வெள்ளி, 11 ஜனவரி, 2019

புலிகளால் கொல்லப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள் .. no more tears sister


பெண் மேயர் .. பெண் மருத்துவ பேராசிரியர் . பெண் வழக்கறிஞர் . பெண் ஒலிபரப்பாளர் . பெண் கவிஞர். பெண் மனித உரிமை செயல்பாட்டாளர் ...என்று ஏராளம் ...
தீவிரவாதி பிரபாகரனால் கொன்று வீசப்பட்ட ஈழத்து பெண் ஆளுமைகள்!!!
இன்றைய தினத்தில் பிரபாகரனால் கொல்லப்பட்டு ஈழம் இழந்துபோன பெண் ஆளுமைகள் பற்றிய சில நினைவுகள் வந்து செல்கின்றன.அவர்களில் ராஜனி திரணகம,  செல்வி, சரோஜினி யோகேஸ்வரன், மகேஸ்வரி வேலாயுதம் ரேலங்கி செல்வராஜா..... ...... என்று நீண்டதொரு பட்டியலுக்கு நாம் சொந்தகாரர்களாயுள்ளோம்.
ராஜினி திரணகம
இலங்கையில் எழுத்துக்காக விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட முதல் பெண்.யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் உடல்கூற்றியல் விரிவுரையாளராக கடமை´யாற்றியவர். சமூகம் சார் சிந்தனையை மாணவர்களிடையே உருவாக்க வேண்டுமென்பதில் தீராது அக்கறையுடன் செயல்பட்டவர். அவர் பற்றி அவரது மாணவனொருவர் பின்வருமாறு எழுதுகிறார்.
"அவர் வெறும் உடற்கூற்றியல் விரிவுரையாளராக மட்டும் இருக்கவில்லை. அவரின் வகுப்புகள் எப்போதும் மிக உற்சாகம் நிறைந்ததாகவே இருக்கும். தனது அன்றாட விரிவுரைகளுக்கு அப்பால் எமது சமூகப் பிரைச்சினைகளைப் பற்றி சிந்திக்கும் திசையிலும் மாணவர்களை மிகத் திறமையாக அவர் எடுத்து செல்வார். அப்போது அவரின் பரந்த அறிவையும் ஆழமான சமூக உணர்வையும் நாம் கண்டோம். எமக்கு அவற்றை புரிய வைப்பதற்காக சிறந்த திரைப்படங்கள் நாவல்கள் அவர் படித்து ரசித்த கவிதைகள் பலரின் உலக அனுபவங்கள் என சகலவற்றையும் எந்தவித தடங்கலும் இன்றி மள மளவென எம்முன் எடுத்துச் சொல்வார்".

தமிழீழ விடுதலைபோராட்டத்தின் தோல்வியை முன்னறிவித்த "முறிந்த பனை" என்னும் வரலாற்றுதொகுப்பின் ஆசிரியர்களில் ஒருவராக பணியாற்றியவர். விடுதலைப்புலிகளின் உளவுப்பிரிவில் பணியாற்றிய வரும் கொலையாளியுமான பொஸ்கோ என்பவனின் கரங்களால் 1989 செப்டெம்பர் 21ம் திகதியன்று யாழ் பல்கலைகழக வளாகத்தில் 2வது எம்.பீ.பீ.எஸ் பரீட்சையின் இறுதி அங்கம் முடிவடைந்து வெளியே வரும் போது சுட்டுகொல்லபட்டார்.அவரை சைக்கிளில் பின் தொடர்ந்த விடுதலைப்புலி கொலையாளி அவரது தலையின் வலப்பக்கத்தில் முதல் வேட்டைத் தீர்த்தான். பின்னர் அவர் கீழே விழுந்ததும் இன்னும் இரண்டு தடவைகள் அவர் தலையில் சுட்டுவிட்டுச் சென்றான். கொல்லப்பட்ட மறுதினம் அவரின் உடல் மருத்துவ பீடத்திற்கு கொண்டு வரப்பட்ட பொழுது யாழ். பல்கலைக்கழகத்தின் பல மூத்த விரிவுரையாளர்கள் அங்கு சமூகமளிக்கவில்லை. ஏன்..? காரணம் அவர்களுக்கும் இக்கொலையை செய்த வர்கள் யார் என்று நன்றாக தெரியும். ஆனால் அனைவரும் மௌனம் காத்தனர். காரணம்? பயம், எதிர்த்தால் நம்மையும் விடுதலைப்புலிகள் கொன்று விடுவார்களோ என்ற பயம்.
கவிஞை செல்வி
பெண்ணியவாதியான இவர் யாழ்ப்பாண பல்கலை கழகத்தின் நாடகமும் அரங்கியலும் எனும் துறையின் இறுதியாண்டு மாணவி.தோழி இதழின் ஆசிரியராக இயங்கியவர்.தனது கல்வி செயற்பாடுகளுக்கு அப்பால் சமூகம் சார்ந்து தீராது உழைத்தவர். யாழ்ப்பாண பெண்கள் ஆய்வுவட்டம், பூரணி பெண்கள் நிலையம் என்று பலவிதத்திலும் பெண்களின் மேம்பாட்டுக்காக அயராது பாடுபட்டவர். .1991ம் ஆண்டு ஓகஸ்ட் மாதம் விடுதலைப்புலிகளால் கடத்தப்பட்ட இவரை விடுவிக்க கோரி சர்வதேச மனித உரிமை அமைப்பு பலவாறு முயன்றது. தனது இதழான Focus செல்வியைப் பற்றி 1994ம் ஆண்டு மார்ச் இதழில் விடுதலையைக் கோரி எழுதியது. புலிகள் எதற்கும் செவி சாய்க்கவில்லை. இந்த இக்கட்டான காலகட்டத்தில்தான் உலகப் புகழ்பெற்ற ‘Poetry International Award’ கவிதைக்கான சர்வதேச விருது ((Poets Essayists and Novelists) PENஅமைப்பினால் செல்விக்கு வழங்கப்பட்டது. . இவ் விருதானது தங்களுடைய நம்பிக்கைகளுக்காகவும் இலட்சியத் திற்காகவும் எழுத்துத ¢தளத்திலும் கலைத்தளத்திலும் படைப்புக் களை உருவாக்கியவர்களுக்கு வழங்கப்ப டுவதாகும். செல்வி ஈழத்தின் நெருக்க டியான போராட்ட வழ்நிலையில் இத்துறைகளில் சேவை புரிந்தமைக்காக இவ்விருது வழங்க ப்பட்டது. இவரை விடுதலைப்புலிகள் இறுதிவரை விடுதலை செய்யவேயில்லை.
சரோஜினி யோகேஸ்வரன்
1997 ஆம் ஆண்டில் இவர் யாழ்ப்பாண நகர முதல்வராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். சரோஜினி இலங்கைத் தமிழ் அரசியல்வாதியும், தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் வெ. யோகேஸ்வரனின் மனைவியும் ஆவார். திருமதி யோகேஸ்வரன் 1998 மே 17 ஆம் நாள் யாழ்ப்பாணத்தில் உள்ள அவரது வீட்டில் வைத்து விடுதலைப்புலிகளால் ஐந்து முறை துப்பாக்கியால் சுடப்பட்டு மருத்துவ மனைக்குக் கொண்டு செல்லப்படும் வழியில் மரணமானார். தமிழீழ விடுதலைப் புலிகள் இவரது கணவர் வெ. யோகேசுவரனை1987 ஆம் ஆண்டில் கொழும்பில் வைத்து சுட்டுக் கொன்றனர்.இன்று யாழ்மாநகர சபையும் வட மாகாண சபையும் ஒரு ஜனநாயக சூழலுக்குள் இயங்குவதற்கு உரமாக தன்னுயிரை தந்தவர்.
மகேஸ்வரி வேலாயுதம்
1983 ன் பின்னர் இனக்கலவரங்களால் பாதிக்கப்பட்டு இந்தியாவுக்கு ஓடிச்சென்ற தமிழ் மக்களுக்கு ஒரு கலங்கரை விளக் கமாக நின்று உதவிகரம் நீட்டியவர். அகதிகளின் வாழ்வில் ஓடியோடி பங்கெடுத்து அயராது உழைத்தவர். நமது முதலமைச்சர் விக்கினேஸ்வரன் ஸ்ரீலங்கா அரசின் விசுவாசமான ஊழியனாய் உச்சநீதிமன்றில் இருந்துகொண்டு இருந்து எமது இளைஞர்களுக்கு ஐந்துவருடம் பத்து வருடம் என்று சிறைவாச சாபம் கொண்டி ருந்த வேளைகளில் இலங்கை சிறைகளில் வாடிய ஆயிர கணக்கான தமிழ் அரசியல் கைதிகளுக்கு இலவச வழக்காடி அவர்களின் வாழ்வில் ஒளியேற்றியவர். மனித உரிமை சட்டத்தரணியான 53வயதுடைய மகேஸ்வரி வேலாயுதம் அவர்கள் சுகயீனமுற்றுள்ள தனது தாயாரான ஆசிரியை ஈஸ்வரி வேலாயுதம் அவர்களை பார்ப்பதற்காக தனது சொந்த ஊருக்கு சென்றிருந்த சமயம் 2008 மே மாதம் விடுதலைப்புலிகளால் சுட்டு கொலை செய்யப்பட்டார்
ரேலங்கி செல்வராஜா
இலங்கையில் இருந்த முன்னணி தமிழ் வானொலி மற்றும் தொலைக்காட்சி அறிவிப்பாளர் ஆவார். தொடக்க நாட்களில் திரை ப்பட நடிகையாகவும் இருந்த இவர் தனது கணவருடன் சேர்த்து ஆகஸ்ட் 12 , 2005 கொழும்பில் வைத்து விடுதலைப்புலிகளால் சுட்டுக் கொல்லப்பட்டார் இவர்களின் கொலையின்போது ஒரு வயதும் அடையாத அவர்களது குழந்தை தெய்வாதீனமாக உயிர் தப்பியது.
இப்படி இன்னும் பலர் துரோகிகள் என்ற முத்திரை குத்தப்பட்டு கொன்று வீசப்பட்டனர். விடுதலைப்புலிகளால் கொல்லப்பட்ட மாந்தர்களான இந்த மாபெரும் பெண் ஆளுமைகளை இந்த தினபொழுதில் நினைவுகூருவோம்.  நன்றி  பிரபாகரன் யார்?

கருத்துகள் இல்லை: