சனி, 12 ஜனவரி, 2019

மாதவிடாய் காலத்தில் 2 குழந்தைகளுடன் தனிமைப்படுத்தப்பட்ட தாய்! - 3 பேரும் உயிரிழந்த சோகம்

மாதவிடாய்விகடன் : மாதவிடாய் காரணமாக ஒதுக்கி வைக்கப்பட்ட பெண் மற்றும் அவரின் இரண்டு குழந்தைகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது. மாதவிடாய் காலத்தில் பெண்களைத் தனிமைப்படுத்தும் நிகழ்வுகள் இன்றளவும் தொடர்ந்து கொண்டேதானிருக்கின்றன. இது தொடர்பாக விழிப்பு உணர்வுகள் ஏற்படுத்தியும், தனிமைப்படுத்தும் நடைமுறை நீங்கியபாடில்லை. குறிப்பாக கிராமங்களில் புற்றீசல்கள் போல பெருகிக்கொண்டேயிருக்கிறது. இதனால், உடல்சார்ந்த பிரச்னைகளுடன், மனதளவிலும் பெருமளவில் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர். தீண்டாமையின் மற்றொரு வடிவமாகத்தான், மாதவிடாய் காலத்தில் தனிமைப்படுத்தும்  நிகழ்வு உருவெடுத்து நிற்கிறது. பரம்பரை பரம்பரையாக தொடர்வதற்கு வீட்டிலிருக்கும் மூதாதையர்கள் முக்கிய காரணம். வழிவழியாக கடைப்பிடிக்கும் இந்த நடைமுறையால்தான் நேபாளத்தில் மூன்று உயிர்கள் பறிபோயிருக்கின்றன. பொதுவாக நேபாளத்தில் பெண் மாதவிடாய் அடையும் காலங்களில்,  சுத்தமற்றவர் என்று கூறி அவர்களை தனிமைப்படுத்தியும், வீட்டை விட்டு ஒதுக்கி வேறொரு இடத்தில் தங்க வைக்கும் வழக்கமும் இருந்துவருகிறது. இந்த வழக்கம் `சஹௌபாடி' என்று அழைக்கப்படுகிறது.

நேபாள மொழியில் பெண்களின் மாதவிடாயைக் குறிக்கும் இந்த சொல், அத்தகைய காலத்தில் இவர் சுத்தமற்றவர் என்ற பொருளையும் தருகிறது. இந்தப் பெண்கள் மாதவிடாய் காலங்களில் வீட்டை விட்டு வெளியேறி தனிமைப்படுத்தப்பட்டு குடிசைகளில் தங்கிருக்க வேண்டும். ஒழுங்கான படுக்கை வசதிக்கூட இல்லாத இந்தச் சின்ன குடிசைகளில் தங்கிருக்கும் வழக்கத்தை அப்பகுதியில் இருக்கும் பெரும்பாலானோர் கடைப்பிடித்து வருகின்றனர்.அவ்வாறு தனியாக தங்கியிருக்கும் பெண்கள் சமைக்க முடியாது, ஊட்டச்சத்து மிக்க உணவு சாப்பிட முடியாது. கிராம நீர் ஆதாரங்களிலிருந்து நீர் அருந்த மற்றும் குளிக்கக்கூடாது என்றெல்லாம் கட்டுப்பாடு விதிக்கப்படுகிறது. வீட்டிலிருக்கும் சகோதரர்கள் `சஹௌபாடி' முறையை எதிர்த்தாலும் தாய், தந்தை கட்டாயப்படுத்துவதாக குற்றம் சாட்டப்பட்டுகிறது. மேலும், `மாதவிடாய் காலங்களில் பெண்கள் தொட்டால் சுகவீனம் ஏற்படும்' என்றும் அப்பகுதி ஆண்கள் நம்புகின்றனர். இப்படியான நிலையில், நேபாளத்தில் உள்ள பஜூரா மாவட்டத்தில் வசிக்கும் 35 வயதான பெண் ஒருவர், அவரது பிள்ளைகளுடன், மாதவிடாய் காலம் என்பதால் வீட்டிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்திருக்கிறார்.

குடிசையிலிருந்த அவர்கள் மூவரும் இன்று காலை பிணமாக கிடந்துள்ளனர். இதுகுறித்து விசாரணை அதிகாரி ஒருவர் கூறுகையில், ``அப்பகுதியில் நிலவும் கடுமையான குளிரிலிருந்து தற்காத்துக்கொள்ள அவர்கள் விறகுகளை எரித்தும், தீ மூட்டியும் குளிர் காய்ந்திருக்கலாம். 3 பேர் வசிக்க அந்தச் சிறிய குடிசையில் போதிய இடவசதி இல்லை. இதன் காரணமாக உடைகளில் தீப்பற்றி அவர்கள் இறந்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. சம்பந்தபட்ட குடும்பத்தார் மீது வழக்கு பதிவு செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த நடைமுறையானது அந்நாட்டு உச்ச நீதிமன்றத்தால் கடந்த 2005-ம் ஆண்டு தடைசெய்யப்பட்டது. தடையை மீறுபவர்களுக்கு 3 மாதங்கள் சிறையும் 3,000 அபராதமும் விதிக்கப்படும் என தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த நடைமுறையால் ஒதுக்கிவைக்கப்படும் பெண்கள், காட்டுவிலங்குளால் தாக்கப்படுவதும், அசுத்தமான இடங்களின் மூலம் பல்வேறு நோய்களுக்கு ஆளாவதும் வாடிக்கையாகியுள்ளது’’ என்றார்.

கருத்துகள் இல்லை: