
அவசியம்! - பேரினவாதத்தைத் தூண்டாதீர்; மஹிந்தவுக்கு சம்பந்தன் .
"புதிய அரசமைப்பு நாட்டுக்கு ஆபத்தானது அல்ல. தற்போதைய சூழ்நிலையில் இது மிகவும் அவசியம். இந்த விவகாரத்தை தவறான வகையில் தூக்கிப் பிடித்து சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டும் நடவடிக்கையில் மஹிந்த ராஜபக்ஷ அணியினர் ஈடுபடுவதை உடன் கைவிட வேண்டும்."
- இவ்வாறு வலியுறுத்தினார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் அரசியல் குழுத் தலைவரும் திருகோணமலை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன்.
அரசமைப்புப் பேரவை பிரதி சபாநாயகர் ஆ னந்த குமாரசிறி தலைமையில் இன்று காலை 10 மணிக்கு கூடியது.
இதன்போது புதிய அரசமைப்புக்கான நிபுணர்கள் மற்றும் சட்ட வல்லுநர்களின் உத்தேச வரைவுத் திட்டத்தை பிரதமர் ரணில் விக்கிரமசிங்க பேரவையில் முன்வைத்து உரையாற்றினார்.
அதையடுத்து எதிர்க்கட்சித்த தலைவர் மஹிந்த ராஜபக்ஷ உரையாற்றினார். புதிய அரசமைப்பு நாட்டுக்கு ஆபத்தானது எனவும், அது இப்போதைக்குத் தேவையில்லை எனவும் மஹிந்த தனது உரையில் தெரிவித்திருந்தார்.
இதற்குப் பதிலளித்து உரையாற்றும்போதே கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்,
"மஹிந்த ராஜபக்ஷ அணியினரே நீங்கள் தேசப்பற்றாளர்களாக நடிக்க வேண்டாம். நீங்கள் போலியான தேசப்பற்றாளர்கள். நீங்கள் படுமோசமானவர்கள். சிங்கள மக்கள் மத்தியில் பேரினவாதத்தைத் தூண்டுகின்றீர்கள்.
நீங்கள் விடுதலைப்புலிகளுக்கு எதிரான போரை முன்னெடுக்கப் பல சர்வதேச நாடுகள் உதவின. இந்தியா உள்ளிட்ட அந்த நாடுகளிடம் புதிய அரசமைப்பைக் கொண்டு வருவோம் எனவும், தேசிய இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வைக் காணுவோம் எனவும் வாக்குறுதியளித்தீர்கள். இதை நீங்கள் மறந்துவிட வேண்டும்.
தற்போதைய சூழ்நிலையில் புதிய அரசமைப்பு நாட்டுக்கு மிகவும் அவசியம். இதனூடாக மூவின மக்களும் ஒற்றுமையுடன் - நல்லிணக்கத்துடன் - சம உரிமையுடன் - அர்த்தமுள்ள அதிகாரப் பகிர்வுடன் வாழ முடியும்.
மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் புதிய அரசமைப்பு நிறைவேற்றப்பட வேண்டும். அதையடுத்து பொதுமக்களின் கருத்தறிய விட வேண்டும். இதற்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கும் எவ்வித சம்பந்தமும் இல்லை" - என்றார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக