வெள்ளி, 6 ஜூலை, 2012

நித்யானந்தா மீது பெற்றோர் பகீர் புகார் கதறி அழைத்தும் வர மறுத்த சீடர்

பெங்களூரு: நித்யானந்தா சீடரான சந்தோஷ், பெற்றோருடன் செல்வதற்கு, நீதிபதி முன்னிலையிலேயே மறுப்பு தெரிவித்து, ஆசிரமத்துக்கு திரும்பி சென்று விட்டார்.
முன்னூர் கிருஷ்ணமூர்த்தி - ஜெயந்தி தம்பதியினரின் மகன் சந்தோஷ். அமெரிக்காவில் சாப்ட்வேர் இன்ஜினியராக பணியாற்றியவர். பணியை விடுத்து, நித்யானந்தா சீடராக இருந்து வருகிறார். ஆசிரமத்தில் அவ்வப்போது பிரச்னை ஏற்பட்டதால், கிருஷ்ணமூர்த்தி தம்பதியினர், சந்தோஷை வீட்டுக்கு வருமாறு அழைத்தனர். ஆனால் சந்தோஷ், "வரமுடியாத சூழ்நிலையில் உள்ளேன்' எனக் கூறியுள்ளார். இதனால், தங்கள் மகன், ஆசிரமத்தில் ஆபத்தில் இருப்பதாகவும், அவனை மீட்டு தருமாறும் பிடதி போலீசில் புகார் செய்தனர். ஆனால், போலீஸ் நிலையம் வந்த சந்தோஷ், "ஆசிரமத்தை விட்டு நான் வர முடியாது' எனக் கூறி விட்டார். இதையடுத்து கிருஷ்ணமூர்த்தி, கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்து, "என் மகனை, நித்யானந்தா, சட்ட விரோதமாக அடைத்து வைத்துள்ளார். மகனை மீட்டு தாருங்கள்' எனக் கோரியிருந்தார்.
இம்மனு நேற்று விசாரணைக்கு வந்தது. ஆசிரமத்திலிருந்து சந்தோஷ் நீதிமன்றம் வந்திருந்தார். அப்போது நீதிபதி, "நித்யானந்தா ஆசிரமத்தில் உங்களை அடைத்து வைத்துள்ளனரா, உங்கள் பெற்றோருடன் செல்ல விரும்புகிறீர்களா?' என கேட்டார். அதற்கு சந்தோஷ், "நான் ஆசிரமத்தில் இருக்க விரும்புகிறேன். பெற்றோருடன் செல்ல விருப்பமில்லை. ஆசிரமத்தில் எந்தவித பிரச்னையும் இன்றி சுதந்திரமாக உள்ளேன்' என்றார். இதையடுத்து நீதிபதி, "உங்கள் விருப்பப்படி ஆசிரமத்திற்கு செல்லலாம்' எனக் கூறி, மனு மீதான தீர்பை ஒத்தி வைத்தார்.

நீதிமன்றம் வந்த சந்தோஷ், காவி உடையணிந்து, மொட்டை அடித்திருந்தார். அவரை பார்த்த பெற்றோர், கண்ணீர் விட்டு கதறி, வீட்டுக்கு வரும்படி அழைத்தனர். ஆனால், சந்தோஷ் அவர்களை கண்டு கொள்ளவில்லை. சந்தோஷ் தந்தை கிருஷ்ணமூர்த்தி கூறுகையில், ""அப்பா, அம்மாவுடன் செல்ல மாட்டேன் என்று கூறும் அளவுக்கு, நித்யானந்தா, என் மகன் மனதை மாற்றி விட்டார். நித்யானந்தா தேச துரோகம் செய்து வருகிறார். குடும்ப உறவை பிரித்து வைத்துள்ளார். அவருக்கு கடவுள் தண்டனை கொடுப்பார்,'' என்றார்

கருத்துகள் இல்லை: