வியாழன், 10 ஜனவரி, 2019

ராமநாதபுரம் குடிநீர் தொட்டியில் சடலம்: மறைக்கும் அமைச்சர்!

minnambalam : ராமநாதபுரம் குடிநீர் தொட்டியில் சடலம்: மறைக்கும் அமைச்சர்!ராமநாதபுரம் நகராட்சி குடிநீர்த் தொட்டியில் மூன்று நாட்களாகக் கிடந்த ஆண் சடலத்தால் நகர மக்களிடையே இன்னும் அச்சம் தீரவில்லை. சடலம் மூழ்கிக் கிடந்த தண்ணீரையே மூன்று நாட்களாகக் குடித்து வந்ததால் பதற்றத்திலும், பயத்திலும் இருக்கிறார்கள் மக்கள்.
இதுபற்றி நேற்று மின்னம்பலம் தமிழின் முதல் மொபைல் தினசரியில் குடிநீர்த் தொட்டியில் மனித உடல்: பீதியில் ராமநாதபுரம்! என்ற தலைப்பில் விரிவாக செய்தி வெளியிட்டிருந்தோம். இந்நிலையில் இன்று ஜனவரி 10ஆம் தேதி காலை அந்த உடல் பிரேதப் பரிசோதனை நடத்தப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. கை மற்றும் சில உடல் பகுதிகளில் பிளேடால் அறுத்துக்கொண்டு தண்ணீர் தொட்டிக்குள் விழுந்து தற்கொலை செய்துகொண்டார் என்று பிரேதப் பரிசோதனை செய்த டாக்டர்களை மேற்கோள் காட்டி கூறுகிறார்கள் இறந்தவருடைய நண்பர்கள்.

மேலும் குடிநீர்த் தொட்டியை சுத்தம் செய்து வருவதால் நான்கு நாட்களுக்கு நகராட்சி தண்ணீர் விடுவது நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. நம்மிடம் பேசிய மதிமுகவின் ராமநாதபுரம் மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் அரு.சுப்பிரமணியன், “ராமநாதபுரம் நகராட்சி செயல்படாத நகராட்சி என்பது இப்போது நிரூபணமாகியுள்ளது. 10 லட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட குடிநீர்த் தொட்டிக்கு காவலாளி நியமிக்கவில்லை.
தினமும் தண்ணீர் திறந்துவிடும் ஆபரேட்டர் தண்ணீர் நிரப்புவதற்கு முன் தொட்டியைப் பார்வையிட வேண்டும். நிறைந்துவிட்டது என்று உறுதிபடுத்தியபின், நீரை மக்கள் பயன்பாட்டிற்கு திறந்து விடவேண்டும். அவர் மேலே சென்றிருந்தால் அங்கே கிடந்த பிளேடுகள், ரத்தக் கறையை பார்த்திருப்பார். மூடியும் திறந்து கிடந்தது தெரிந்திருக்கும். ஆக, ஆபரேட்டர் மேலே செல்லவே இல்லை.
அடுத்ததாக சானிடரி அதிகாரியின் பணி. அவர் தினமும் நீரின் மாதிரியை எடுத்து சென்று பாக்டீரியா அளவு மற்றும் இந்த நீர் குடிக்க உகந்ததா என்று அரசு மருத்துவமனையில் உள்ள மருத்துவ பரிசோதனை நிலையத்தில் தகவல் பெற்று பின்னர் அதை தலைமை மெடிக்கல் ஆபீசரிடம் கையெழுத்து பெற வேண்டும்.

தற்சமயம் அந்த பணி நிரப்பப்படாததால் சம்பந்தப்பட்ட நகராட்சி கமிஷனரிடம் ஒப்புதல் பெறப்பட்டே நீர் பயன்பாட்டிற்கு வரவேண்டும், அதைத் தாண்டி உணவு பாதுகாப்புத் துறை அதிகாரி இதை முறையாக சரிபார்க்க வேண்டும், ஆக, இச்சம்பவம் நடந்த 3 நாட்கள் இந்த பணிகள் நடைபெறவில்லை என்பதும் விளங்குகிறது” என்ற சுப்பிரமணியன், “பொதுவாக மனித உயிர் பிரிந்தவுடன் விந்தணுக்களும், மலம் மற்றும் சிறுநீர் உடலில் இருந்து வெளியேறிவிடும், அடுத்தாக உடல் அழுகி துர்நாற்றம் வீசத் துவங்கிவிடும், அந்தப் பாதுகாப்பற்ற குடிநீர்தான் கடந்த மூன்று நாட்கள் மக்களுக்கு வழங்கப்பட்டிருக்கிறது. குறிப்பாக, அரசு மருத்துவமனை இருக்கும் பகுதிகளில், இந்த குடிநீரை பெரும்பாலும் ஏழ்மை நிலையில் உள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த நோயாளிகள் நிச்சயமாக பருகி இருப்பர், குறிப்பாக குழந்தைகள்... இந்த விஷயத்தை மின்னம்பலம் தவிர வேறு எந்த ஊடகமும் பிரதானப்படுத்தவில்லை. இதற்குக் காரணம் அமைச்சர் மணிகண்டன்தான். அவரது கட்டுப்பாட்டில்தான் நகராட்சியே இருக்கிறது. அதனால் அவரை மீறி இந்த விவகாரத்தை பெரிதுபடுத்த மீடியாக்களுக்கு கட்டுப்பாடுகள் இருக்கின்றன” என்றார்.
“இந்த விஷயத்தில் ராமநாதபுரத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தங்களுக்குள் உள்ள பேதங்களை மறந்து ஒன்றுபட்டுப் போராட மதிமுக சார்பில் முன்முயற்சிகள் எடுத்து வருகிறோம். கலெக்டரை சந்தித்து இதுகுறித்து விரிவாக விளக்க அனுமதி கேட்டிருக்கிறோம். பொறுப்பற்ற நகராட்சி ஆணையர் முதல் பியூன் வரை அனைவர் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டி வலியுறுத்தி போராட்டம் நடத்த இருக்கிறோம்” என்கிறார்.
உள்ளாட்சித் தேர்தல் நடந்து மக்கள் பிரதிநிதிகள் இருந்திருந்தால் இப்படியெல்லாம் ஆகியிருக்குமா?

கருத்துகள் இல்லை: