ஞாயிறு, 1 ஜூலை, 2012

மர்ம சந்நியாசி – 6 அந்தப் போலி ஆதாரம் Dr.கால்வெர்டினால்

நீதிமன்றத்தில் மேஜோ குமாரின் மரணம் அல்லது மரணமாகக் கருதப்படும் சம்பவத்தைக் குறித்து இரு வேறு கதைகள் முன்வைக்கப்பட்டன. ஒன்று சந்நியாசியின் கூற்று. ன்னொன்று எதிர் தரப்பான பிபாவதியின் கூற்று.
மேஜோ குமார் டார்ஜிலிங்கில் இருக்கும்போது நல்ல ஆரோக்கியத்துடன் தான் இருந்தான். சிப்பிலிஸ் நோய்க்குகூட முறையான மருத்துவ சிகிச்சை எடுத்துக்கொண்டு அந்த நோயிலிருந்து மீண்டான். டார்ஜிலிங்கில் இருக்கும்போது தினந்தோறும் காலையில் போலோ விளையாடச் செல்வான். மாலை வேலைகளில் ஸ்னூக்கர், பில்லியர்ட்ஸ் விளையாடுவான்.
சந்நியாசி நீதிமன்ற சாட்சிக் கூண்டில், மேஜோ குமாருக்கு டார்ஜிலிங்கில் என்ன நடந்தது என்ற விவரத்தை பின்வருமாறு தெரிவித்தார்.
’1908ம் ஆண்டு, மே மாதம் 5 ஆம் தேதி எனக்கு வாய்வுத் தொல்லை அதிகமாக இருந்தது. என்னுடைய மைத்துனன் சத்திய பாபு, மருத்துவக் கல்லூரி மாணவன் அஷுதோஷ் குப்தாவை எனக்கு வைத்தியம் பார்க்கும்படி அனுப்பி வைத்தான். (அஷுதோஷ் குப்தாவும், ஜெய்தேபூரிலிருந்து மேஜோ குமாருடன் டார்ஜிலிங் வந்த கும்பலில் ஒருவன். அவனுடைய தந்தைதான் ஜெய்தேபூர் அரண்மனையின் மருத்துவர்).

மே 6 ஆம் தேதி அன்று எனக்கு வாய்வுத் தொல்லையுடன் வயிற்று வலியும் ஏற்பட்டது. நான் வலிதாங்கமாட்டாமல் கோபப்பட்டேன், அனைவரிடமும் எரிந்து விழுந்தேன். (மேஜோ குமார் சாதரணமாகவே கோபக்காரன், முரடன். தன்னுடைய வயிற்று வலியின் காரணமாக அவன் அனைவரிடமும் கடிந்து கொண்டான். அவனுடைய மனைவி பிபாவதி ஏதும் பேசாமல் பயந்து போய், பங்களாவின் ஒர் அறையில் தனியே இருந்தாள். பிபாவதிக்கு இரண்டு ஆயாக்கள்தான் பேச்சு துணைக்கு. சத்திய பாபு, பிபாவதிக்குத் துணையாக அரண்மனையிலிருந்து யாரையும் கூட்டி வரக்கூடாது என்று சொல்லியிருந்தான்).
எனக்கு வைத்தியம் செய்வதற்கு ஐரோப்பிய மருத்துவர் ஒருவர் வந்தார். ஐரோப்பிய மருத்துவர் எழுதி கொடுத்த மருந்தை நான் இரண்டு நாள் உட்கொண்டேன். ஆனால் 7 ஆம் தேதி, ஆஷு பாபு ஒரு கண்ணாடிக் குடுவையில் ஏதோ ஒரு மருந்தை கொண்டுவந்து என்னை சாப்பிடும்படி கட்டாயப்படுத்தினான். அந்த மருந்தை வாங்கி நான் வாயில் ஊற்றிக்கொண்டேன். அவ்வளவுதான், ஒரே நெஞ்செரிச்சல். எரிச்சல் தாங்கமுடியாமல் அலறினேன். ஆஷு நீ எனக்கு குடிப்பதற்கு என்ன கொடுத்தாய் என்று கத்தினேன். எரிச்சல் தாங்கமுடியாமல் குடித்த மருந்தை வாந்தி எடுத்தேன். வாந்தி எடுப்பது தொடர்ந்தது. நிற்கவே இல்லை.
அடுத்த நாள் 8ஆம் தேதி, மலம் கழிக்கும் போது ரத்தப் போக்கு ஏற்பட்டது. பிறகு சிறிது நேரத்துக்கெல்லாம் சுய நினைவிழந்து மயங்கி விட்டேன். அதற்குப் பிறகு எனக்கு என்ன நடந்தது என்று தெரியவில்லை.’
அதன் பின்னர் என்ன நடந்தது என்று, தான் விசாரித்து தெரிந்துகொண்ட விவரங்களை சந்நியாசி தன்னுடைய வழக்குக்கான பிராதில் பின்வருமாறு தெரிவித்திருக்கிறார்.
‘மே மாதம் 8 ஆம் தேதி, சனிக்கிழமை 6 மணியளவில் நான் இறந்ததாக நினைத்துக்கொண்டு,  ஈமக் காரியங்கள் செய்ய அன்று இரவே 7 மணியிலிருந்து 8 மணி அளவில் என்னை இடுகாட்டுக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள். சுடுகாட்டுக்குச் செல்லும் வழியில் இடி மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்திருக்கிறது. பலத்தக் காற்று வீசியிருக்கிறது. இந்த இயற்கை சீற்றத்தை தாக்குப் பிடிக்கமுடியாமல் என்னை தூக்கி வந்தவர்கள் என்னை வழியிலேயே விட்டுவிட்டனர்.
அந்தச் சூழ்நிலையில், அருகிலிருந்த நான்கு சாதுக்கள் நான் முனங்குவதைக் கேட்டு என்னைத் தூக்கிவந்து அடைக்கலம் கொடுத்திருக்கிறார்கள். பின்னர் எனக்கு தகுந்த மருத்துவ சிகிச்சை அளித்து காப்பாற்றியிருக்கிறார்கள்.
இதற்கிடையில் என்னை இடுகாட்டுக்குத் தூக்கி வந்த நபர்கள் என்னைக் காணாமல் வீட்டுக்குச் சென்றுவிட்டார்கள். பிறகு அடுத்த நாள் காலை, வேறொரு இறந்தவரின் பிணத்தை தூக்கி வந்து, என்னுடைய உடம்பை தேடிக் கண்டுபிடித்துவிட்டதாகக் கூறி, மறுபடியும் இடுகாட்டுக்குச் சென்று புதிதாக தூக்கி வந்த உடம்பை எரியூட்டி இருக்கிறார்கள். அந்த உடம்பு தலை முதல் கால் வரை துணியால் சுற்றப்பட்டிருந்தது. அதன் முகத்தைக் கூட ஒருவராலும் பார்க்க முடியவில்லை.’
இந்த சம்பவங்களைப் பற்றி பிபாவதி தன்னுடைய சாட்சியத்தில் சொன்னதாவது :
‘மேஜோ குமார் மே மாதம் 6 ஆம் தேதி முதல் உடல் நலம் இல்லாமல் இருந்தார். மே 7 ஆம் தேதியன்று அவர் உடல் நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. 8 ஆம் தேதியன்று அவர் உடல் நிலை மோசமடைந்தது. அன்று டாக்டர் லெப்டினண்ட் கர்னல் ஜான் டெல்ப்பு கால்வெர்ட், மேஜோ குமாருக்கு சிகிச்சை அளிக்க வந்தார். அவர் குமாருக்கு ஊசி போட முனைந்தார். ஆனால் குமார் அதற்கு மறுத்துவிட்டார். குமார் தன்னுடைய படுக்கையறைக்கு அடுத்த அறையில் ஒரு விரிப்பில் படுத்திருந்தார். காலை 8 மணியிலிருந்து 9 மணியளவில் டாக்டர் நிப்பாரான் சந்திர சென் என்பவர் வந்து குமாரைப் பார்த்தார். நான் ஒரு அறையின் கதவருகே நின்றுகொண்டிருந்தேன். ஆஷு பாபுவும், சத்திய பாபுவும் குமாருடன் ஏதோ பேசிக்கொண்டிருந்தார்கள்.
பிறகு காலை 10 மணியளவில் குமாருக்கு வாந்தி வந்தது. மதியம் 2 மணியளவில் குமாரின் வயிற்று வலி அதிகமானது. குமாருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டது. டாக்டர் கால்வெர்ட்டை அழைத்துவர ஆட்கள் அனுப்பப்பட்டனர். டாக்டர் கால்வெர்டு மாலை 4 மணியிலிருந்து 6 மணிக்குள்ளாக வந்து குமாரைப் பார்த்தார். டாக்டர் கால்வெர்டு, குமாருக்கு உடனடியாக ஊசி போட்டாகவேண்டும் என்று தெரிவித்தார். குமார் அதற்கு ஒப்புக் கொண்டார். ஊசி போட்ட பிறகு குமாரின் வலி குறைந்தது. ஆனால் குமார் ரொம்பவும் சோர்ந்து காணப்பட்டார்.
அதற்குப் பிறகு சில செவிலியர்கள் வந்து குமாரைப் பார்த்துக்கொண்டனர். குமாரின் உடம்பு சில்லென்று ஆனது. செவிலியர்கள் குமாரின் உடம்பில் ஏதோ பவுடரைப் போட்டுத் தேய்த்துவிட்டனர். டாக்டர் கால்வெர்ட் மாலை 8 மணி வரை இருந்தார். பின்னர் அவர் உணவருந்துவதற்காகச் சென்றுவிட்டார்.
இருட்டிய பிறகு என்னுடைய மாமா சூரிய நாரயாண் பாபு, பி.பி.சிர்கார் என்ற ஒரு மருத்துவருடன் குமாரைப் பார்க்க வந்தார். மே 8 ஆம் தேதி நள்ளிரவில் மேஜோ குமார் இறந்துவிட்டார். அவர் இறக்கும் தருவாயில் டாக்டர் கால்வெர்ட் மற்றும் டாக்டர் நிப்பாரான் சந்திர சென் இருவரும் இருந்தார்கள். ‘
(டாக்டர் கால்வெர்டு மற்றும் டாக்டர் நிப்பாரனை விசாரிக்கையில், தாங்கள் இரவில் குமாருடன் இருக்கவில்லை என்றும்,  வீட்டுக்குச் சென்றபிறகு மீண்டும் திரும்பிவந்து குமாரைப் பார்க்கவில்லை என்றும் தெரிவித்தனர்).
பிபாவதி தன்னுடைய சாட்சியத்தில் மேலும் சொன்னதாவது : குமார் இறந்த பிறகு, நான் குமாரின் கையைப் பிடித்துக் கொண்டு அழுது கொண்டிருந்தேன்.
(குமார் டார்ஜிலிங்கில் தங்கியிருந்த Step Aside பங்களாவின் மேற்பார்வையாளரான ராம் சிங் சுபா, பங்களா அருகில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். அவர் தன்னுடைய சாட்சியத்தில் கூறிய விஷயம் இது. ‘நான் லேபாங் ரேஸ் கோர்ஸில் குதிரைப் பந்தயத்தைப் பார்த்துவிட்டு அந்தி சாயும் நேரத்தில் வீடு திரும்பினேன். வரும் வழியில் குமார் தங்கி இருந்த பங்களாவில் அனைத்து விளக்குகளும் எரிந்து கொண்டிருந்தன. அங்கு வீட்டில் பெண்கள் அழுது கொண்டிருந்தனர். நான் பங்களாவுக்குள் நுழைந்து அங்கு உள்ளவர்களை விசாரித்ததில், குமார் சற்று நேரத்துக்கு முன்னர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர்.’ ராம் சிங் சுபா மேலும் தொடர்ந்தார். ‘நான் 7:30 மணியளவில் பங்களாவின் மாடிக்குச் சென்று பார்த்தேன். அங்கு முன் அறையில் குமார் தரையில் கிடத்தப்பட்டு இருந்தார். அவர் உடல் முழுதும் ஒரு துணியால் மறைக்கப்பட்டிருந்தது. அங்கு சத்திய பாபு, ஆஷு பாபு, டாக்டர் பி.பி.சிர்கார் மற்றும் பங்களாவின் உறுப்பினர்கள் சிலர் இருந்தனர். அங்கு பத்து நிமிடம் தலையைக் குனிந்தவாறு இருந்துவிட்டு வரண்டாவின் வழியாக வெளியே வர முற்பட்டேன். அப்பொழுது ஒரு அறையைக் கடக்க நேர்ந்தது. அந்த அறையின் கண்ணாடிக் கதவின் வழியாக பிபாவதியை பார்க்கமுடிந்தது. அங்கு அவள் ஒரு இரும்புக் கட்டிலின் மேல் குப்புறப்படுத்துக்கொண்டு அழுதுகொண்டிருந்தார். பிபாவதி இருந்த அறை வெளியில் பாட்லாக் பூட்டால் பூட்டப்பட்டிருந்தது. மேற்சொன்ன சாட்சியத்தின் அடிப்படையில் பார்க்கும் போது பிபாவதி உண்மையைச் சொல்லவில்லை என்று தெரிகிறது).
பிபாவதி தன்னுடைய சாட்சியத்தில் மேலும் தொடர்ந்தார். ‘மேஜொ குமார் Billory colic காரணமாக உயிர் இழந்தார். நள்ளிரவு என்பதால் மேஜோ குமாரை அடக்கம் செய்யமுடியவில்லை. மறுநாள் காலை, மேஜோ குமாரின் உடல் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு இடுகாட்டில் தீயூட்டப்பட்டது. ‘
இரு தரப்பினரும் தத்தம் நிலைப்பாடுகளை நிரூபிக்க, மொத்தமாக 96 சாட்சிகளை விசாரித்தனர். அந்த சாட்சிகளில் முக்கியமானவர் டாக்டர் லெப்டினண்ட் கர்னல் ஜான் டெல்ப்பு கால்வெர்ட். இவர் பிபாவதியின் தரப்பு சாட்சியாக விசாரிக்கப்பட்டார். டாக்டர் கால்வெர்ட், சம்பவம் நடந்த சமயத்தில் டார்ஜிலிங்கில் சிவில் சர்ஜனாகப் பணியாற்றினர். ஓய்வு பெற்றபிறகு அவர் இங்கிலாந்துக்குச் சென்றுவிட்டார். அவரை இங்கிலாந்து சென்று விசாரிக்க, டாக்கா நீதிமன்றம் ஒரு விசராணைக் கமிஷனை ஏற்படுத்தியது. தன்னுடைய தள்ளாடும் வயதில் டாக்டர் கால்வெர்ட் விசாரணைக் கமிஷன் முன்னர் ஆஜராகி, 22 வருடங்கள் முன் நடந்த சம்பவங்கள் குறித்து சாட்சியம் அளித்தார். டாக்டர் நிப்பாரன் சந்திர சென் என்பவரும் மேஜோ குமாருக்கு வைத்தியம் அளித்த வகையில் பிபாவதியின் தரப்பில் சாட்சியம் அளித்தார்.
மே மாதம் 8 ஆம் தேதி, மதியம் 12 மணியளவில் மேஜோ குமாருக்கு ரத்தப் போக்கு ஏற்பட்டு உடல் நிலை மோசமடைந்த தருணத்தில் டாக்டர் கால்வெர்டும் டாக்டர் நிப்பாரன் சந்திர சென்னும் அவருக்கு சிகிச்சை அளித்திருக்கின்றனர். இந்த இரண்டு மருத்துவர்களும் மேஜோ குமார் குணமடைய நிறைய மருந்துகள் எழுதிக் கொடுத்தனர்.
டார்ஜிலிங்கில் உள்ள ஸ்மித் ஸ்டெயின்ஸ்டிரீட் அன் கோ (Smith Steinstreet & Co) என்ற மருந்துக்கடையின் பதிவேட்டிலிருந்து திரட்டப்பட்ட விவரங்களின் படி, டாக்டர் கால்வெர்ட் முதலில் எழுதிக்கொடுத்த மருந்துச்சீட்டு, டாக்டர் கால்வெர்டைத் தொடர்ந்து, டாக்டர் நிப்பரான் எழுதிக்கொடுத்த மருந்துகள், டாக்டர் கால்வெர்ட் இரண்டாவது முறை எழுதிக் கொடுத்த மருந்துகள், டாக்டர் சென் மேஜோ குமாருக்காக கடைசியாக எழுதிக் கொடுத்த மருந்துகள் ஆகியவை பரிசீலிக்கப்பட்டன.
மேற்சொன்ன மருந்துகள் எதற்காக வழங்கப்பட்டன என்று நீதிமன்றத்தில் விவாதிக்கப்பட்டது. வாதி தரப்பில் இரண்டு மருத்துவர்களும் பிரதிவாதி தரப்பில் இரண்டு மருத்துவர்களும் சாட்சியம் அளித்தனர்.
டாக்டர் மேக் கில்கிறிஸ்ட் என்பவரும் டாக்டர் பிராட்லி என்பவரும் வாதி சார்பில் சாட்சியம் அளித்தனர். மேஜர் தாமஸ் மற்றும் கர்னல் டாக்டர் டென்ஹாம் வைட் என்பவரும் பிரதிவாதி தரப்பில் சாட்சிகளாக விசாரிக்கப்பட்டனர். மருத்துவம் தொடர்பான பல கேள்விகள் கேட்கப்பட்டன. மருத்துவப் புத்தகங்கள் பல அலசி ஆராயப்பட்டன.
பிபாவதி தரப்பில், Biliary Colic-க்கால் தான் மேஜோ குமார் உயிரிழந்தார் என்று சொல்லப்பட்டது. ஆனால் அதற்கு எந்த ஆதாரமும் இல்லை. மேஜோ குமார் உடல் நலம் இல்லாமல் இருந்த சமயத்தில், அவருக்கு Biliary Colic என்று எந்த மருத்துவரும் தெரிவிக்கவில்லை. மேஜோ குமார் சிகிச்சை பெற்று வந்த சமயத்தில், அந்தப் பெயரை அவர் குடும்பத்தார் யாரும் கேள்விப்படவே இல்லை.  மேஜோ குமார் இறந்த பிறகு முதல் முறையாக  மே மாதம் 10 ஆம் தேதியன்று மேஜோ குமாரின் அண்ணனான மூத்த குமாருக்கு (பாரா குமாருக்கு) டாக்டர் கால்வெர்ட் எழுதிய கடிதத்தில்தான் அது குறிப்பிடப்பட்டிருப்பதாக பிரதிவாதி தரப்பில் சாட்சியம் அளிக்கப்பட்டது.
ஏன் டாக்டர் கால்வெர்ட் பாரா குமாருக்கு அந்தக் கடிதத்தை எழுதினார் என்று பிரதிவாதி தரப்பில் சொல்லப்படவில்லை? யார் இந்தக் கடிதத்தை பாரா குமாரிடம் சேர்த்தனர் என்பதற்கும் விளக்கம் இல்லை. சத்திய பாபுவால் இது தொடர்பான சரியான விளக்கம் தர முடியவில்லை.
1921ம் ஆண்டில் சந்நியாசியைப் பற்றி விசாரணை நடத்திய டாக்கா கலெக்டரான நீதாமிடம், சத்திய பாபு டாக்டர் கால்வெர்டின் கடிதத்தை முதன்முறையாக கொடுத்திருக்கிறார். அந்தக் கடிதத்தை சத்திய பாபு கலெக்டரிடம் கொடுத்ததன் காரணம், மேஜோ குமாரின் இறப்பு எப்படி நிகழ்ந்தது என்ற விவரத்தை டாக்டர் கால்வெர்ட் அதில் தெரிவித்திருந்தார்.
டாக்டர் கால்வெர்ட் நீதிமன்ற விசாரணைக் கமிஷனிடம் அளித்த தன்னுடைய சாட்சியத்தில், மேஜோ குமார் ரத்தப் போக்கு ஏற்பட்டு உயிர் இழந்தார் என்று தெரிவித்தார். ஆனால் அவர் பாராகுமாருக்கு எழுதியக் கடிதத்தில் மேஜோ குமார் Biliary Colic-கால் இறந்ததாக குறிப்பிட்டிருந்தார். டாக்டர் கால்வெர்ட்டின் கூற்றில் முரண்பாடு இருக்கிறது. ஒரு இடத்தில் மேஜோ குமார் இறந்ததற்கான காரணம் Biliary Colic என்று சொன்ன டாக்டர் கால்வெர்ட், இன்னொரு இடத்தில் ரத்தப் போக்கு என்றார்.
இந்த வழக்கில் Biliary Colic பற்றி அதிகம் இடம்பெறுவதால், அது குறித்து ஒரு சிறு அறிமுகம் இங்கே அவசியமாகிறது. சாட்சியம் அளித்த நான்கு மருத்துவர்களும் Biliary Colic  பற்றிய தங்களுடைய விளக்கங்களுக்கு ஆதாரமாக Price’s Treatise என்ற மருத்துவப் புத்தகத்தையே மேற்கோளாகக் காட்டினர். கல்லீரல் வெளிப்படுத்தும் பித்தமானது ஹெப்பட்டிக் சுரப்பி மூலமாக சிஸ்டிக் சுரப்பியில் சென்று சேருகிறது. பிறகு சிஸ்டிக் சுரப்பி, பித்தநீரை மண்ணீரலுக்கு எடுத்துச்செல்கிறது. சில சமயங்களில் இந்தப் பித்தநீர், சிஸ்டிக் சுரப்பியில் கட்டிப்பட்டு நாளடைவில் கற்களாக மாறிவிடுகிறது. அப்படி சிஸ்டிக் சுரப்பியில் உருவாகும் பெரிய கற்களால் வலது தோள்ப்பட்டையில் தீவிர வலி ஏற்படும். வயிற்றில் வலி ஏற்படாது. வயிறுக்கும் Biliary Colicக்கும் எந்தத் தொடர்பும் இல்லை.  இதனால் உயிரிழப்பு ஏற்படுவது மிகவும் அரிதானது. அறுவை சிகிச்சை மூலமாகத்தான் Biliary Colicக்கை சரி செய்ய முடியும். இந்நோய் ஏற்படுத்தும் வலியைக் குறைப்பதற்காக வேண்டுமானால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ஓபியம் வழங்கப்படும் .
அனைத்து மருத்துவர்களும் கருத்து ஒத்து சொன்ன விஷயம் ஒருவருக்கு Biliary Colic இருந்தால் அவருக்கு ரத்தப் போக்கு ஏற்படாது என்பதுதான். காரணம் சிஸ்டிக் சுரப்பியில் உருவான கல்லால் சுரப்பி பாதிக்கப்பட்டு ரத்தம் கசிந்து குடல் வழியாக வெளியேறும். அப்படி வெளியேறும் ரத்தம் சிவப்பாக இருக்காது. கறுப்பாகவும் தார் போன்றுமிருக்கும். காரணம், கல்லின் பாதிப்பால் ஏற்பட்ட ரத்தம் சிறுகுடல் வழியாக பெருங்குடலுக்குச் சென்று, அங்கிருந்து மலக்குடலுக்கு வந்து சேர்வதற்கு சுமார் 25 அடி நீளம் உள்ள குடல்பகுதிகளை கடக்கவேண்டும். அப்படி கடக்கும் வழியில் மற்ற உணவுகளுடன் ரத்தமும் ஜீரணிக்கப்பட்டு, அதனுடைய கழிவுகள் கறுப்பாகவும் தார் போன்றும் வெளியேறும். மலத்தில் ரத்தம் வெளிப்பட்டால், அது குடலின் கீழ்பகுதி அல்லது ஆசனவாயில் ஏற்பட்ட பாதிப்பால்தான் இருக்குமே தவிர Biliary Colicக்கால் இருக்காது”.
மேஜோ குமாருக்கு வைத்தியம் பார்த்த டாக்டர் கால்வெர்டும் மேற்சொன்ன மருத்துவ விளக்கத்தை ஒத்துக்கொண்டார்.
நீதிமன்றத்தில் சாட்சியம் அளித்த நான்கு மருத்துவர்களும், மேலும் இரண்டு விஷயங்களைத் தெளிவுபடுத்தினர். அவை “மேஜோ குமாருக்கு ஏற்பட்டது வயிற்றுப் போக்கு, வயிற்றுக் கடுப்பு) இல்லை. காரணம் மேல்சொன்ன நோய் இருந்தால் இந்த இரு உபாதைகளும் ஏற்படாது. மலச்சிக்கல்தான் ஏற்படும்.”
சத்திய பாபு ராஜ்பாரி அரண்மனைக்கு, மேஜோ குமாரின் நிலைமையை தெரிவிப்பதற்காக அனுப்பிய தந்திகளில் எதிலுமே மேஜோ குமாருக்கு Biliary Colic என்று குறிப்பிடவில்லை.
அந்தத் தந்திகள் பின்வருமாறு:
மே 6 – காலை 10 மணி. நேற்று இரவு குமாருக்கு காய்ச்சல் அடித்தது. 99-க்கு கீழ்தான் இருந்தது. இப்பொழுது காய்ச்சல் இல்லை.
மே 6 – மாலை 6:45 மணி, குமாருக்கு காய்ச்சல். தாங்க முடியாத வயிற்று வலி. சிவில் சர்ஜன் குமாரை கவனித்து வருகிறார்.
மே 6 – மாலை 8:55 மணி, காய்ச்சல் இருந்தது. இரண்டு மணி நேரத்துக்கு மேலாக வயிற்று வலி. இப்பொழுது குறைந்துவிட்டது. கவலைப்பட வேண்டியதில்லை. மறுபடியும் வரும் என்ற பயம் வேண்டாம்.
மே 7 – காலை 7:10 மணி – குமார் நன்றாகத் தூங்கினார். காய்ச்சலும் இல்லை, வயிற்று வலியும் இல்லை.
மே 8 – காலை 11:15 மணி – காய்ச்சல் இல்லை, கொஞ்சம் வலி இருந்தது. அடிக்கடி வாந்தி வருவதாக தெரிவிக்கிறார். சிவில் சர்ஜன் கவனித்துக் கொள்கிறார். கவலைப்பட வேண்டியதில்லை. உணவாக சாதம் கொடுக்கப்படுகிறது.
மேலும் டாக்டர் கால்வெர்ட் மற்றும் டாக்டர் நிப்பாரன் சந்திர சென், மேஜோ குமாருக்கு எழுதிக் கொடுத்த மருந்துகள் எதுவுமே Biliary Colicக்கான சிகிச்சை தொடர்பானது இல்லை.
டாக்டர் கால்வெர்ட், பெல்லாடோனா (Belladonna) ஆயின்மென்ட் எழுதிக் கொடுத்திருந்தார். அது வயிற்று வலி கண்டவர்களுக்கு வயிற்றின் மேல் தடவப்படும் மருந்து.
டாக்டர் கில்கிறிஸ்ட் தன்னுடைய சாட்சியத்தில், மேஜோ குமார் வயிற்றுப் போக்கால் பாதிக்கப்பட்டிருந்தார் என்று வைத்துக்கொண்டால் கூட மருந்துச் சீட்டை பார்க்கும்பொழுது அதற்காக சிகிச்சை எதுவும் அவருக்கு அளிக்கப்படவில்லை என்று தெரிவித்தார்.
எனவே மேஜோ குமார் Biliary Colicக்கால் இறந்தார் என்பது தவறு.
எனவே அரசு மருத்துவரான டாக்டர் கால்வெர்ட் நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்திருக்கிறார். நீதிமன்றத்தில் பொய்சாட்சி சொல்வதற்கு ஆங்கிலத்தில் perjury என்று பெயர். நீதிமன்றத்தில் பொய் சாட்சியம் அளித்தால் அது சட்டப்படி குற்றம். அதற்கு தண்டனையும் உண்டு.
சத்திய பாபுவுக்கு, மேஜோ குமார் இன்ன காரணத்தினால்தான் இறந்தார் என்று ஒரு ஆதாரம் தேவைப்பட்டது. அந்தப் போலி ஆதாரம் தான், டாக்டர் கால்வெர்டினால் பாரா குமாருக்கு எழுதப்பட்ட கடிதம்.
அப்படியானால் மேஜோ குமாருக்கு மே மாதம் 8 ஆம் தேதி என்ன நடந்தது?
(தொடரும்)

கருத்துகள் இல்லை: