ஞாயிறு, 14 பிப்ரவரி, 2021

பிரதமர் மோடி இன்று சென்னை வருகை- 10,000 போலீசார் பாதுகாப்பு

.dailythanthi.com :சென்னை, பிரதமர் நரேந்திர மோடி ஒருநாள் அரசுமுறை பயணமாக இன்று காலை 10.35 மணியளவில் சென்னை வருகிறார். அவர், சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்கிறார். நிகழ்ச்சியில் அவர், சென்னை வண்ணாரப்பேட்டை-விம்கோ நகர் இடையே ரூ.3,770 கோடி செலவில் சென்னை மெட்ரோ ரெயில் முதல்கட்ட விரிவாக்க திட்டம், ரூ.293.40 கோடி செலவில், சென்னை கடற்கரை-அத்திபட்டு இடையே 21.1 கி.மீ. நீளமுள்ள 4-வது ரெயில் பாதை இணைப்பு, ரூ.423 கோடி மதிப்பீட்டில் விழுப்புரம்-கடலூர், மயிலாடுதுறை-தஞ்சை மற்றும் மயிலாடுதுறை-திருவாரூர் இடையே 228 கி.மீ. தொலைவுக்கு மின்மயமாக்கப்பட்டு உள்ள ஒருவழி ரெயில் பாதை ஆகிய முடிவுற்ற திட்டங்களை தொடங்கி வைக்கிறார். ரூ.2,640 கோடி செலவில் கல்லணை கால்வாய் விரிவாக்கம், புதுப்பிப்பு மற்றும் நவீனப்படுத்துதல் திட்டத்துக்கும், சென்னை தையூரில் ரூ.1,000 கோடி செலவில் ஐ.ஐ.டி.க்காக அமைக்கப்பட உள்ள ‘டிஸ்கவரி கேம்பஸ்’ வளாகம் அமைப்பதற்கும் அவர் அடிக்கல் நாட்டுகிறார்.

சென்னை ஆவடி ராணுவ தளவாட உற்பத்தி தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட அர்ஜூன் போர் பீரங்கியை இந்திய ராணுவத்துக்கு அர்ப்பணித்து வைக்கிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் பன்வாரிலால் புரோகித், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அமைச்சர்கள், மத்திய-மாநில அரசின் உயரதிகாரிகள் கலந்துகொள்ள உள்ளனர்.

இந்த விழாவில் பங்கேற்பதற்காக பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் இன்று காலை 7.50 மணிக்கு புறப்பட்டு, சென்னை விமான நிலையத்துக்கு காலை 10.35 மணிக்கு வந்து சேருகிறார். அங்கிருந்து காலை 10.40 மணியளவில் ‘ஹெலிகாப்டரில் புறப்பட்டு, சென்னை நேப்பியர் பாலம் அருகில் உள்ள ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு காலை 11 மணிக்கு வருகிறார்.

பின்னர் அவர் அங்கிருந்து காலை 11.05 மணியளவில் கார் மூலம் புறப்பட்டு சாலைமார்க்கமாக தீவுத்திடல், கொடிமரச்சாலை, முத்துசாமி பாலம், ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை, சென்டிரல், ரிப்பன் மாளிகை வழியாக சென்னை பெரியமேட்டில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கத்துக்கு காலை 11.15 மணிக்கு வருகிறார். பிரதமர் வரும் வழியில் அவருக்கு 5 இடங்களில் பா.ஜ.க., அ.தி.மு.க. சார்பில் பாரம்பரிய கலைநிகழ்ச்சிகளுடன் வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.

சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில், காலை 11.15 மணி முதல் மதியம் 12.30 மணி வரை பிரதமரின் நிகழ்ச்சி நிரல் அமைந்துள்ளது. இந்த நிகழ்ச்சி முடிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி மதியம் 12.50 மணி வரை அங்கு இருக்கிறார். அப்போது அவரை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உள்பட முக்கிய பிரமுகர்கள் தனியாக சந்தித்து பேசுவார்கள் என்று தெரிகிறது. இந்த சந்திப்பின்போது தேர்தல் கூட்டணி, தொகுதி பங்கீடு போன்ற அரசியல்ரீதியான பேச்சுவார்த்தைகள் இருக்கும் என்றும் அரசியல் வட்டாரத்தில் பேசப்படுகிறது.

முக்கிய பிரமுகர்களுடனான சந்திப்பு முடிந்தவுடன் பிரதமர் நரேந்திர மோடி மதியம் 12.55 மணியளவில், சென்னை நேரு விளையாட்டு அரங்கத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு சாலை மார்க்கமாக, வந்த வழியாகவே ஐ.என்.எஸ். அடையார் கடற்படை தளத்துக்கு மதியம் 1.05 மணிக்கு செல்கிறார். அங்கிருந்து ஹெலிகாப்டரில் மதியம் 1.10 மணிக்கு புறப்பட்டு, சென்னை விமான நிலையத்தை மதியம் 1.30 மணியளவில் சென்றடைகிறார்.

பின்னர் பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்பதற்காக சென்னை விமான நிலையத்தில் இருந்து மதியம் 1.35 மணிக்கு தனி விமானம் மூலம் புறப்பட்டு கொச்சி ஐ.என்.எஸ். கருடா கடற்படை தளத்தில் உள்ள விமான நிலையத்துக்கு மதியம் 2.45 மணிக்கு சென்றடைகிறார்.

பிரதமர் மோடி வருகையையொட்டி சென்னையில் போலீஸ் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு உள்ளது. நகர் முழுவதும் நேற்று இரவு முதல் அதிகாலை வரை போலீசார் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். பிரதமர் செல்லும் பாதையில் போலீசார் நேற்று பாதுகாப்பு ஒத்திகை நடத்தினார்கள். விழா நடைபெறும் சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கம் போலீசார் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது.

சென்னை போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் நேரடி மேற்பார்வையில் கூடுதல் கமிஷனர்கள், இணை கமிஷனர்கள், துணை கமிஷனர்கள், உதவி கமிஷனர்கள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் என 10 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

 

கருத்துகள் இல்லை: