திங்கள், 2 ஜூலை, 2012

மர்ம சந்நியாசி – 7 யார் சொல்வது பொய் என்று நீதிபதி கண்டுபிடித்தாக வேண்டும்.

மேஜோ குமாருக்கு ஏற்பட்ட அறிகுறிகளை வைத்தும், ஏனைய மருத்துவர்களின் சாட்சியத்தை வைத்தும் மேஜோ குமாருக்கு என்ன நடந்தது என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.
‘மேஜோ குமார் முதலில் அஜீரணக் கோளாறால் அவதிப்பட்டிருக்கிறார். பின்னர் அவருக்குத் தாங்கமுடியாத வயிற்று வலி ஏற்பட்டிருக்கிறது. பின்னர் சம்பவம் நடந்த அன்று காலை மேஜோ குமார் வாந்தி எடுத்திருக்கிறார். அதைத் தொடர்ந்து அவருக்கு அடிக்கடி வயிற்றுப் போக்கு ஏற்பட்டிருக்கிறது. அதிகமாக நீர்ச் சத்து வெளியேறியதால் உடல் இயக்கம் பாதிக்கப்பட்டிருக்கிறது. ரத்தப் போக்கு ஏற்பட்டதால் உடல் தடுமாற்றம் ஏற்பட்டு, மேஜோ குமார் சுயநினைவை இழந்திருக்கிறார்.’
மேஜோ குமாருக்கு ஏன் வயிற்றுக் கடுப்பு ஏற்பட்டது?
ஒருவர் வயிற்றில் நச்சுப் பொருள் உட்புகுந்தால் வயிற்றுக் கடுப்பு ஏற்படும்.
நச்சுத்தன்மை கொண்டப் பொருட்களால் குடல் சுவர்கள் எரிச்சல் அடைந்து வீக்கமடையும். குடல் தீவிரஅதிர்ச்சிக்குள்ளான காரணத்தால்தான் ரத்தப் போக்கு ஏற்படும். கூடவே நரம்பு மண்டலம் அதீதமாகத் தூண்டப்படுவதால் தாங்க முடியாத வலி ஏற்படும். இந்த அறிகுறிகள் அனைத்தும் ஒருவருக்கு இருந்தால், அவர் நிச்சயமாக ஏதோ நச்சுத் தாக்குதலுக்கு ஆளாகியுள்ளார் என்று அர்த்தம்.
நச்சுப்பொருள் இயற்கையாக கிடைக்கக் கூடிய தாவர வகையைச் சேர்ந்ததாகவும் இருக்கலாம் அல்லது ரசாயனப் பொருளாகவும் இருக்கலாம்.
ஆஷு பாபு மேஜோ குமாருக்கு குடிக்கக் கொடுத்தது ஆர்ஸனிக் என்னும் நச்சுப் பொருள். ஆர்ஸனிக்கை உட்கொண்டதால்தான் மேஜோ குமாருக்கு மேற்சொன்ன பாதிப்புகளெல்லாம் ஏற்பட்டன.
ஆர்ஸனிக் ஒரு கொடிய நச்சுப் பொருள் என்றும், அதை ஒருவர் உட்கொண்டால் என்னென்ன விளைவுகளை ஏற்படுத்தும் என்ற விவரங்கள் Lyon’s Jurisprudence என்ற புத்தகத்தில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
டாக்டர் கால்வெர்ட் மற்றும் டாக்டர் நிப்பாரன் சந்திர சென் ஆகியோர் எழுதிக்கொடுத்த மருந்துச் சீட்டுகளில் நச்சுத் தன்மை கொண்ட மருந்தோ அல்லது பொருளோ இடம்பெறவில்லை. ஆஷு பாபு எழுதிக் கொடுத்த மருந்துச் சீட்டில் தான் நச்சுத் தன்மை கொண்ட பொருளைப் பற்றிய குறிப்பு இருந்திருக்கிறது.
மலேரியாவை குணப்படுத்தும் தன்மை இந்த மருந்துகளுக்கு இருந்தன. ஆனால், ஆர்ஸனிக்கை மட்டும் ஒரு குறிபிட்ட அளவுக்கு அதிகமாக உட்கொண்டால் அது வயிற்று எரிச்சலை ஏற்படுத்துவதோடு இல்லாமல், வயிற்றுப்போக்கையும் ஏற்படுத்தும். அளவு மீறினால் உயிரே போய்விடும்.
யாருக்காவது நஞ்சூட்ட வேண்டுமென்றால் விஷயம் அறிந்தவர்கள் ஆர்ஸனிக்கைத் தான் பயன்படுத்துவார்கள். அவர்கள் மருந்துக் கடைகளில் மறைமுகமாக ஆர்ஸனிக் வாங்க, மேற்சொன்னவாறு மருந்துச் சீட்டை தயார் செய்து (மருத்துவரிடம் பெற்று) எடுத்துச் செல்வார்கள்.
ஆஷூ பாபு  மருந்துச் சீட்டை தான் எழுதிக் கொடுக்கவில்லை என்று சாதித்தான். பின்னர் குட்டு வெளிப்பட்டவுடன் அந்தப் பழியை மற்றவர்கள் மீது போடப் பார்த்தான்.
மேஜோ குமாருக்கு சிகிச்சை அளிக்க எந்த மருத்துவரும் மே மாதம் 7 ஆம் தேதி டார்ஜிலிங் பங்களாவுக்கு அழைத்துவரப்படவில்லை. டாக்டர் கால்வெர்டும், நிப்பாரன் சந்திர சென்னும் மே மாதம் 8 ஆம் தேதியன்றுதான் மேஜோ குமாருக்கு சிகிச்சை அளித்தனர். டார்ஜிலிங்கில் உள்ள சிமித் ஸ்டேயின்ஸ்ட்ரீட் (Smith Stainstreet and Co) என்ற மருந்துக் கடையின் குறிப்பின் பஐ, ஆஷு தாஸ் குப்தாதான் (ஆஷு பாபு) சம்பந்தப்பட்ட மருந்துகளை மே மாதம் 7ஆம் தேதி அன்று வாங்கி இருக்கிறான். அதற்கான மருந்து விற்றப் பதிவேட்டில் ஆஷு தாஸ் குப்தாவின் கையெழுத்து இருந்தது.
டாக்டர் கால்வெர்டைப் போல ஆஷூ பாபுவும் நீதிமன்றத்தில் பொய் சாட்சி சொல்லியிருக்கிறான்.
நீதிபதி, மேஜோ குமார் Biliary Colic க்கால் இறக்கவில்லை என்று உறுதிபடுத்திக்கொண்ட பிறகு அடுத்த கேள்விக்குப் போனார். மேஜோ குமார் எப்பொழுது இறந்தார்? மாலையிலா அல்லது நள்ளிரவிலா? மேஜோ குமாருக்கு எப்பொழுது ஈமக்காரியம் நடைபெற்றது? மே மாதம் 8 ஆம் தேதி இரவிலா அல்லது மே மாதம் 9 ஆம் தேதி காலையிலா?
மே மாதம் 8 ஆம் தேதி மதியம், மேஜோ குமாரின் உடல் நிலை மோசமாகி இருக்கிறது என்ற செய்தியைத் தெரிவிக்க சத்திய பாபு ராஜ்பாரி அரண்மனைக்குத் தந்தி அனுப்பி இருக்கிறான். அந்தத் தந்தி மதியம் 3:10 மணிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அந்தத் தந்திக்கான பதில் பாரா குமாரிடமிருந்து மாலை 4: 45 மணி அளவில் டார்ஜிலிங்கில் கிடைத்தது. அதில் மேஜோ குமாரின் உடல் நிலை பற்றி கேள்விப்பட்டவுடன் மிகுந்த கவலைக்கு உள்ளாகியிருக்கிறோம். சிறந்த முறையில் மருத்துவ சிகிச்சை அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். உடல் நிலை குறித்து அவ்வப்போது தந்தி அனுப்புமாறு கேட்டுக் கொள்ளப்பட்டிருக்கிறது.
விசித்திரமான விஷயம் என்னவென்றால் டார்ஜிலிங்கிலிருந்து ராஜ்பாரிக்கு மேஜோ குமாரின் உடல் நிலை குறித்து சத்திய பாபு அடிக்கடி அனுப்பிய தந்திகள் பிபாவதியின் சார்பில் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டாலும், மேஜோ குமார் இறந்த செய்தியைக் குறிப்பிட்டு அனுப்பப்பட்ட தந்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை. ஏன் தாக்கல் செய்யவில்லை? அதை தாக்கல் செய்தால் மேஜோ குமார் எந்த நேரத்தில் இறந்தார் என்ற உண்மை வெளியாகிவிடும். அதனால் அந்த இரங்கல் தந்தி நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படவில்லை.
சந்நியாசியின் கூற்றின்படி, மே மாதம் 8 ஆம் தேதி இரவு மேஜோ குமாரின் உடல் சுடுகாட்டுக்கு கமர்ஷியல் சாலை வழியாக எடுத்துச் செல்லப்பட்டிருக்கிறது.
பிபாவதியின் கூற்றின் படி, மேஜோ குமார் மே மாதம் 8 ஆம் தேதியன்று நள்ளிரவில் இறந்தார். அவரது உடலை இடுகாட்டுக்கு எடுத்துச் சென்றது, மே மாதம் 9 ஆம் தேதி காலை. சுடுகாட்டுக்குச் சென்ற வழி, டார்ஜிலிங்கின் முக்கியமான தார்ன் சாலை. கமர்ஷியல் சாலை வழியாக இடுகாடு செல்வது குறைந்த தூரம். ஆனால் தார்ன் சாலை வழியாக சுடுகாட்டிற்குச் செல்வது அதிக தூரம் மற்றும் வளைந்தும், நெளிந்தும் செல்லும். தார்ன் சாலை வழியாக இடுகாடு செல்வதற்கு நிறைய நேரமாகும்.
இருதரப்பினர் சொல்வதில் யார் சொல்வது உண்மை?
மே மாதம் 9 ஆம் தேதியன்று தான், தார்ன் என்ற முக்கிய சாலை வழியாக சவ ஊர்வலம் சென்றதாக பிபாவதி தரப்பில் சொல்லப்பட்டது. அதை நிரூபிக்க அவர் தரப்பில் சுமார் 26 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். சந்நியாசியின் தரப்பில் 9 சாட்சிகள் விசாரிக்கப்பட்டனர். பிபாவதியின் 26 சாட்சிகளும் ஒரே மாதிரி சாட்சியம் அளிக்கவில்லை. ஒரு சாட்சி சொன்னதற்கும் இன்னொருவர் சொன்னதற்கும் நிறைய வேறுபாடுகள் இருந்தன. பிபாவதியின் மூன்று சாட்சிகள் மிகவும் தெள்ளத் தெளிவாக சவ ஊர்வலம் கமர்ஷியல் சாலை வழியாக சென்றது என்று பிபாவதியின் கூற்றுக்கு மாறாக சாட்சியம் சொன்னார்கள்.
மே மாதம் 9 ஆம் தேதியன்று, வங்காளத்தின் கவர்னர் மிண்டோ பிரபு டார்ஜிலிங்கிற்கு வந்துவிட்டார். பொதுவாக கோடை காலத்தின் வெயிலை தாங்கமாட்டாமல் மலைவாசம் செல்லும் ஆங்கிலேய கவர்னர்கள், கோடை காலம் முடியும் வரை அந்த வாசஸ்தலத்தில்தான் இருப்பார்கள். இந்தியாவில் ஆங்கிலேயர் காலத்தில், அந்தந்தப் பகுதிகளில் இருந்த கவர்னர்கள் அவரவர் ஆளுமைக்கு உட்பட்ட மலைவாசஸ்தலத்திற்குச் சென்றுவிடுவர். சென்னை மாகாண கவர்னர் ஊட்டிக்குச் சென்றுவிடுவார். பம்பாய் மாகாண கவர்னர் மகாபலேஷ்வருக்குச் சென்றுவிடுவார். பஞ்சாப் கவர்னர் சிம்லாவிற்குச் சென்றுவிடுவார். கோடை காலம் முடியும் வரை அரசாங்கமே மலைவாசஸ்தலங்களில்தான் நடைபெறும்.
டார்ஜிலிங்கைப் பொருத்த வரை அரசு தலைமைச் செயலகமாக செயல்பட்டது அங்குள்ள கச்சேரி பில்டிங்கில். இந்தக் கச்சேரி பில்டிங், டார்ஜிலிங்கின் முக்கிய சாலையில் பசாருக்கு எதிராக உள்ளது.
கவர்னர் டார்ஜிலிங்கிற்கு வந்ததால் அங்கு கெடுபிடி அதிகமாக இருந்தது. போதாத குறைக்கு சுதந்தரப் போராட்ட வீரர்கள் ஆங்கிலேயர்கள் மீதும், அரசு நிர்வாகத்தின் மீதும் தாக்குதல்கள் நடத்தி வந்தனர். அதுவும் வங்காளத்தில்தான் ஆங்கிலேயர்களுக்கு எதிரான வன்முறை அதிகமாக இருந்தது. அதனால் டார்ஜிலிங்கின் முக்கிய சாலைகளில் ஊர்வலங்கள் செல்ல காவல்துறை தடை விதித்திருந்தது.
எனவே நீதிபதி தன்னுடைய தீர்ப்பில், காவல்துறை முக்கிய சாலைகளில் ஊர்வலங்கள் செல்லத் தடை விதித்திருந்ததால் மேஜோ குமாரின் கடைசி ஊர்வலம் தார்ன் சாலை (டார்ஜிலிங்கில் உள்ள முக்கிய சாலைகளில் ஒன்று) வழியாக சென்றிருக்க வாய்ப்பில்லை என்று தெரிவித்தார்.
இடுகாட்டில் மேஜோ குமாருக்கு அந்திமக் காரியங்கள் செய்யும் பொழுது அங்கு புரோகிதர் யாரும் இல்லை. எந்தச் சடங்கும் செய்யப்படவில்லை. இறந்தவரின் முகத்தை அங்கு இருந்தவர்கள் ஒருவரும் பார்க்கவில்லை. இறந்தவரின் சடலம் முழுதும் துணியால் சுற்றப்பட்டிருந்தது. உடலை எரியூட்டுவதற்கு முன்னர் அவ்வுடல் குளிப்பாட்டப்படவில்லை. உடல் நெய்யால் அபிஷேகம் செய்யப்படவில்லை. சவ ஊர்வலத்தில் கலந்து கொண்டவர்கள் யாருக்கும் பிண்டம் கொடுக்கப்படவில்லை. முக்கன்னி செய்யப்படவில்லை – அதாவது சவத்தின் வாயில் நெருப்பிடுவது. சடலம் தீயூட்டப்பட்டு சாம்பலான பிறகு அதனுடைய அஸ்தி எடுத்துவரப்படவில்லை. இறந்தவர்களின் அஸ்தியை கங்கையில் கரைப்பது முக்கியமான சடங்கு. அதுவும் நடைபெறவில்லை.
எனவே மேஜோ குமார் இறந்து விட்டார் என்றோ, அவருடைய உடல்தான் எரியூட்டப்பட்டது என்றோ தீர்மானமாகச் சொல்ல முடியவில்லை. மேஜோ குமார் இறந்துவிட்டார் என்று பிபாவதியால் ஐயம் திரிபுர நிரூபிக்க முடியவில்லை என்று நீதிபதி தன்னுடைய தீர்ப்பில் வெளியிட்டார்.
0
சரி, மேஜோ குமார் சாகவில்லை என்றே வைத்துக்கொள்வோம். ஆனால் சந்நியாசிதான் மேஜோ குமார் என்று எப்படி முடிவுக்கு வருவது. சந்நியாசி வங்காளியே கிடையாது. அவர் ஒரு ஹிந்துஸ்தானி. எனவே நீதிபதி இப்பொழுது முடிவு செய்ய வேண்டியது சந்நியாசி வங்காளியா அல்லது ஹிந்துஸ்தானியா?
ஆங்கிலேயர்கள் ஆட்சியில் இந்திய துணைக் கண்டத்தின் வடபகுதியில் இமயமலையிலிருந்து விந்திய மலைக்கு உட்பட்ட பகுதிகள் ஹிந்துஸ்தான் என்று அழைக்கப்பட்டன. அங்கு வசித்து வந்த மக்கள் ஹிந்துஸ்தானிகள் என்று அழைக்கப்பட்டனர். ஆனால் வங்காளிகள் ஹிந்துஸ்தானியர்கள் இல்லை. மேஜோ குமார் வங்காளி. ஆனால் சந்நியாசி, அவர் பேச்சிலும் தோற்றத்திலும் ஹிந்துஸ்தானி போலக் காட்சியளித்தார். எனவே அவர் வங்காளியாக இருக்கமுடியாது, அதுவும் அவர் குறிப்பாக மேஜோ குமாராக இருக்கமுடியாது. அவர் ஒரு போலி என்று வாதிட்டார் பிபாவதியின் வழக்கறிஞர்.
சந்நியாசி தானே மேஜோ குமார் என்று எப்பொழுது தன்னை பறைசாற்றிக்கொண்டாரோ அப்போதிருந்தே சத்திய பாபு சுறுசுறுப்பாகிவிட்டான். சந்நியாசி மேஜோ குமாராக இருக்கமுடியாது என்பதற்கு என்னென்ன ஆதாரங்கள் தேவைப்பட்டனவோ அதை எல்லாம் செய்ய ஆரம்பித்தான்.
நாம் ஏற்கெனவே பார்த்தது போல், உயர்மட்டத்தில் உள்ள பல ஆங்கில அதிகாரிகளை சந்தித்த சத்திய பாபு, தன்னுடைய தங்கைக்கு (தனுக்கு) ஆதரவு தேடிக்கொண்டான்.
பின்னர் டார்ஜிலிங் சென்று தனக்குத் தேவையான சாட்சிகளை (பொய் சாட்சிகளை) திரட்டினான். இந்த சாட்சிகளெல்லாம் மேஜோ குமார் இறந்ததாகச் சொல்ல வேண்டும். மேஜோ குமார் உடல் தகனம் செய்யப்பட்டதாக சொல்ல வேண்டும். அதை அவர்கள் பார்த்ததாக சொல்லவேண்டும்.
இன்னொரு பக்கத்தில் சந்நியாசியும் அவரைச் சார்ந்தவர்களும், டாக்கா கலெக்டர் லிண்ட்சே- ஐ சந்தித்து சன்னியாசிதான் மேஜோ குமாரா என்று விசாரணை நடத்த வேண்டும் என்று மனு கொடுத்தனர்.
லிண்ட்சே விசாரணையைத் தொடங்குவதற்கு முன்னர் ஒரு காரியம் செய்தார். தன்னுடைய ஆளுமைக்கு உட்பட்ட ஒரு காவல்துறை ஆய்வாளரான மம்தாஜூதினை பஞ்சாபுக்கு அனுப்பி, சந்நியாசியைப் பற்றி உண்மையான விவரங்களை அறிந்து வரச் சொன்னார். அந்த ஆய்வாளருக்குத் துணையாக பாவல் ஜமீனின் காரியதரிசியான சுரேந்திர சக்ரவர்த்தியையும் அனுப்பிவைத்தார்.
உண்மையைக் கண்டறியும் இருவர் குழு, தாங்கள் டாக்காவிலிருந்து புறப்பட்டு சரியாக இரண்டு மாதம் கழித்து ஒரு அறிக்கையை பாவல் ஜமீனின் மேலாளருக்கு அனுப்பி வைத்தது. அந்த அறிக்கை வங்காள மொழியில் இருந்தது. அதை தயார் செய்தது ஜமீனின் காரியதரிசி சுரேந்திர சக்ரவர்த்தி.
அந்த அறிக்கையில் இடம் பெற்ற விவரங்கள் பின்வருமாறு :
“நாங்கள் இருவரும் டாக்காவிலிருந்து புறப்பட்டு சுமார் 2000 மைல் தொலைவில் உள்ள பஞ்சாபுக்குச் சென்றோம். போகும் வழியில் ஹரித்வாருக்குச் சென்றோம். ஹரித்வாரில் நாங்கள் நடத்திய விசாரணையில், ஹிரானந்தா என்ற சாதுவைப் பற்றிய ஒரு துப்பு கிடைத்தது. அந்த சாது ஹிரானந்தாவைத் தேடிக் கொண்டு நானும் மம்தாஜூதினும் அமிர்தசரஸுக்குச் சென்றோம்.
நாங்கள் இருவரும் அமிர்தசரசில் ஹிரானந்தா சாதுவைச் சந்தித்தோம். அவரிடம் சந்நியாசியினுடைய புகைப்படத்தைக் காட்டி இவரைத் தெரியுமா என்று கேட்டோம். அதற்கு ஹிரானந்தாவின் சிஷ்யர் சாந்தாராம், புகைப்படத்தில் இருப்பது சந்நியாசி சுந்தர தாஸ் என்றார். பின்னர் இந்த சந்நியாசி தரம் தாஸின் சிஷ்யர் என்ற விவரத்தையும் தெரிவித்தார்.
பின்னர் நாங்கள் தரம் தாஸை தேடி அவருடைய கிராமமான சோட்டு சன்சாராவுக்குச் சென்றோம். அந்த கிராமம் அமிர்தசரஸிலிருந்து 20 மைல் தொலைவில் உள்ளது. அங்கு நாங்கள் சாது தரம் தாஸை சந்தித்தோம். அவருடைய சிஷ்யர் தேபதாஸும் உடன் இருந்தார். சந்நியாசியினுடைய புகைப்படத்தை அவ்விருவரிடமும் காட்டினோம். புகைப்படத்தை பார்த்த அவர்கள், இது சுந்தர் தாஸ் என்று தெரிவித்தனர்.
தரம் தாஸ், சுந்தர தாஸின் பின்னணியைப் பற்றி எங்களிடம் தெரிவித்தார். சுமார் 15 ஆண்டுகளுக்கு முன்னர் லாகூருக்கு அருகாமையில் உள்ள அவுலா என்ற கிராமத்திலிருந்து, நாராயண் சிங் என்பவர் ஒரு சிறுவனை என்னிடம் அழைத்து வந்தார். அந்தச் சிறுவனின் பெற்றோர்கள் இறந்துவிட்டதாக தெரிவித்தார். அவனை நீங்கள் உங்களுடைய சிஷ்யனாக ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். அந்தச் சிறுவனின் பெயர் மால் சிங். நானும் அவனை என்னுடைய சிஷ்யனாக ஏற்றுக்கொண்டேன் என்றார் சாது தரம் தாஸ்.
நாங்கள் சாது தரம் தாஸை ஒரு கவுரவ மாஜிஸ்திரேட்டான லெப்டினண்ட் ரகுபிர் சிங்கிடம் கூட்டிச் சென்றோம். இந்த லெப்டினண்ட் ரகுபிர் சிங் ஒரு முன்னாள் ராணுவ அதிகாரி.
சாது தரம் தாஸ் லெப்டினண்ட் ரகுபிர் சிங்கிடம் ஜூன் மாதம் 27 ஆம் தேதி, 1921ம் ஆண்டு ஒப்புதல் வாக்குமூலம் அளித்தார். அச்சமயத்தில் அங்கு எங்கள் இருவர் குழுவைத் தவிர, தரம் தாஸின் சிஷ்யர் தேபதாஸ், சாது ஹிரானந்தா மற்றும் அவருடைய சிஷ்யர் சாந்தாராம் தாஸ் மற்றும் நான்கு கிராமத்தவர்கள் இருந்தனர்.
தரம் தாஸ் சொன்ன விவரங்கள் அனைத்தும், இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தின் 164 வது பிரிவின் கீழ் பிரமானத்தின் அடிப்படையில், கவுரவ மாஜிஸ்திரேட்டால் பதிவு செய்யப்பட்டது. தரம் தாஸ் கூற்றை அங்கிருந்த மற்றவர்கள் உறுதிப்படுத்தினார்கள். அவர்களது சாட்சியமும் கவுரவ மாஜிஸ்திரேட்டால் பதிவு செய்யப்பட்டது. நாங்கள் கொண்டு வந்த புகைப்படம் தரம் தாஸுக்கு காட்டப்பட்டு, அவர் இது சுந்திர தாஸுடையது என்று சொன்ன பிறகு, கவுரவ மாஜிஸ்திரேட்டால் அந்த புகைப்படம் P1 என்று குறியீடு செய்யப்பட்டது. அந்தப் புகைப்படத்தில் சந்நியாசி நின்று கொண்டிருப்பதாக கவுரவ மாஜிஸ்திரேட் ரகுபிர் சிங் தெரிவித்திருக்கிறார். அந்தப் புகைப்படத்தில் ரகுபிர் சிங் கையெழுத்து போட்டிருக்கிறார்.
தரம் தாஸ் தன்னுடைய விசாரணையில், மால் சிங் என்ற சிறுவன் தன்னிடம் ஒப்படைக்கப்படும்போது அவனுக்கு 11 வயது இருக்கும் என்றார். மேலும் அவர், தன்னுடைய சிஷ்யனான சுந்தர் தாஸ் ஆறு வருடங்களுக்கு முன்னர் தன்னை விட்டு பிரிந்து கல்கத்தாவுக்குச் சென்று விட்டதாக தெரிவித்தார்.”
சுரேந்திர சக்ரவர்த்தி அனுப்பி வைத்த இந்த ஆய்வறிக்கையை, பாவல் ஜமீனின் மேலாளர் ஆங்கிலத்தில் மொழிப்பெயர்ப்பு செய்து டாக்கா கலெக்டரான லிண்ட்சேவுக்கு ஜூலை 2 ஆம் தேதி அனுப்பி வைத்தார்.
ஆனால் வேடிக்கை என்னவென்றால், இந்த அறிக்கை கலெக்டருக்கு கிடைப்பதற்கு முன்னரே, ஜூன் 3 ஆம் தேதியே சந்நியாசி உண்மையானவர் இல்லை; அவர் ஒரு போலி என்ற தன்னுடைய முடிவை கலெக்டர் வெளியிட்டிருக்கிறார்.
டாக்கா நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடந்த சமயத்தில், பிபாவதி தரப்பில் மேற்குறிப்பிட்ட சாட்சியங்கள் எல்லாம் தாக்கல் செய்யப்பட்டன. ஒரு பக்கம் சந்நியாசி தானே மேஜோ குமார் என்று நிரூபிக்கும் பொருட்டு, நான்கு சாதுக்களை தனது சார்பாக சாட்சியம் அளிக்க வைத்துள்ளார். இன்னோரு பக்கம் சந்நியாசி வங்காளத்தவர் இல்லை; அவர் ஒரு ஹிந்துஸ்தானி என்று நிரூபிக்கும் பொருட்டு அதற்குண்டான சாட்சியங்கள் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டன. இரு தரப்பில், ஒரு தரப்பு சொல்வது கண்டிப்பாக பொய். யார் சொல்வது பொய் என்று நீதிபதி கண்டுபிடித்தாக வேண்டும்.
நீதிபதி கண்டுபிடித்தாரா?
(தொடரும்)

கருத்துகள் இல்லை: