ஞாயிறு, 6 ஜனவரி, 2019

சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்தின் தொடக்கப்புள்ளியில் விவசாயிகள் போராட்டம்


BBC : எட்டு வழிச்சாலை திட்டத்தினை கைவிட வலியுறுத்தி சேலத்தில் விவசாயிகளின் ஒருநாள் அடையாள உண்ணாவிரத போரட்டம் நடைபெற்றது. சேலம்-சென்னை எட்டு வழிச்சாலை திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும், விவசாயிகளை பாதிக்கும் இந்த திட்டத்தை முற்றிலும் கைவிட வலியுறுத்தியும், சேலம் உத்தமசோழபுரம் பகுதியில் பசுமை சாலை திட்டத்தின் ஆரம்ப புள்ளியான ஜிரோ பாயிண்ட் பகுதியிலேயே 400க்கும் மேற்பட்ட பாதிக்கப்பட்ட விவசாயிகள் ஒருநாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
சேலம்-சென்னை இடையே பத்தாயிரம் கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக எட்டு வழிச் சாலைத் திட்டம் அறிவிக்கப்பட்டு, சாலை அமைப்பதற்கான நிலம் கையகப்படுத்தும் முதற்கட்ட பணிகள் நடைபெற்றன.
இதற்கு பசுமைச் சாலைக்கான வழிகள் அறிவிக்கப்பட்ட ஐந்து மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகள் கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றனர். இது தொடர்பாக தொடரப்பட்ட வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் புதிய சாலை திட்டத்திற்கு இடைக்கால தடைவிதித்தது.இந்நிலையில் நீதிமன்றத்தில் இடைக்கால தடை உள்ள நிலையிலும் எட்டு வழி சாலைத் திட்டம் தொடர்பாக சேதிய நெடுஞ்சாலை ஆணையம் புதிய அறிவிப்பை வெளியிட்டு புதிய சாலை திட்டத்தை நிறைவேற்ற உள்ளதாக வெளியிட்ட அறிவிப்பு ஐந்து மாவட்டங்களை சேர்ந்த விவசாயிகளிடையே அதிர்ச்சியை ஏற்ப்படுத்தியுள்ளதாக விவசாயிகள் தெரிவிக்கின்றனர்.
விவசாயிகளின் எதிர்ப்பைத் தொடர்ந்து எட்டு வழிச்சாலை ஆறு வழிச்சாலையாக மாற்றப்படும் என தமிழக அரசு அறிவித்ததோடு மட்டுமல்லாது, இது தொடர்பான புதிய திட்ட அறிக்கையையும் தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் மத்திய சுற்றுச்சூழல் துறைக்கு அனுப்பியது குறிப்பிடத்தக்கது.
இந்த போரட்டத்திற்காக அனுமதியை காவல்துறையிடம் கேட்ட பொழுது அனுமதி மறுக்கப்பட்டதாகவும், ஆகையால் வேறு வழியின்றி பாதிக்கப்பட்ட விவசாயிகள் நிலத்தில் இப்போராட்டம் நடத்துவதாகவும் , அதிகாலை மிகுந்த அவசர நிலையில் இதற்கான பந்தல் போடப்பட்டதாகவும் தெரிவித்தார் மோகன சுந்தரம் என்னும் விவசாயி.
விவசாயிகளின் போராட்டத்திற்கு தொடர்ந்து தடைவிதிக்கப்படுவதால், காவல் துறையினரின் தடையை மீறி விவசாயிகள் தங்களின் சொந்த நிலத்தில் போராட வேண்டியுள்ளதாக வருத்தம் தெரிவித்தனர்.400க்கும் மேற்பட்டோர், எட்டு வழிச்சாலை திட்டத்தை கண்டித்தும் எதிர்த்தும் நடத்தும் இப்போரட்டத்திற்க்கு திமுக, பாமக, அகில இந்திய விவசாயிகள் சங்கம், தமிழ் மாநில காங்கிரஸ், கம்யூனிஸ்ட் கட்சிகள் உட்பட பல்வேறு அரசியல் அமைப்பினை சேர்ந்தவர்கள் நேரில் வந்து தங்கள் ஆதரவினை தெரிவித்தனர்.
இப்போரட்டம் குறித்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த விவசாயி செல்வராஜ், "மக்களை அகதிகளாய் மாற்றும் திட்டதினை கைவிட்டு , தண்ணீர் வளம், மண்வளம் அழிக்காமல் விவசாயத்தை பாதுகாத்தும், இயற்கை வளத்தை அழிக்காமல் போக்குவரத்தை மேம்படுத்த அரசு வழிவகை செய்யவேண்டும்" என்றார்.
விவசாயி கலா கூறும்போது, ஏற்கனவே உள்ள மூன்று தேசிய நெடுஞ்சாலைகளை விரிவுபடுத்த அரசு முயலாமல் விவசாய நிலங்களை அழிக்க நினைத்து எட்டு வழிச்சாலைக்கான திட்டம் நடைமுறைப்படுத்த அரசு முயற்சி செய்யுமானல் தங்கள் போராட்டம் தொடரும் என்றும், அரசியல் கட்சி தலைவர்கள் தங்களின் நிலை புரிந்துகொள்ள முன்வரவேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
மேலும் விவசாயி மோகனசுந்தரம் இப்போரட்டம் , எட்டு வழிச்சாலை திட்டத்தை கைவிட வலியுறுத்தி நடைபெற உள்ள தொடர் போரட்டத்திற்கான முன்னறிவிப்பான ஒரு நாள் அடையாளமே, தொடர் போரட்டத்திற்கான அறிவிப்பு பின்னர் வெளியாகும் எனத் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை: