்தில் இருவரும் பரிதாபமாக இறந்தனர்.

கொலை நடந்ததும் தங்கவேலு, சசிகுமார் இருவரும் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். காதல் ஜோடியை ஊருக்கு வரவழைத்து கொடூரமாக கொலை செய்தது அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

தகவல் அறிந்ததும் வேதாரண்யம் துணை போலீஸ் சூப்பிரண்டு குணசேகரன், இன்ஸ்பெக்டர் (பொறுப்பு) பாலசுப்பிரமணியன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். இறந்த காதல் ஜோடி இருவரின் உடல்களையும் கைப்பற்றி விசாரணை நடத்தினார்கள்.

காதல் ஜோடி இருவரும் ஒரே சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். ஆனால், கரிஷ்மாவுக்கு சுதாகர் சித்தப்பா உறவு முறையாக இருந்ததாலும், எதிர்ப்பை மீறி ஊரை விட்டு ஓடியதாலும், ஆத்திரத்தில் இந்த கொலை நடந்ததாக விசாரணையில் தெரிய வந்துள்ளது.

கொலை செய்யப்பட்ட காதல் ஜோடியின் உடல்களை போலீசார் கைப்பற்றி பரிசோதனைக்காக வேதாரண்யம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

போலீசார் வழக்குப்பதிவு செய்து கொலையாளிகளை தேடி வந்த நிலையில் தங்கவேலுவும், சசிகுமாரும் வாய்மேடு போலீஸ்நிலையத்தில் சரண் அடைந்தனர். அவர்களிடம் போலீசார் மேற்கொண்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.

கருத்துகள் இல்லை: