புதன், 17 பிப்ரவரி, 2021

தமிழகம் எங்கெங்கும் வட இந்தியர்கள்! அடையாளம் இழக்கும் தமிழ்நாடு!

May be an image of one or more people, people standing and outdoors
தமிழகத்தின் வேலைவாய்ப்புகள், வணிகம், நிலம் அனைத்தும் வட இந்தியர் 

 

சாவித்திரி கண்ணன் : · தமிழகம் தவிர வேறெந்த மாநிலத்திலும் இப்படியான ஒரு சூழல் கிடையாது..! ஜெயலலிதாவும், கருணாநிதியும் அடுத்தடுத்து மரணமடைந்த நிலையில் – மக்கள் செல்வாக்கோ, ஆளுமையோ இல்லாத ஒ.பி.எஸ்-இ.பி.எஸ் ஆகியோர் தலைமைக்கு தமிழக அரசின் அதிகாரம் கைமாறியதைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள மத்திய அரசு பணியிடங்களில் 90 முதல் 99.5 சதவிகிதம் வட மாநிலத்தவர் நியமனம் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. வேலைவாய்ப்புகள், வணிகம், நிலம்…அனைத்தும் வட இந்தியர் வசம் சென்று கொண்டுள்ளதை கவனப்படுத்துகிறது இந்த கட்டுரை! ஆனால், இது குறித்த தமிழக மக்களின் அதிர்ச்சி, கவலை, அச்சம் எதையுமே மத்திய, மாநில அரசுகள் கவனத்தில் கொள்ளவே தயாரற்ற நிலையும் நிலவுகிறது. 2017-ஆம் ஆண்டுமுதல் ரயில்வே, அஞ்சல்துறை,என்.எல்.சி,பாரத மின்மிகு நிலையம், வருமானவரித் துறை,உளவுத் துறை,வங்கிகள், சுங்கத்துறை மற்றும் மத்திய அரசின் கீழ் வரும் பொதுப்பணித்துறை நிறுவனத்தில் வேலை வாய்ப்புகள் தமிழர்களுக்கு கிடைக்காமல் வட மாநிலத்தவர்களுக்கே அதிகம் கிடைத்து வருகிறது.

தமிழகத்தின் குக்கிராமங்களின் அஞ்சல் அலுவ லகங்களில் கூட ‘போஸ்ட் மாஸ்டர்' பணிக்கு பீகார், உத்தரப்பிரதேசம், அரியானா மாநிலத்தவர்கள் அமர்த் தப்பட்டு வருகின்றனர். அவ்வளவு ஏன் தமிழ் நாட்டின் சட்ட பேரவை நடக்கும் செஞார்ஜ் கோட்டைக்குள் இருக்கும் அஞ்சலகத்திற்கு சென்றால் கூட வட இந்தியர் தான் இருக்கிறார். தமிழில் விலாசம் எழுதினாலோ, தமிழில் ஏதாவது கேட்டாலோ அவருக்கு புரிவதில்லை!
தலைமைப் பதவியில் ஒரு வட இந்தியர் அமர்த்தப்படுவது முதல் கட்டம்.அடுத்த கட்டமாக அவரது பரிந்துரையின் பெயரில் அவருக்கு கீழே உள்ள அனைத்துப் பதவிகளிலும் வட இந்தியர்கள் வந்து விடுகின்றனர். நாகர்கோவிலின் சுற்று வட்டார அஞ்சலகங்களில் கடந்த சில ஆண்டுகளாக பணியாளர்கள் அனைவருமே வட இந்தியர்களாக நியமிக்கப்பட்டு உள்ளனர்!
தெற்கு ரயில்வேயின் திருச்சி கோட்டத்தில் எலக்ட்ரிஷியன், ஃபிட்டர், மெக்கானிக், வெல்டர் உள்ளிட்ட தொழில் பழகுநர் இடங்களுக்கு 1,765 பேர் தேர்வு செய்யப்பட்டதில் 1,600 பேர் வட இந்தியர்களாவர்!
இது மட்டுமின்றி சென்னை பெரம்பூர், கோவை என ரயில்வே பணிகளில் பிற மாநிலத்தவர்களே 90 விழுக்காடு நியமனம் பெற்றனர். பீகார், உத்திரபிரதேசம் , ஜார்கண்ட் உள்ளிட்ட வட மாநிலங்களிலிருந்து விண்ணப்பித்தவர்களுக்குத் தேர்வு நடத்தி டிராக் மேன், போர்ட் மேன், சபாய் வாலா, கலாசி போன்ற பணிகளுக்கு ஆயிரக்கணக்கானோரைப் பணியில் சேர்த்தனர்.
ரயில்வே ஆக்ட் அப்ரண்டிஸ் பயிற்சி முடித்து சுமார் 15 ஆயிரம் பேர் பதிவு செய்து பல ஆண்டுகளாக தமிழகத்தில் காத்திருக்கின்றனர். வேலை கிடைக்காத விரக்தியில் 28 பேர் உயிரை இழந்துள்ளனர். ரயில்வே துறையில் இழைக்கப்படும் அநீதி குறித்து தொழிற் பழகுநர் பயிற்சி பெற்றோர் சங்கத்தினர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகள் கவலை தெரிவித்துள்ளன!
என்.எல்.சி நிறுவனம் ஆண்டுக்கு ரூ.7,146 கோடி வருமானம் ஈட்டும் நவரத்னா நிறுவனமானமாகும்! நெய்வேலி மற்றும் அதை சுற்றியுள்ள 22 கிராமங்களைச் சேர்ந்த விவசாயிகள், தங்களின் ஒரே வாழ்வாதாரமான விவசாய நிலங்களை, நிலக்கரி சுரங்கம் அமைப்பதற்காகக் கொடுத்தனர். தங்களுக்கு உணவு படைத்த நிலங்களை அவர்கள் முழுமனதுடன் தாரை வார்த்ததற்குக் காரணம், நாட்டின் நலன் கருதியும், அங்கு அமையும் நிலக்கரி நிறுவனம் தங்களின் வாரிசுகளுக்கு வாழ்வாதாரம் கொடுக்கும் என்று நம்பியது தான்.
ஆனால், மண்ணின் மைந்தர்களுக்கு வேலை வழங்காமல் வட இந்தியாவைச் சேர்ந்தவர்களை பல முறைகேடுகளை அரங்கேற்றி, பணிகளில் நியமித்து வருவது தொடர்ச்சியாக நடக்கிறது.
என்.எல்.சி யில் எந்திரவியல், மின்னியல் மற்றும் மின்னணுவியல், மின்னணுவியல் மற்றும் தொடர்பியல், சிவில், கணினியியல், சுரங்கவியல், நிலவியல் ஆகிய பொறியியல் பிரிவுகள், நிதியியல், மனிதவளம் ஆகியவற்றில் தமிழர்கள் இடம் பெற முடியாமல் ஏன் தவிர்க்கப்பட வேண்டும்!
தமிழக நெய்வேலி என்.எல்.சி நிறுவனத்தில் 259 பட்டதாரி நிர்வாக பயிற்சியர் (Graduate Executive Trainee- GET) பணிக்கான நேர்காணலுக்கு அழைக்கப்பட்டிருந்த 1582 பேரில் ஒரு சதவிகிதம் கூட தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் இல்லையே என்ற கொந்தளிப்புக்கு இன்று வரை பதில் கிடையாது.
என்.எல்.சியில் இப்போதுள்ள தலைவர் மற்றும் இயக்குனர்கள் 11 பேரில் தமிழக அரசின் பிரதிநிதியாக இருக்கும் உள்துறை செயலாளர் எஸ்.கே.பிரபாகர் தவிர, மீதமுள்ள 10 பேரில் 9 பேர் வட மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இவர்கள் திட்டமிட்டு தங்கள் மாநிலத்தைச் சேர்ந்தவர்களை பணியில் திணிப்பதற்காக தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகளை செய்வதை யாராலும் தடுக்கவே முடியவில்லை. இந்த சதிராட்டத்தில் தமிழகத்தைச் சேர்ந்த பட்டதாரிகள் திறமை இருந்தும் நிராகரிக்கப்படுகிறார்கள்.
சென்னை மணலியில் உள்ள சென்னை பெட்ரோலிய நிறுவனத்தில் வேதியியல் பொறியாளர் பணிக்கு 21 பேர், இயந்திரவியல் பொறியாளர் பணிக்கு 9 பேர், மின்னியல் பொறியாளர் பணிக்கு 5 பேர் உட்பட மொத்தம் 8 வகையான பணிகளுக்கு 42 பேரை தேர்வு செய்தனர். அப்பணிகளுக்கு விண்ணப்பித்தவர்களுக்கு எழுத்துத் தேர்வு நடத்தப்பட்டு முடிவுகள் வெளியிடப்பட்டதில் அவர்களில் ,ஒருவர் கூட தமிழகத்தைச் சேர்ந்தவர் அல்ல என்பது தான் அதிர்ச்சியளிக்கும் விஷயமாகும்.
தமிழகத்தில் படித்த பட்டதாரி இளைஞர்கள் 90 லட்சம் பேர் வேலை கேட்டு வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து காத்திருக்கின்றனர். இவர்களைத் தவிர்த்து அதிகம் படிக்காத சுமார் ஒரு கோடி இளைஞர்கள் உடல் உழைப்பு பணிகளை தேடி வருகின்றனர். இவர்களுக்கு பணி மறுப்பது பலவேறு சமூகச் சீரழிவுகளுக்கும்,குற்றச் செயல்களுக்கும் காரணமாகிவிடும். மண்ணின் மைந்தர்களுக்கே 90 சதமான அரசு வேலைகள் என்பதில் குஜராத், கர்நாடகம், மகராஷ்ட்டிரம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்கள் முன்னுதாரணமாக இருக்கின்றன.அதை நாமும் பின்பற்றாவிட்டால் வருங்காலத்தில் இந்த நிலப்பரப்பு தமிழர்கள் சிறுபான்மையாக கொண்ட நிலப்பரப்பாகிவிடவும் வாய்ப்புள்ளது.
சுதந்திர போராட்ட காலம் தொடங்கி இந்தியா என்ற தேசிய உணர்வில் தமிழர்கள் செய்த அர்ப்பணிப்புகள், தியாகங்கள் ஏராளம்! இந்தி திணிப்பை ஏற்க மறுப்பது, இட ஒதுக்கீடு என்ற சமூக நீதியில் உறுதி காட்டுவது ஆகிய இரண்டு விவகாரங்களில் மட்டும் தமிழர்கள் வட இந்தியர்களிடமிருந்து மாறுபட்டு நிற்கிறோம். அதே போல மதவெறி என்ற அம்சத்தையும் தமிழக மக்கள் ஏற்பதில்லை. இந்தக் காரணங்களால் மத்திய பாஜக அரசு தமிழர்களல்லாத வட மாநிலத்தவர்களைக் கொண்டு தமிழ் நாட்டில் தமிழர்களின் எண்ணிக்கை விகிதாச்சாரத்தை குறைக்க எண்ணி கடந்த மூன்றாண்டுகளுக்கும் மேல் மும்முரமாக செயல்பட்டு வருகிறது.
இது ஒருபுறமிருக்க, தமிழகத்தின் பெரு நகரங்கள் தொடங்கி சிறு நகரங்கள், சிற்றூர்கள் வரை வட இந்தியர்களின் வணிக நிறுவனங்கள் காணும் திசையெல்லாம் முளைத்த வண்ணம் உள்ளன! நகைக் கடைகள்,அடகுக் கடைகள், துணிக் கடைகள்,ஸ்வீட் கடைகள், எலக்ரானிக் சாதனங்கள் விற்பனையகம், பொம்மைக் கடைகள்,வீட்டுசாதனங்கள் விற்கும் கடைகள்..என்று தமிழ் நாட்டின் பொருளாதாரமே வட இந்திய வியாபாரிகள் வசம் சென்று கொண்டுள்ளது. அத்துடன் நிறைய நிலபுலன் சொத்துகளையும் அவர்கள் வாங்கி குவிக்கின்றனர். சென்னையில் வட இந்தியக் குடும்பங்கள் வாழ்ந்திடாத ஒரு தெருவையேனும் காண்பது அரிதாகிவிட்டது. ஏற்கனவே செளகார்பேட்டை முழுக்க சேட்டுகள் தான்! தற்போது ஒவ்வொரு தெருவிலும் சிறிய செளகார்பேட்டை தான்! ஆர்ப்பாட்டமில்லாமல் அமைதியாக நிகழ்த்தப்படும் இந்த ஆக்கிரமிப்பு மிக,மிக ஆபத்தானது இது தமிழகத்தின் சம நிலையை தகர்க்கக் கூடிய ஒரு அசாதரணமான சூழலாகத் தெரிகிறது.
படங்கள் மற்றும் கார்டூன்களுடன் முழுமையாக வாசிக்க..
எங்கெங்கும் வட இந்தியர்கள்! அடையாளமிழக்கும் தமிழகம்!
https://aramonline.in/.../northindianintn-lose.../
சாவித்திரி கண்ணன்
அறம் இணைய இதழ்

கருத்துகள் இல்லை: