துணிந்து முடிவெடுக்க முடியாமல் தலைமை இருக்குமானால் அந்தக் கட்சி படும்
அவஸ்தை எத்தகையது என்பதற்கு உதாரணம் பாரதிய ஜனதாக் கட்சி.
கர்நாடகத்தில் ஆட்சியைத்
தக்கவைத்துக் கொள்ள வேண்டும் என்கிற கட்சித் தலைமையின் பிடிவாதத்தால், மக்களின்
வெறுப்புக்கும், ஏளனத்துக்கும் உள்ளாகி இருக்கிறது பாஜக.
சில அமைச்சர்களையும் சில எம்எல்ஏ-க்களையும் தனக்கு ஆதரவாக வைத்துக்கொண்டு தான்
நினைத்தபடியெல்லாம் கட்சித் தலைமையைத் தலையாட்டி பொம்மையாக ஆட்டுவிக்க முடியும்
என்பதைக் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் எடியூரப்பா நிரூபித்துக்கொண்டிருக்கிறார்.
முதல்வர் சதானந்த கௌடாவுக்கு எதிராகக் கடிதம் கொடுத்த 9 அமைச்சர்கள் இப்போது பாஜக தலைமை பேச்சுக்கு அழைத்துள்ளதால், தங்கள் பதவிவிலகல் கடிதத்தைத் திரும்பப்பெறச் சம்மதம் என்கிறார்கள். ஒருவேளை பேச்சுவார்த்தையில் எதிர்பார்த்த முடிவுகள் ஏற்படாவிட்டால் மீண்டும் பதவி விலகலை வலியுறுத்தக்கூடும். ஒரு தனிநபர் நடத்தும் கேலிக்கூத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் பாஜக வேடிக்கை பார்க்கக் காரணம், சரியான தலைமை இல்லாமல் உள்பூசலால் பாஜக வலுவிழந்து நிற்பதுதான். எடியூரப்பாவைக் கட்சியிலிருந்து விலக்கினாலும் கர்நாடகத்தில் ஆட்சியைத் தொடர முடியும், மக்கள் செல்வாக்குடன் கட்சியை நிலைநிறுத்த முடியும் என்கிற துணிவு கட்சித் தலைமைக்கு இல்லை என்பது இன்னொரு காரணம். சதானந்த கௌடாவை முதல்வராக ஆக்கியதும் எடியூரப்பாதான். இப்போது அவரை நீக்கிவிட்டு, தனது மற்றொரு ஆதரவாளரான ஜெகதீஷ் ஷெட்டரை முதல்வராக்க வேண்டும் என்று அடம் பிடிப்பதும் எடியூரப்பாதான். அதற்கு என்ன காரணம்? சதானந்த கௌடா மீது எந்தப் புகாரும் இல்லை. உண்மையைச் சொல்வதானால் அவரது அமைதியான செயல்பாடு மக்களைக் கவர்ந்திருக்கிறது. இதுவே அவர் மீதான அபிமானமாக மாறிவிட்டால், கர்நாடக பாஜகவின் நாளைய தலைவராக அவர் வளர்ந்து விடுவார். சதானந்த கௌடாவின் செல்வாக்கு அதிகரித்துவிடுமோ என்கிற பயம்தான் எடியூரப்பாவைக் கட்சித் தலைமையை மிரட்டத் தூண்டியிருக்கிறது. மேலும், லோக்ஆயுக்தாவில் தொடரப்பட்ட எடியூரப்பா மீதான ஊழல் வழக்குகளால் அவரைக் கைது செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டபோது, முதல்வர் பதவியிலிருந்து விலகி, சதானந்த கௌடாவை உட்கார வைத்ததன் நோக்கம் எடியூரப்பாவுக்கு நிறைவேறவில்லை. வழக்குகள் மேலும் இறுக்கமாகிக்கொண்டே போகின்றன. ஆகவே, சதானந்த கௌடா அப்பதவிக்கு லாயக்கற்றவர் என்கிற முடிவுக்கு எடியூரப்பா வந்திருக்கக் கூடும். மே 14-ஆம் தேதி, தனது எல்லா முயற்சிகளும் தோல்வியடைந்த கோபத்தில் பேட்டி அளித்த எடியூரப்பா, ""காங்கிரஸ் கட்சியில் மூத்த தலைவர்கள் ஊழல் குற்றச்சாட்டுகளில் சிக்கினால் கட்சி காப்பாற்ற முன்வருகிறது. சட்டம் தன் கடமையைச் செய்யும் என்று சொல்லி ஆதரவாக நிற்கிறார்கள்'' என்று வெளிப்படையாகக் கூறியபோதே, அவர் காங்கிரஸýடன் பேச்சு நடத்தி வருகிறார் என்று பேசப்பட்டது. சட்டப்பேரவையைக் கலைத்துவிடுவது குறித்து கர்நாடக மாநில ஆளுநருடன் ரகசியமாகச் சந்தித்துப் பேசினார் என்றும் செய்திகள் வெளியாகின. அப்போதாவது, பாஜக தலைமை விழித்துக்கொண்டிருக்க வேண்டும். எடியூரப்பாவின் ஆதரவாளர்கள் அனைவரையும் தங்கள் பக்கம் சேர்த்துக்கொண்டு, எடியூரப்பாவைத் தனிமைப்படுத்தியிருக்க வேண்டும். மாநில பாஜகவின் குழப்பத்தில் தலையிடுவதே பாவம் என்று பாஜகவின் தேசியத் தலைமை தலையிடாமல் தவிர்த்ததால் இப்போது நிலைமை கைமீறிப் போய்க் கொண்டிருக்கிறது. கர்நாடக மாநில பாஜக கட்சியைக் கேலிக்கூத்தாக்குவது எடியூரப்பாவுக்கும் கட்சித் தலைமைக்குமான விவகாரம். ஆனால், முதல்வர்களைத் தன் விருப்பம்போல மாற்றி ஜனநாயகத்தையே கேலிக்கூத்தாக்குவதை உள்கட்சி விவகாரம் என்று புறம்தள்ளிவிட முடியாது. வாக்களித்து ஆட்சியில் அமர்த்திய மக்களைக் கேலி செய்வது போலல்லவா இருக்கிறது இது? இந்த விஷயத்தைப் பொருத்தமட்டில், கர்நாடக மாநில பாஜக தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா கூறும் ஆலோசனை மேலானதாக இருக்கிறது. கர்நாடக மாநில சட்டப்பேரவைப் பொதுத்தேர்தல் அடுத்த ஆண்டு மே மாதம் நடைபெற வேண்டும். ஆனால், இப்போதே மாநில அரசைக் கலைத்துவிட்டு, கெüரவமாகத் தேர்தலைச் சந்தித்தால் வெற்றி நிச்சயம் என்பதுடன் தேவையற்ற சக்திகளுக்குப் போட்டியிட வாய்ப்பே கொடுக்காமல் தவிர்க்கவும் முடியும் என்று அவர் தொண்டர்கள் மத்தியில் பேசியுள்ளார். எடியூரப்பாவின் அரசியல் மிரட்டலுக்கு பாஜக கட்சி பணிந்து போவதால் மக்கள் மத்தியில் பாஜக மீதான மதிப்பு குறைவது ஒருபுறம் இருக்க, ஊழலில் சிக்கியுள்ள எடியூரப்பாவின் பேச்சுக்குச் செவிசாய்க்கும் பாஜக தலைமையும் இந்த ஊழலால் பயனடைந்தது என்ற பேச்சுக்கும் ஆளாக நேருமே தவிர, கட்சியைக் காப்பாற்ற வேறுவழியில்லை என்பதால் கட்சித் தலைமை பணிந்துபோகிறது என்று யாரும் எடுத்துக்கொள்ள மாட்டார்கள். எடியூரப்பாவைக் கட்சியிலிருந்து விலக்காமல் இருக்கும்வரை ஐக்கிய முற்போக்குக் கூட்டணி-2ல் அம்பலமாகி வரும் ஊழல்களை எதிர்க்கும் தார்மிக உரிமை பாஜகவுக்குக் கிடையாது. எடியூரப்பாவின் மிரட்டல்களுக்குப் பணியாமல், மாநில பாஜக தலைவர் சொல்வதைப்போல கர்நாடக சட்டப்பேரவையைக் கலைத்துவிட்டு, தேர்தலை முன்கூட்டியே சந்திப்பதுதான் பாஜக-வுக்கும் நல்லது. கர்நாடக மக்களுக்கும் நல்லது. மக்களாட்சிக்கும் நல்லது. கர்நாடகத்தின் துர்-நாடகத்தில் பாஜக இழப்பதற்கு ஒன்றுமில்லை - எடியூரப்பாவைத் தவிர!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக