வியாழன், 18 பிப்ரவரி, 2021

துபாய் இளவரசி லதீபா சிறையில். மனித உரிமையாளர்கள் கேள்வி

tamil.samayam.com: துபாய் மன்னர் ஷேக் முகமதுவின் மகளும், துபாய் இளவரசியுமான லதீபா அல் மக்தோம் 2018ஆம் ஆண்டு நாட்டை விட்டே வெளியேற முயற்சித்தார். அவரது முயற்சிகள் தடுக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பில் வைக்கப்பட்டார். இந்நிலையில், லத்திபா ஒரு தனி வில்லாவில் அடைத்துவைக்கப்பட்டிருப்பதாக வீடியோ ஆதாரம் வெளியாகியுள்ளது. லதீபா தான் அடைக்கப்பட்டிருக்கும் வில்லாவில் இருந்து ரகசியமாக வீடியோ எடுத்து வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பிபிசி ஊடகம் வெளியிட்டுள்ளது. வில்லாவின் பாத்ரூமில் இருந்துகொண்டு அந்த வீடியோவை அவர் பதிவு செய்திருப்பதாக தெரிகிறது. தனது விருப்பத்தின் பேரில் பாத்ரூமில் மட்டுமே அவர் தனியாக இருக்க முடியுமென தெரிகிறது. மற்ற கதவுகள், ஜன்னல்கள் அனைத்தும் மூடப்பட்டிருப்பதாக அவர் கூறுகிறார்.

வீடியோவில் லதீபா பேசுகையில், “நான் இங்கு அடைத்துவைக்கப்பட்டிருக்கிறேன். இந்த வில்லா ஒரு ஜெயிலாக மாற்றப்பட்டுள்ளது” என்று வேதனையுடன் தெரிவித்துள்ளார். லதீபா அடைத்து வைக்கப்பட்டிருப்பது குறித்து பிரிட்டன் அரசு வருத்தம் தெரிவித்துள்ளது. லதீபா உயிருடன் இருக்கிறார் என்பதற்கு ஆதாரம் காட்ட வேண்டுமென பிரிட்டன் அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து பிரிட்டன் வெளியுறவுத் துறை அமைச்சர் டாமினிக் ராப் பேசியபோது, “அவர் அடைத்துவைக்கப்பட்டிருப்பது மிகவும் வருத்தத்திற்குரியது. ஒரு இளம் பெண் இப்படி கொடுமைப்படுத்தப்படுவதை நம் கண்ணால் பார்க்க முடிகிறது. இதுகுறித்து ஐநா சபை நடவடிக்கை எடுக்கும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: