செவ்வாய், 8 ஜனவரி, 2019

100 நாட்களுக்கு பின் குழந்தையை கண்டுபிடித்த போலீசார் ..காஞ்சிபுரத்தில் காணமல் போன ஹரிணியை ..

ஹரிணியுடன் பெற்றோர் மற்றும் காவல்துறையினர்vikatan.com -jayavel:  100 நாள்களுக்குப் பிறகு குழந்தை ஹரிணி கண்டுபிடிக்கப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் குழந்தையை ஆரத்தழுவி முத்தம் கொடுத்தனர். ``எங்கப் பொண்ணு கிடைச்சிட்டா. இனி வாழ்க்கையே சந்தோஷம்தான்" என்று ஆனந்தக் கண்ணீர் வடித்தனர்.
காவல்நிலையத்தில் ஹரிணியுடன் பெற்றோர்காஞ்சிபுரம் மாவட்டம், மானாமதி கிராமத்தைச் சேர்ந்த நாடோடி இன தம்பதியான வெங்கடேசன், காளியம்மாளின் இரண்டு வயது மகள் ஹரிணி. கடந்த செப்டம்பர் 15-ம் தேதி அணைக்கட்டு காவல்நிலையம் அருகே இரவில் படுத்து உறங்கியபோது ஹரிணி காணாமல்போனார். இது குறித்து தந்தை வெங்கடேசன், அணைக்கட்டுக் காவல்நிலையத்தில் புகார் கொடுத்தார். இதையடுத்து, காஞ்சிபுரம் மாவட்டக் காவல்துறை தனிப்படைகள் அமைத்து ஹரிணியைத் தேடி வந்தது. ஆனால், ஹரிணி பற்றி எந்தத் தகவலும் கிடைக்கவில்லை. கர்ப்பிணியான தாயார் காளியம்மாள், மகள் ஹரிணி காணாமல்போன கவலையில் இருந்து வந்தார். அவரது உடல்நிலையும் பாதிக்கப்பட்டது. `எனது மகள் கிடைக்கும்வரை அணைக்கட்டுக் காவல்நிலையத்தைவிட்டு நகரமாட்டோம்' என்று கிடந்தனர் பெற்றோர்.

பெற்றோருடன் ஹரிணி
இதனிடையே, கரூரைச் சேர்ந்த `இணைந்த கைகள்' என்ற சமூக அமைப்பு, `ஹரிணியைக் கண்டுபிடித்துக் கொடுப்பவர்களுக்கு ஒரு லட்சம் பரிசு' வழங்கப்படும் என்று அறிவித்ததோடு, சமூக வலைதளங்களில் பரப்பினர்.  இதனால், சுறுசுறுப்படைந்த காஞ்சிபுரம் காவல்துறையும் அணைக்கட்டுக் காவல்நிலைய போலீஸாரும் ஹரிணியைக் கடத்திய நபரை அடையாளப்படுத்தி இருக்கிறார்கள்.

இந்த நிலையில், காஞ்சிபுரம் காவல்துறை அருகில் உள்ள திருப்போரூரில் சிறுமி ஹரிணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளார். கடப்பாக்கம் காவல்நிலையத்தில் ஹரிணியைக் கண்டதும் வெங்கடேசனும் காளியம்மாளும் அழத்தொடங்கிவிட்டார்கள். பேசுவதற்கு அவர்களிடம் வார்த்தைகள் இல்லை. காவல்துறைக்குக் கண்ணீரால் நன்றி தெரிவித்த காளியம்மாள், குழந்தை ஹரிணியைத் தழுவி முத்தமிட்டுக் கொஞ்சினர்.
ஹரிணியின் பெற்றோர்
ஹரிணியின் தந்தை வெங்கடேசனிடம் பேசினோம். ``காலையில போலீஸ்காரங்க கடப்பாக்கம் வாப்பான்னு கூப்பிட்டாங்க. குழந்தை அடையாளத்தைப் பார்க்கச் சொன்னாங்க. கழுத்துல சுடுதண்ணி பட்ட தழும்பை வைத்து இது ஹரிணிதான் எனச் சொன்னேன். இதைச் சொன்னதும் குழந்தையை என்னிடம் கொடுத்துவிட்டார்கள். ஹரிணிக்குத் தலைமுடி வெட்டி கொலுசெல்லாம் போட்டிருக்காங்க. அது என்னோட கொலுசு இல்லை. கழட்டிடுங்கன்னு சொன்னேன். பரவா இல்லை போட்டுக்கட்டும்னு சொல்லிட்டாங்க. உலகத்துல இன்றைக்கு இருக்குற சந்தோஷம் போதும். வாழ்க்கை முழுவதும் சந்தோஷமா இருப்பேன். திருப்போரூர்லதான் குழந்தை கிடைச்சதா சொன்னாங்க. குழந்தையை கடத்தியவர்களை கொண்டுவரப்போவதாகச் சொல்லி இருக்கிறாங்க. அவங்க முகத்தைப் பார்க்கணும்னு நினைக்கிறேன். எங்களை செய்யூர் போலீஸ் ஸ்டேஷனுக்கு வரச்சொல்லி இருக்கிறார்கள்” என்றார்.

காஞ்சிபுரம் மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் சந்தோஷ் ஹதிமானியிடம் பேசினோம். ``குழந்தை கடத்தியதாக ஒருவரை பிடித்து விசாரணை செய்து வருகிறோம். மேலும் இரண்டு பேரை தேடிவருகிறோம். விசாரணை முடிவில் என்ன நடந்தது எனப் பின்பு தெரிவிக்கிறோம்” என்கிறார் சுருக்கமாக.

கருத்துகள் இல்லை: