சனி, 12 ஜனவரி, 2019

மேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு!

மேத்யூ, மனோஜ், சயன் மீது வழக்குப் பதிவு!
கொலை செய்யப்பட்டகொடநாடு ஊழியர்கள் 
மின்னம்பலம்:  கொடநாடு விவகாரம் குறித்து ஆவணப் படம் வெளியிட்ட மேத்யூ, அதில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொடநாடு கொள்ளை, அதுசம்பந்தமாக அடுத்தடுத்து நடந்த கொலைகள் தொடர்பாக முதல்வர் எடப்பாடி பழனிசாமியை குற்றம்சாட்டி ஆவணப்படம் ஒன்றை தெகல்ஹா இதழின் முன்னாள் ஆசிரியர் மேத்யூ சாமுவேல் டெல்லியில் நேற்று வெளியிட்டார். அதில் கொள்ளையில் சம்பந்தப்பட்ட சயன், மனோஜ் ஆகியோர் பேட்டியளித்திருந்தனர். இந்த விவகாரம் தமிழக அரசியல் வட்டாரத்தில் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியிருந்த நிலையில், முதல்வர் விளக்கம் அளிக்க வேண்டுமென அரசியல் கட்சியினர் கோரிக்கை விடுத்தனர்.\

இதையடுத்து சென்னையில் இன்று (ஜனவரி 12) செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் எடப்பாடி பழனிசாமி, அந்தத் தகவல் உண்மைக்கு மாறானது என்று குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக புகார் அளிக்கப்பட்டுள்ளதாகவும், இந்த செய்தியை வெளியிட்டவர்கள் மீதும், பின்புலமாக இருப்பவர்கள் மீதும் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்திருந்தார். இந்த நிலையில் அதிமுக தகவல் தொழில்நுட்பப் பிரிவு தரப்பில் அளிக்கப்பட்ட புகாரின் பேரில், கொடநாடு ஆவணப் படம் வெளியிட்ட மேத்யூ சாமுவேல் மற்றும் அதில் பேட்டியளித்த சயன், மனோஜ் ஆகியோர் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
கொடநாடு சம்பவம் குறித்து சிபிஐ விசாரிக்க வேண்டுமென்கிற கோரிக்கை தற்போது வலுவாக எழுந்துள்ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “கொடநாடு எஸ்டேட்டில் உள்ள முக்கிய ஆவணங்கள் கைப்பற்றியதை மறைக்கவே எடப்பாடி பழனிச்சாமி மற்றும் சில முக்கிய அமைச்சர்களின் தூண்டுதலின் பேரில் ஜெயலலிதாவின் கார் டிரைவர் கனகராஜ் உட்பட 5 பேர் கொல்லப்பட்டுள்ளனர் என்று கூலிப்படை தலைவன் சயன் டெல்லியில் பேட்டி அளித்துள்ளார். எனவே, இந்த வழக்கு நேர்மையாகவும், சுதந்திரமாகவும் நடைபெற வேண்டுமானால் தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி தார்மீக அடிப்படையில் உடனே பதவி விலகிட வேண்டும். இந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்றி சம்பந்தப்பட்ட குற்றவாளிகள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தியுள்ளார்.
அமமுக துணைப் பொதுச் செயலாளர் தினகரன் இதுகுறித்து கூறுகையில், “கொடநாடு இல்லத்திலிருந்து கோப்புகளை திருடிவரச் சொன்னது எடப்பாடி பழனிசாமிதான் என்று ஓட்டுனர் கனகராஜ் தன்னிடம் கூறியதாக சயன் தெரிவித்துள்ளார். இக்குற்றச் சம்பவத்தின் பின்னணியில் பதவியிலிருப்பவரது பெயரே சுட்டிக்காட்டப்பட்டுள்ளதால், மத்திய மாநில அரசுகளின் கீழுள்ள எந்த விசாரணை அமைப்பும் முறையான விசாரணையை பயமின்றி மேற்கொள்ளுமா என்ற கேள்வி எழுகிறது. இந்த நிலையில் எந்த விசாரணை அமைப்பு இதனை விசாரித்தாலும் அதை கண்காணிக்கும் விதமாக பதவியிலுள்ள ஒரு உயர் நீதிமன்ற நீதிபதியின் மேற்பார்வையில் விசாரணையை நடத்த வேண்டும். இல்லையெனில் நீதிமன்றம் தாமாக முன்வந்து தனது முழுக்கட்டுப்பாட்டில் இந்த விசாரணையை மேற்கொள்ள வேண்டும்” என்று தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை: