வெள்ளி, 11 ஜனவரி, 2019

அம்பேட்கரின் கோட்பாடுகளை அடகு வைக்கும் பகுஜன் சமாஜ்.. ?

Kathiravan Mumbai : பகுஜன் சமாஜ் கட்சியின் பிரச்சகர்கள் நமது அமைப்பு
SC/ST/OBC/Minority ஆகியோரை உள்ளடக்கிய மண்ணின் மைந்தர்களின் அமைப்பு தான் நமது பகுஜன் அமைப்பு என்று சொல்லுவதுண்டு. அதனை அவர்கள் 'நாம் மூல்நிவாசிகள்' (mulnivasi) என்றும் குறிப்பிடுகின்றார்கள்.
அதாவது பார்ப்பனர்கள் இந்தியாவின் பெரும்பான்மையான மக்களை சுரண்டுவதால் அதற்கு எதிரான பூர்வகுடிகளின் அணிதிரட்டல் தான் நமது பகுஜன் சமாஜ் கட்சி என்று அவர்கள் அதற்கு விளக்கம் தருவதுண்டு.
ஆனால் காலம் மாறிவிட்டது. கட்சியில் பார்ப்பனர்கள் இப்போது நிரம்ப உள்ளனர். கட்சியின் முக்கிய பொறுப்புகளில் அவர்களின் ஊடுறுவல் அனுமதிக்கப்பட்டது. தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் கணிசமானோர் பார்ப்பனர்களாக இப்போதெல்லாம் உள்ளனர். இதெல்லாம் கூட பரவாயில்லை. ஓட்டுகள் பெற இந்த தந்திரம் தேவைதான் என்று கூட கொள்ளலாம்.

ஆனால் இப்போது இந்த 10% பார்ப்பனர் இட ஒதுக்கீடுக்கு அதுவும் பொருளாதார ரீதியிலான இட ஒதுக்கீட்டுக்கு ஆதரவு தெரிவித்ததன் மூலம் பகுஜன் சமாஜ் கட்சி இட ஒதுக்கீட்டின் அடிப்படையே காலி செய்ய வழிவகுக்கும் BJP யின் சதிக்கு உடந்தையாக இருக்கிறது.
இந்த 10% இட ஒதுக்கீடு சட்டபூர்வமாக்கப்படுமானால் அது எதிர்காலத்தில் SC/ST/OBC இட ஒதுக்கீட்டை கேள்விக்கு உள்ளாக்கிவிடும். சாதிரீதியிலான சமூக நீதி என்ற கருத்து ஒழிக்கப்பட்டு பொருளாதார ரீதியிலான திட்டம் தான் இட ஒதுக்கீடு என்று மாற்றப்பட்டு மூல்நிவாசிகளின் இட ஒதுக்கீடு முழுவதும் ஒழித்துக்கட்டப்படும் பெரும் ஆபத்து இதில் உள்ளது. ஆகவே பகுஜன் சமாஜ் கட்சிக்கு BJP யின் இந்த சதி குறித்து மக்களிடம் விளக்கம் பிரச்சாரம் செய்யும் கடமை உள்ளது. அந்த கடமையிலிருந்து அது தவறியுள்ளது.
இந்த விடயத்தில் தமிழக சமூக நீதி கட்சிகளிடம் பகுஜன் சமாஜ் கட்சி உரிய பாடம் கற்றுகொள்ளவேண்டும் என்பது எனது தாழ்மையான கருத்து.

கருத்துகள் இல்லை: