செவ்வாய், 16 பிப்ரவரி, 2021

ஒன்றியத்தை ஒரு நாடாக்கக் கோரும் முற்றுருரிமை!

சிறப்புக் கட்டுரை: ஒன்றியத்தை ஒரு நாடாக்கக் கோரும் முற்றுருரிமை!

minnambalam : பாஸ்கர் செல்வராஜ் பாகம் 9    :   கொரோனா முடக்கம் ஏற்கனவே இந்தியச் சில்லறை சந்தையில் இருந்த வியாபாரிகளைப் பெருமளவு வியாபாரம் செய்ய விடாமல் தற்காலிகமாக முடக்கியது. இந்த காலத்தில் அவர்களின் இடத்தை இணைய வர்த்தகத்தின் வழியில் பிடித்த பெருநிறுவனங்கள் இப்போது அதிரடியாக அந்த இடத்தை விரிவுபடுத்தி வியாபாரிகளை நிரந்தரமாக வெளியேற்றும் வேலைகளில் ஈடுபட்டு வருகிறார்கள். இவர்களின் இடத்தை அமேசான், வால்மார்ட் - ஃப்ளிப்கார்ட், ஜியோ – கூகுள் - முகநூல் ஆகிய மூன்று பெருநிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு கைப்பற்றி வருகின்றன. 1.2-1.4 கோடி கடைகள் செயல்பட்டு வரும் இந்தச் சந்தையை இந்த மூவரும் கட்டுப்படுத்தும் வகையில் ஒருமுகப்படுத்தப்பட்டு வருகிறது. இப்படி சில நிறுவனங்களிடம் சந்தை ஒருமுகப்படும்போது இந்த சந்தை உள்ள நிலப்பரப்புக்குள் பொருட்களை உற்பத்தி செய்யவும், கொள்முதல் செய்யவும், விற்பனை செய்யவும் எந்த தடையுமற்ற கட்டமைப்பைக் கோருகிறது. நடைமுறையில் இருக்கும் எல்லா தடைகளையும் நீக்க சொல்கிறது.

நாடு என்பது...

நாடு என்பது வரலாற்று வளர்ச்சிப் போக்கில் இனம், மொழி, பழக்கவழக்கம், பண்பாடு, கலாச்சார ரீதியாக ஒற்றுமை காணும் மக்கள்திரள் தங்களின் வாழ்வாதாரத்திற்கும், மேம்பட்ட வாழ்வுக்குமான பொருட்களை, செல்வத்தை உழைத்து உருவாக்கிக் கொள்ளும் தேவையின் காரணமாக அதற்குதக தங்களை ஒரு சமூகமாகக் கட்டமைத்துக் கொண்டு வாழும் ஒரு நிலப்பரப்பு. இங்கு வாழும் மக்கள் தங்களின் வாழ்வுக்கான பொருட்களை உருவாக்கிக்கொள்ளவும், செல்வத்தைப் பெருக்குவதற்குமான அடிப்படை ஆதாரமாக இந்த மக்கள் வாழும் நிலமே விளங்குகிறது.

நாட்டின் அரசியல் பொருளாதாரம்

இந்தப் பகுதியில் வாழும் மக்கள் உழைத்து உருவாக்கும் பொருட்களையும் செல்வத்தையும் இம்மக்களில் சிலர் தனதாக்கிக் கொள்ள முனைவதும் அதனால் வஞ்சிக்கப்பட்டவர்கள் அவற்றைப் பெறுவதற்கு செய்யும் போராட்டங்களும் அந்த நிலப்பரப்பின் அரசியலாகவும், இந்தப் பொருட்களை உற்பத்தி செய்யும் முறை, அவற்றை இந்த நிலப்பரப்புக்குள்ளும் இதற்கு வெளியிலும் பரிமாறிக்கொள்ள ஏதுவாக விதிமுறைகளை வகுத்துக்கொண்டு செயல்படுவது அப்பகுதிக்குரிய பொருளாதாரமாகவும் விளங்கி அந்த சமூகத்தை இயக்கி முன்னோக்கி நகர்த்துகிறது.

நாடுகளின் வரலாற்று வளர்ச்சி

ஐரோப்பாவில் வாழ்ந்த மக்கள் ஒத்த வெள்ளையினமாக இருந்தாலும் வரலாற்று வளர்ச்சிப்போக்கில் பல இனக்குழுக்களாகவும் வேறுபட்ட மொழியைப் பேசுபவர்களாகவும், பழக்கவழக்கங்களை உடையவர்களாகவும் பிரிந்து விவசாயம் சார்ந்த உற்பத்தியில் இருந்து தொழிற்துறையை நோக்கிய வளர்ச்சிப்போக்கில் இம்மக்களுக்கு இடையில் நிலவும் ஒற்றுமையின் அடிப்படையில் பல தேசிய இன மக்களாக மாற்றம் கண்டு பல நாட்டினராக வாழ்ந்து வருகிறார்கள். ஒத்த மொழிக்குடும்பப் பேச்சைக்கொண்ட வெவ்வேறு பகுதிகளில் பல இனக்குழுக்களாக வாழ்ந்த சீன மக்கள் விவசாய உற்பத்திக்கு அடிப்படையான நிலத்தை ஒரு குழுவிடம் இருந்து மற்றொரு குழு ஆக்கிரமிப்பதும் அதனை மீட்க போராடுவதாகவுமான வரலாற்றைக் கொண்டிருக்கிறார்கள்.

இணக்கம் காணும் மக்கள் இனக்குழுக்கள்

இந்த தொடர்ந்த ஆக்கிரமிப்பு - எதிர்ப்பின் இறுதியில் இந்த மக்களில் சிலர் இந்த நிலங்களை அபகரித்து சொகுசு வாழ்க்கை வாழும் மன்னர்களாக நிலப்பிரபுக்களாக மாற்றம் கண்டார்கள். எல்லாவற்றையும் இழந்து ஏதிலிகளாக ஆன மக்கள் இழந்த தமது நிலத்தைப் பெறுவதற்கான போராட்டத்தின் ஊடாக ஒருவரையொருவர் புரிந்து உள்வாங்கிக் கொண்டு ஏதுமற்றவர்கள் என்ற வகையில் இணக்கம் கண்டார்கள். இவர்களை வஞ்சித்த மன்னர்களிடமும் நிலப்பிரபுக்களிடமும் வேறுபட்டு முரண்பட்டார்கள். இந்தியா சுதந்திரமடைந்த அதே காலகட்டத்தில் ஒரு மக்களினமாக ஒன்றிணைந்து இவர்களை வீழ்த்தி ஒரு நாடாக சீன மக்கள் மாற்றம் கண்டார்கள். இழந்த தங்களின் நிலங்களை மீட்டு பிரித்துக்கொண்டார்கள். இந்தப் போராட்டங்களுக்கு வெளியில் இருந்த திபெத் போன்ற பகுதிகளில் வாழும் மக்கள் இன்றும் இவர்களுடன் இணக்கம் காண முடியாமல் போராடிக் கொண்டு சீன அரசின் அடக்குமுறைகளுக்கு ஆளாகி வருகிறார்கள்.

வேறுபடும் இந்திய வரலாற்று வளர்ச்சி

மற்ற நாடுகளைப் போல ஓரின மக்களாகவோ, ஒத்த மொழியையோ கொண்டிராத இந்திய நிலப்பரப்பில் எந்த அளவு நிலத்துக்கான ஆக்கிரமிப்பு -எதிர்ப்பு போராட்டங்கள் அதிகரித்ததோ அந்த அளவு மக்கள் நிலத்தின் மீதான உரிமைகளற்று எந்த வகையிலும் இணக்கம் காணாமல் ஆயிரக்கணக்கான சாதிய குழுக்களாகப் பிரிக்கப்படும் வித்தியாசமான வரலாற்றை நாம் கொண்டிருக்கிறோம். இந்த ஏற்றத்தாழ்வான சாதிய பிரிப்பு இந்தியா முழுமைக்கும் பொதுவானதாக இருந்தாலும் இதை அடிப்படையாகக் கொண்டு ஒரு தேசியமாக மக்களை இணைப்பதோ அல்லது பல தேசிய மக்களாகப் பிரிப்பதோ சாத்தியம் இல்லை.

வேறுபடும் இந்திய மக்கள் இனங்களின் வளர்ச்சி

தற்போதைய இந்தியா என்ற நிலப்பரப்புக்குள் வாழும் மக்களின் வரலாற்று ரீதியிலான அரசியல் பொருளாதார வளர்ச்சியை இந்து - இந்தியா என்ற ஒற்றை கண்ணாடியைக் கொண்டு பார்க்கும்போது ஒன்று போல தோன்றினாலும் அடிப்படையில் வேறானதாகவே இருந்து வருகிறது. இந்த வேறுபாடு இருவகைப்பட்டது.

1. அந்தந்த மக்கள் வாழும் நிலப்பரப்பின் இயற்கைவளம் மற்றும் அமைவிடம் சார்ந்தது.

2. சாதியாக பிரிக்கப்பட்ட மக்கள் எவ்வளவு தூரம் சாதிய இறுக்கத்தை உடைத்து அதில் இளக்கமும் தங்களுக்குள் இணக்கமும் கண்டிருக்கிறார்கள் என்பதைப் பொறுத்தது.

உதாரணமாக மத்திய கிழக்கில் இருந்து வருபவர்களின் நுழைவுவாயிலாக விளங்கும் பஞ்சாப்பையும் அவர்களின் தொடர்புக்கும் தேவைக்கும் தொலைதூரத்தில் உள்ள தமிழகத்தையும் எடுத்துக் கொள்வோம். வட இந்தியா முழுக்க இறுக்கமாகக் கட்டப்பட்டு இருக்கும் நால்வர்ண சாதியமுறை இங்கே நடைமுறையில் இல்லை.

சாதிய இறுக்கமும் தீண்டாமையுமே வேற்றுமையின் அளவுகோல்கள்

இந்த வேறுபாடுகளைப் புரிந்துகொள்ள வேண்டுமானால் இந்திய மாநிலங்களில் நிலவும் சாதிய கட்டமைப்பில் உள்ள வேறுபாடுகளை புரிந்து கொள்ள வேண்டி இருக்கிறது. அன்றைய விவசாய உற்பத்திக்குத் தேவையான இந்தியாவின் சமவெளி பகுதிகளில் நடந்த நிலத்துக்கான ஆக்கிரமிப்பு - எதிர்ப்பு போராட்டங்கள் அதனூடான பேரரசுகளின் உருவாக்கங்கள் அவற்றை நிர்வகித்து நிலைப்படுத்த கைக்கொள்ளப்பட்ட பார்ப்பனியம் ஆகியவற்றை அளவிடும் அளவுகோலாக அந்தந்த பகுதிகளில் காணப்படும் சாதிய அடுக்கும் அதில் காணப்படும் இறுக்கமுமே விளங்குகிறது.

அந்தந்த பகுதிகளில் வாழ்ந்த மக்கள் இந்த பார்ப்பனிய திணிப்புக்குக் காட்டிய எதிர்ப்பை அளவிடும் அளவுகோலாக அங்கே வாழும் தலித் மக்கள்தொகையின் அளவு சுட்டிக்காட்டி நிற்கிறது. ஏனெனில் ஒவ்வொரு ஊருக்கு வெளியிலும் ஒதுக்கி வைக்கப்படும் மக்கள் பார்ப்பனியத்தை ஏற்றுக்கொள்ளாமல் எதிர்த்து நின்றவர்களே. அந்தந்த ஊர்களில் வாழும் மக்களின் உடன்பிறப்புகளே என்பதை வரலாற்றுபூர்வமாக அம்பேத்கரின் தீண்டத்தகாதவர்கள் குறித்த தொகுப்பு நூல் ஐயமற நிறுவுகிறது.

பார்ப்பனிய-பௌத்த கோட்பாடுகளின் மோதல்

வேத காலத்துக்குப் பின்பு நால்வர்ண சாதியமுறையை எதிர்த்து சமத்துவத்தைப் போதித்த பௌத்த மதத்தை தங்களின் அடையாளமாக ஏற்றுக்கொண்ட வேளாண்குடிகள் தங்களுக்குள் ஒன்றிணைந்து இனக்குழுக்களின் கூட்டமைப்பை சிந்து சமவெளி பகுதிக்கு வெளியில் கங்கை சமவெளிப் பகுதியில் (இன்றைய பீகார்) உருவாக்கிக் கொள்கிறார்கள். தெற்கே கர்நாடகம், ஆந்திரம் வரை பரவி இருந்த மௌரிய பேரரசாக அறியப்பட்ட இந்த கூட்டமைப்பு பார்ப்பன தளபதி புஷ்யமிங்கன் மௌரிய அரசனான பிருகரதனை கொலைசெய்து அரியணை ஏறுவதில் இருந்து உடைப்பைச் சந்திக்கிறது. பார்ப்பனியம், பௌத்தம் ஆகிய இரு கோட்பாடுகளின் மோதலை தோற்றுவிக்கிறது.

பார்ப்பனியம் உருவாக்கிய தீண்டாமை

விவசாய வளர்ச்சியின் காரணமாக உருவாகும் பலனை செல்வத்தை அபகரிக்கும் வர்க்க உணர்வுக்கு இசைவாகப் பொருளாதார ரீதியாகவும் சமூக ரீதியாகவும் அசமத்துவத்தை நிலைநிறுத்தும் பார்ப்பனியம் ஆளும் வர்க்கத்தின் தெரிவாக மாறுகிறது. இயல்பாகப் பெருவாரியான மக்கள் சமத்துவத்தைப் போற்றும் பௌத்தத்தைத் தெரிவு செய்கிறார்கள். ஆளும் வர்க்கம் மக்களுக்கு நிலத்தின் மீது இருந்த உரிமைகளை பிடுங்கிக் கொண்டு உணவுக்கு கையேந்தும் நிலையை உருவாக்கி பார்ப்பனியத்தை அவர்கள் மீது திணிக்கிறார்கள். இதனை ஏற்க மறுத்து சண்டையிடுபவர்களை ஒதுக்கி தீண்டத்தகாதவர்கள் என்ற புதிய பிரிவை உருவாக்குகிறார்கள். இந்த போராட்டத்தில் பார்ப்பனியம் வெற்றி பெறுகிறது. குப்தர்களின் காலத்தில் சாதிய உருவாக்கம் முழுமையடைந்து புதிய வடிவில் பார்ப்பனியம் மீட்சியாகிறது. இந்தக் காலத்துக்குப் பிறகு மக்களினங்களுக்கு இடையிலான இனக்கலப்பு நின்று போனதை சமீபத்தில் நடந்த மரபணு ஆய்வு உறுதி செய்கிறது.

பார்ப்பனிய எதிர்ப்பும் தீண்டாமை அதிகரிப்பும்

இந்தப் போராட்டம் நடந்த பஞ்சாப் (32%), இமாச்சலப்பிரதேசம் (25.19%), அரியானா (20.17%), உத்தரகாண்ட் (18.76%), உத்தரப்பிரதேசம் (20.70%), பீகார் (15.91%), மேற்கு வங்கம் (25.51%) ஆகிய மாநிலங்களில் வாழும் தலித் மக்களின் விழுக்காட்டு அளவு இந்திய சராசரிக்கும் (16.63%, 2011) அதிகமாக இருக்கிறது. 1951இல் எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்படி மொத்த இந்திய மக்களில் தலித் மக்களின் அளவு 14.38%. அதில் உத்தரப்பிரதேசத்தில் வாழ்ந்த தலித் மக்கள் 22.22%, பீகார், ஒரிசா, மேற்கு வங்க பகுதியில் 25% ஆக இருந்தது இந்த எண்ணிக்கையின் ஒப்புமையையும் கருத்தோட்டத்தின் ஏற்புடைமையையும் காட்டுகிறது.

தெற்கின் தெரிவு

மௌரிய அரசன் படுகொலை செய்யப்பட்டு வடக்கில் பௌத்த-பார்ப்பனிய மோதல் நடந்து கொண்டிருந்தபோது தெற்கில் ஆந்திர கர்நாடக பகுதிகளில் பௌத்தத்தை அடிப்படையாகக்கொண்ட இனக்குழுக்களின் கூட்டு தொடர்கிறது. அங்கே பார்ப்பனியம் வெற்றி பெற்றுக் கொண்டிருந்தபோது பௌத்த-சமண மதங்கள் இங்கே வலுவடைகிறது. பார்ப்பனியத்தை நிலைநிறுத்திய குப்தர்களின் காலத்தில் பௌத்தம் தமிழகம் மற்றும் இலங்கை முழுக்க பரவி களப்பிரர்களின் தலைமையிலான இனக்குழுக்களின் கூட்டமைப்பு ஏற்படுகிறது. வடக்கில் மக்களை ஐந்தாகப் பிளவுபடுத்தி செல்வத்தை ஓரிடத்தில் குவிக்க உதவும் பார்ப்பனிய சிந்தாந்தத்தை கைக்கொண்ட குப்தர்களின் ஆட்சி மத்திய கிழக்கில் இருந்து வந்த முஸ்லிம்களின் படையெடுப்பை ஒன்றிணைந்து எதிர்கொள்ளும் வலுவை இழந்து ஆறாம் நூற்றாண்டில் தோல்வியைத் தழுவுகிறது. இந்தக் காலகட்டத்தில் தெற்கின் விவசாய வளர்ச்சியும் செல்வ பெருக்கமும் அதனை அரசனிடம் குவிக்க உதவும் பார்ப்பனியத்தை இந்த மன்னர்கள் ஏற்க தயாராகிறார்கள்.

தெற்கில் பார்ப்பனர்களின் குடியேற்றம்

இதுவரை வடக்கில் மக்களை சாதியாகப் பிளந்து மக்கள் சமூகம் எதிர்ப்பின்றி எல்லாவற்றையும் ஏற்க செய்யும் ஆளும்வர்க்கத்துக்கான சிறப்பு சேவை செய்து வந்த பார்ப்பனர்கள் அங்கே வேலை இழந்து தெற்கு நோக்கி இங்குள்ள மன்னர்களின் அழைப்பை ஏற்று இடம் பெயர்கிறார்கள். வாழ்விழந்தவர்கள் வழிதேடி செல்வது இயல்புதானே. தமிழகத்தின் காஞ்சிபுரம் உள்ளிட்ட ஆந்திரம், கர்நாடகப் பகுதிகளை ஆட்சி செய்தவர்கள் முதலில் பார்ப்பனியத்தை ஏற்கிறார்கள். இந்த காலவரிசையில் கடைசியாக சோழ, பாண்டிய அரசுகளின் எழுச்சியில் பார்ப்பனியத்தை ஏற்கிறது தமிழகம்.

கடைசியாக பார்ப்பனியத்தை ஏற்ற-எதிர்த்த தமிழகம்

இந்தக் காலதாமதம் தமிழகத்தின் மக்கள் சாதிய பிளவின்றி ஒற்றுமையாக இருந்து ஒரு பேரரசாக எழுவதற்கான அடிப்படையையும் இப்படி எழுந்த சோழ மன்னர்களிடம் இந்த நிலப்பரப்புக்கு மேலே மக்களை சாதியாக பிளந்து ஒற்றுமையின்றி வைத்திருந்த அரசுகள் வீழ்வதற்கும் அடிப்படையாக இருக்கிறது. இறுதியில் சோழர்களும் மற்றவர்களைப் போலவே வடக்கில் இருந்து பார்ப்பனர்களை பெரும்கூட்டமாக அழைத்து வந்து குடியேற்றி மக்களை சாதியாகப் பிரிக்கிறார்கள். இதற்கு எழுந்த கடுமையான எதிர்ப்பு தலித் மக்களின் எண்ணிக்கையில் பிரதிபலிக்கிறது. 1951ஆம் ஆண்டு கணக்கின்படி இந்திய மொத்த தலித் மக்களில் தென்னிந்தியாவில் வாழ்ந்த மக்களின் அளவு 21.44% (சராசரி 14.38%). 2011ஆம் ஆண்டு கணக்கீட்டின்படி ஆந்திரம் (16.61%), கர்நாடகம் (17.15%) மாநிலங்களைவிட தமிழகத்தின் மொத்த மக்கள்தொகையில் 20.01 விழுக்காட்டினர் தலித் மக்கள். பேரரசுகளின் மையங்களாக விளங்காத அவர்களின் ஒரு பகுதியாக விளங்கிய குஜராத் (6.74%), மகாராஷ்டிர (11.81%) மாநிலங்களில் (1951 கணக்கின்படி 6.04%) இந்திய சராசரிக்கும் குறைவாகவே தலித் மக்கள் வாழ்வது இந்தக் கருத்தோட்டத்தை மேலும் உறுதி செய்கிறது.

மொழி ஒற்றுமை சார்ந்த ஒன்றியம்

இப்படி மக்கள் இந்தியா பல்வேறு பகுதிகளில் பல நூறு சாதிய இனக்குழுக்களாக வாழும் மக்களுக்கு இடையிலான தொடர்பை சுட்டும் கூறாக அவர்களின் மொழியே முக்கிய இடம் பிடிக்கிறது. இதில் காணப்படும் ஒற்றுமையும் வேற்றுமையும் அவர்களின் வாழ்விடம் சார்ந்த வரலாற்று வளர்ச்சியைத் தெளிவாக உணர்த்தி நிற்கிறது. இந்த மறைக்க இயலாத ஒற்றுமையின் அடிப்படையில் இந்தியா சுதந்திரம் அடைந்தபோது பல மாநிலங்களாகப் பிரிக்கப்பட்டு அவர்கள் வாழ்ந்து வந்த நிலத்தில் அவர்களுக்கான பொருட்களை உற்பத்தி செய்யவும், அந்த பகுதிக்குள்ளும் அதற்கு வெளியிலும் பொருட்களைப் பகிர்ந்து கொள்ளவும், வரிவிதிப்பின் மூலம் அவற்றை அந்தப் பகுதி மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகள் கட்டுப்படுத்தவுமான உரிமைகள் வழங்கப்பட்டன. இந்த உரிமைகளைக் கொண்ட நிலப்பகுதிகள் இணைந்த இந்திய ஒன்றியம் உருவாக்கப்பட்டது.

இந்த வரலாற்று வளர்ச்சிக்கு வெளியில் இந்த சாதிய கட்டமைப்புக்குள் முழுமையாக உள்வாங்கப்படாத இசுலாமிய மக்கள் இதிலிருந்து வெளியேறி தனி நாட்டை அமைத்துக் கொண்டார்கள். இந்த சாதிய கட்டமைப்பில் சற்று மாறுபட்ட சீக்கிய பஞ்சாப்பின் தனிநாடு கோரிக்கை அப்போது புறம்தள்ளப்பட்டது. இப்படிப் பிரிக்கப்பட்ட எல்லைக்குள் அந்தந்த பகுதி மக்கள் தங்களின் வரலாற்று வழிப்பட்ட வளர்ச்சியின் போக்கில் தங்களுக்குள்ளான முரண்பாடுகளை மோதி தீர்த்துக்கொண்டும் தமது உணவு, உடை, இருப்பிடம், கல்வி, சுகாதாரம் போன்ற வாழ்வாதார தேவைகளுக்கான அரசியல் போராட்டங்களையும் மேம்பட்ட வாழ்வுக்கான பொருளாதார மாற்றங்களையும் ஏற்படுத்திக் கொண்டு வந்தார்கள்.

பஞ்சாப்பின் சாதிய இணக்கம்

இந்திய மாநிலங்களின் வரலாறு வேறாக இருக்கும்போது அவர்களின் முன்னேற்றமும் ஒன்றாக இருக்க இயலாது. பதினாறாம் நூற்றாண்டில் நிலவிய முகலாய ஆட்சியாளர்களின் ஆதிக்கத்திற்கு எதிராகவும் சாதி மற்றும் மத ரீதியாகப் பிரிந்து கிடந்த மக்களை ஒன்றிணைக்கும் பொருட்டும் இந்து-இஸ்லாமிய மத கூறுகளை இணைத்து சாதியை மறுத்த சீக்கிய மதத்தை சத்திரியரான நானக் தோற்றுவித்தார். (சத்திரியருக்கும் வேளாண் குடிகளுக்குமான வரலாற்று தொடர்பை அது சார்ந்த வரலாற்று தேடலின்போது பார்ப்போம்) இயல்பாகவே அது இவ்விரண்டாலும் ஒடுக்கப்பட்டு வந்த பிற்படுத்தப்பட்ட, தலித் மக்களிடம் வரவேற்பைப் பெற்று அந்தப் பகுதி முழுக்க பரவியது. அக்பரின் காலத்தில் அரசின் ஆதரவைப் பெற்று அதிகாரத்தை நோக்கி நகரும்போது அது பிற்படுத்தப்பட்ட சத்திரிய சாதியக் குழுக்களின் கூட்டாக மாற்றம் கண்டு தலித் மக்களை அதிலிருந்து தள்ளி வைத்தது அல்லது அவர்களின் முதுகில் குத்தியது. அவர்களை அதே அடிமைதளத்தில் நிறுத்தியது. பஞ்சாப் வரலாற்றில் நடந்த இந்த அரசியல் நகர்வு சாதிய அடுக்கில் பிற்படுத்தப்பட்ட சத்திரிய சாதிகளுக்கு இடையிலான இடைவெளியைக் குறைத்து அவர்களுக்குள் ஒரு இணக்கத்தை உருவாக்கியது.

தமிழகம் எதிர்கொண்ட முரண்பாடுகள்

தமிழகத்தைப் பொறுத்தவரை பார்ப்பனர்கள், பிற்படுத்தப்பட்டவர்கள், தலித்துகள் என மூன்று முக்கிய பிரிவுகள் மட்டுமே. சுதந்திரத்திற்கு பிறகான தமிழகம் இந்த நிலப்பரப்புக்குள் அரசியல் அதிகாரத்தில் ஆதிக்கம் செலுத்திய பார்ப்பனர்களுக்கும் பொருளாதார ரீதியாக வலுவாக இருந்த பெருநிலக்கீழார்களுக்குமான முரண்பாட்டையும் இதற்கு வெளியில் இருந்து வந்த வடநாட்டு மூவர்ணத்தாரின் அரசியல் பண்பாட்டு ஆதிக்கத்தையும் எதிர்கொண்டது. பெருநிலக்கீழார்களின் நலனை முன்னிறுத்தும் பார்ப்பனர் அல்லாதார் இயக்கத்தை பெரியார் எல்லா மக்களின் நலனையும் உள்ளடக்கிய சமூகநீதி இயக்கமாகக் கட்டி அரசியல் இயக்கமாக மாற்றினார். இந்த ஒருங்கிணைந்த மக்கள் அரசியல் பார்ப்பனர்களின் அரசியல் ஆதிக்கத்துக்கு எதிராக வெற்றியைப் பெற்றுக் கொடுத்தது. வெளியில் இருந்து வந்த ஆதிக்கத்தை தடுத்து நிறுத்தியது. வெற்றி பெற்ற இடைநிலை சாதிகளை அரசியல் அதிகாரத்தில் அமர்த்தியது. பெருநிலகீழார்கள் நிலத்தில் செலுத்திய முற்றுருமையை தளர்த்தியது. இதுவரையிலும் அரசியல் பொருளாதாரத்தில் புறக்கணிக்கப்பட்டு வந்த மக்களை அரசியல் அரங்குக்குள் கொண்டு வந்தது.

தமிழகத்தின் தனித்துவம்

சீனாவில் நடந்ததைப் போல நிலத்துக்கான பொருளாதார போராட்டமாக அல்லாமல் அடிப்படையில் இது நிலவுடைமையாளர்களின் போராட்டமாக இருந்ததால் அங்கு நடந்ததைப் போல இந்தப் போராட்டம் நிலமற்ற மக்களுக்கு நிலத்தைப் பெற்றுக் கொடுக்கவில்லை. இந்த அரசியல் வெற்றி சமூகநீதிக்கான வெற்றியாகவும் இருந்திருக்கவில்லை. அதனால்தான் தான்கொண்ட கொள்கைக்கு நேர்மையாக இருந்த பெரியார் அதற்கான போராட்டத்தைத் தொடர்ந்தார். அது பஞ்சாப்பில் நடந்ததைப் போல இடைநிலை சாதிகளுடன் இணைந்து போராடிய தலித் மக்களின் முதுகில் குத்துவதாக அல்லாமல் அந்த மக்களும் மற்ற ஒடுக்கப்பட்ட சாதியினரைப் போலவே கல்வி வேலைவாய்ப்புகளில் பங்கெடுத்து இந்த சமூக மாற்றத்தில் பலனடைய வழிசெய்தது. அது இடைநிலை சாதிகளுக்கும் தலித் மக்களுக்குமான சமூக இடைவெளியைக் குறைத்தது.

மூவர்ணத்தாரின் உலகமயத்துடனான முரண்பாடு

பஞ்சாப்பில் கல்விக்கான முன்னேற்றம் எண்பதுகளில் நடந்த காலிஸ்தான் போராட்டத்தினால் ஏற்பட்ட சாதிய தளர்வு மற்றும் உலகமயத்தின் அறிமுகம் காரணமாகவே மாற்றம் காண்கிறது. மற்ற இந்தியப் பகுதிகளைப் பொறுத்தவரையில் உலகமயம் வரும்வரை காத்திருக்க வேண்டி வந்தது. அப்போது கல்வி, வேலைவாய்ப்பு மற்றும் தொழிற்துறையில் ஆதிக்கம் செலுத்திய முதல் மூவர்ணத்தாரின் உலகமயத்துடனான முரண்பாடும் அதில் அடைந்த தோல்வியும் மற்ற பகுதி மக்களுக்குக் கல்வி வேலைக்கான வாய்ப்பையும் தமிழகத்திற்கு தொழிற்துறையில் கால்பதித்து வளர்வதற்கான வாய்ப்பையும் பெற்றுத் தந்தது.

தமிழகம் தவறவிட்ட வாய்ப்பு

மக்களுக்கு அடிப்படையான உணவை உறுதி செய்து குழந்தைகளுக்குக் கல்வி, ஊட்டச்சத்து, மருத்துவம் ஆகியவற்றை எல்லா மக்களுக்கும் வழங்கி தொழில்துறை வளர தேவையான மனிதவளத்தையும் திறன்மிக்க தொழிலாளர்களையும் கொண்டிருந்த தமிழகம் வேகமாக வளர்ச்சி கண்டது. பரந்துபட்ட மக்களின் வருமானம் பெருகியதை அடுத்து மக்களின் வாழ்க்கைத்தரம் உயர ஆரம்பித்தது. தலித் மக்களுக்கும் மற்ற மக்களுக்கும் சமூக ரீதியிலான ஏற்றதாழ்வுகள் தொடர்ந்தாலும் பொருளாதார ரீதியாக இருந்த இடைவெளியைக் குறைக்க ஆரம்பித்தது. ஆனால் வளர்ச்சியைத் தக்கவைக்க அடிப்படையான விவசாய உற்பத்தியைப் பெருக்கி விவசாயிகளின் வருமானத்தைப் பெருக்கி உள்நாட்டு பொருளாதாரத்தை வலுவாக்காமல் அது நலிவடைய விடப்பட்டது.

பெரும் உழைப்பில் முதலீட்டில் தமிழக வேளாண் பல்கலைக்கழகத்தில் உருவாக்கப்பட்ட திறன்வாய்ந்த பட்டதாரிகளையும் விஞ்ஞானிகளையும் தமிழக விவசாயத்தை வளர்க்க பயன்படுத்திக் கொள்ளாமல் வெளிநாடுகள் செலவின்றி நமது மனிதவளத்தை பயன்படுத்திக் கொள்ள விடப்பட்டது. இறக்குமதி செய்யப்பட்ட தொழில்நுட்பங்களைக் கொண்டு ஏற்றுமதி சார்ந்த பொருளாதாரத்தை ஊக்குவித்த அதேவேளை அவற்றில் தற்சார்பை எட்டும் வகையில் தமிழக நிறுவனங்களின் தொழில்நுட்ப தேவையை பூர்த்தி செய்யும் வகையில் பல்கலை கழகங்களின் தரத்தையும், கல்வியின் தரத்தையும், புத்தாக்கங்களுக்கான உத்வேகத்தையும் அளிக்காமல் உயர் கல்வித்துறை ஊழல்மயபடுத்தப்பட்டு சீரழிய விடப்பட்டது. ஒன்றியத்தின் மீதான மூவர்ணத்தின் பிடி தளர்ந்திருந்த வாய்ப்பை பயன்படுத்தி திராவிட அரசியல் தொடங்கிய போது கேட்ட மாநிலத்தின் சுயாட்சி உரிமைகளை வலுப்படுத்தும் வாய்ப்பை தவறவிட்டது. சீனாவைப் போல கல்வியில், மனிதவள குறியீட்டில், ஏற்றுமதி பொருளாதாரத்தைக் கட்டுவதில் வெற்றி கண்ட தமிழகம் அவர்களை போல தொலைநோக்கு பார்வையில் தற்சார்பை அடையும் வழிகளைக் காணாமல் விட்டுவிட்டது.

மேலாதிக்கத்தை மீண்டும் நிறுவும் மூவர்ணத்தார்

தற்போது இறங்குமுகத்தில் இருக்கும் அமெரிக்க ஏகாதிபத்தியம் ஏறுமுகத்தில் இருக்கும் சீனாவுடன் முரண்பட்டு நிற்கிறது. இந்திய மூவர்ணத்தார் இழந்த தமது ஆதிக்கத்தை யாரிடம் தோற்றார்களோ அவர்களுடன் இணைந்து கொண்டு மீட்டு வருகிறார்கள். முன்பு இந்திய தொழில்துறையை விலையுயர்ந்த பொருட்களுக்கான சந்தையைக் கைப்பற்றும் நோக்கில் வந்த அமெரிக்கா இன்று அத்தியாவசிய பொருட்களுக்கான சந்தையை கைப்பற்றி வருகிறது. அதற்குத் தடையாக இருக்கும் சட்டங்களை உடைத்து வருகிறது. வரையறுக்கப்பட்ட மாநில எல்லைகளை இல்லாமல் ஆக்குகிறது. இந்த எல்லைக்குள்ளும் அதற்கு வெளியிலும் பொருட்களைப் பரிமாறிக்கொள்வதில் மீதிருந்த மாநிலங்களின் உரிமைகளை இல்லாமல் ஆக்கி வருகிறது.

ஒன்றியம் ஒரே நாடாக

விலை குறைந்த பொருளுற்பத்தி முதல் உணவுக்கான விவசாய உற்பத்தி வரை அதன் கட்டுப்பாட்டில் கொண்டு வந்துகொண்டிருக்கிறது. இந்திய ஒன்றியம் எந்த எல்லையுமற்ற ஒரே நாடாகவும் ஒரே சந்தையாகவும் பொருட்களை விற்க ஒரே வரி கொண்ட நாடாகவும் மாறி இருக்கிறது. தொழிற்துறை உற்பத்தியை பணமதிப்பிழப்பு நடவடிக்கையும் ஜிஎஸ்டி வரிவதிப்பு முறையும் கண்காணித்து கட்டுப்படுத்தும் நோக்கம் கொண்டது என்றால் விவசாய திருத்த சட்டங்கள் விவசாய நிலங்களை கைப்பற்றும் நோக்கம் கொண்டது. இதனை வணிகர்கள் தொழிலாளர்கள் என பாதிக்கப்படும் அனைவரையும் திரட்டி தடுத்து நிறுத்துவதற்கு சமூக அடிப்படைகளைக் கொண்டிருந்தாலும் அவர்களுடன் அணுக்கமாகச் சென்று காரியம் சாதித்துக் கொள்ளும் பார்ப்பனிய சிந்தனையுடன் தில்லிக்கு காவடி எடுத்துக் கொண்டிருக்கிறார்கள். தமது நிலங்களை இழந்து விடுவோம் என்று தெரிந்தவுடன் பஞ்சாப் போர்க்கோலம் கொண்டு சத்திரிய-சூத்திர-தலித்துகள் கூட்டணியை ஏற்படுத்திக்கொண்டு தெருவில் இறங்கி போராடி வருகிறது. இந்த விவசாயம், தொழில் கல்வி என அனைத்திலும் பின்னடைவைச் சந்தித்துக் கொண்டிருக்கும் தமிழகம் இதனை எப்படி அரசியல் ரீதியாக எதிர்கொள்ளப் போகிறது என்பதைப் பொறுத்தே அதன் எதிர்காலம் இருக்க போகிறது.

சரி இந்த நிலங்களைக் கைப்பற்றி என்ன செய்ய போகிறார்கள்? அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.

கட்டுரையாளர் குறிப்பு

பாஸ்கர் செல்வராஜ்

தைவான் தேசிய பல்கலைக்கழகத்தில் மின்கலங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகிறார். வேதியியல் தவிர பொருளாதாரம் - அரசியல் - பூகோள அரசியல் - சமூக மாற்றங்கள் குறித்து பகுத்தறிந்து கொள்வதில் ஆர்வம்கொண்டவர். சர்வதேசம், இந்தியா, தமிழ்நாடு என ஒன்றுக்கொன்று பின்னிப்பிணைந்த பொருளாதார, தொழில்நுட்பச் சங்கிலி பற்றியும் அரசியல், சமூக மாற்றங்கள் பற்றியும் தொடர்ந்து வாசித்து, ஆராய்ந்து வருபவர்

தொடர்புக்கு naturebas84@gmail.com

கருத்துகள் இல்லை: