
நமக்குள் எப்போதும் ஒரு சிக்கல் இருக்கிறது, நம்மை குற்றவாளியாக்கி பார்க்கும் பார்வை நமக்கு இருக்கிறது. அதில் இருந்து வெளியேவர வேண்டும். உண்மையில் சமூக வலைதளத்தில் நல்ல தமிழ் நிறைய இருக்கிறது. அதேசமயம் நிறைய குறைபாடுகளும் இருக்கிறது, அதனையும் நான் மறுக்கவில்லை. சமூக வலைதளத்தின் மூலமாக தமிழ் வளர்த்தெடுக்க வேண்டிய தேவை இருக்கிறது என்பதை உணரமுடிகிறது.
சமூக வலைதளத்தில் கொண்டுவரக்கூடிய வார்த்தைகள் என்பது வடிவேலின் வார்த்தைக்கு சமமானது. வடிவேலுவின் வார்த்தைகள் இல்லாமல் இன்று பேசவே முடியாது என்பதுதான் எதார்த்தம். அவரின் ‘ஆஹான்...’ எனும் வார்த்தை இவ்வளவு பெரிய வார்த்தையா என்று இருக்கிறது. நான் கடைசியாக எழுதிய புத்தகத்தின் பெயர் ‘மண்ட பத்தரம்’ இதனை ஆங்கில மொழிபெயர்ப்பில் சொல்ல வேண்டும் என்றால் (Be aware) இதை ஆங்கிலத்தில் சொல்லினால் மதிப்பு கூடும். அதுபோல்தான் அவர் பயன்படுத்திய வார்த்தைகள் அனைத்தும். ஆனால், இதை எல்லாம் மார்க் ஸுக்கர் பர்க் போன்றவர்கள் சொன்னால்தான் நம்மிடம் மதிப்பு கூடும். வடிவேலும் சமூக வலைதளமூம் ஒன்று. காரணம், இரண்டும் ஏற்படுத்தும் தாக்கம் அபாரமானது. ‘வச்சி செஞ்சிருவேன்’ எனும் வார்த்தை சமூக வலைதளத்தில் இருந்து வந்ததுதான். இது போன்று பல வார்த்தைகள் சமூக வலைதளங்கள் கொண்டுவருகிறது. இது எல்லாமே சமூகத்தின் பிரதிபலிப்பாகத்தான் நான் பார்க்கிறேன். காரணம், அவர்கள் கல்லூரியில் பேசக்கூடிய வார்த்தைகளை இங்கு கொண்டுவருகிறார்கள்.
இதில் என் வேண்டுகோள்கள் என்னவென்றால், சமூக
வலைதளத்தில் சரியாக தமிழ் பயன்படுத்துவதில்லை என்பதை ஒரு குற்றமாக
முன்வைக்காதீர்கள். ராஜ்மோகன், விக்கி போன்றவர்களின் பக்கங்களை எல்லாம்
பாருங்கள் அவர்களின் மொழி நடை எல்லாம் அற்புதமாக இருக்கும். இருவர்
சந்திக்கும்போது தமிழில்தான் பேச வேண்டும் என்பதில்லை, அது அவசியமும்
இல்லை. இருவர் சந்திக்கும்போது தமிழில்தான் பேச வேண்டும் என்பதில்லை.
ஆனால், தமிழை பற்றி பேச வேண்டிய தேதி என்று வருகிறதோ அன்று தமிழ் குறித்து
பேசினால் தமிழுக்கு நல்லது, அவ்வளவுதான். மேலும் நாம் தமிழை வளர்க்க
முடியாது. தமிழ்தான் நம்மை வளர்க்கும்.
கரடுமுரடான வார்த்தைகளை பேசினால்தான் நல்ல தமிழ் என்று குழப்பிக்கொள்ளாதீர்கள். எவ்வளவுக்கு எவ்வளவு ஒரு மொழி எளிமையாக இருக்கிறதோ அந்த அளவிற்கு அந்த மொழி வளரும். ‘மொக்க’ எனும் வார்த்தையை பயன்படுத்தும்போது நீங்கள் கோவப் படுகிறீர்கள். உண்மையில் மொன்னை எனும் வார்த்தை மறுவி மொக்கை என்றானது அவ்வளவுதான். அன்பு, காதல், காமம், பாசம், குரோதம், வன்மம், ஆத்திரம் என எல்லா குணமூம் நல்ல குணம்தான். எங்கு தேவையோ அங்கு அது வேண்டும். அநீதிக்கு எதிராக குரோதம் கொள்ளவேண்டும். அதுபோல் எல்லா வார்த்தையும் நல்ல வார்த்தைதான்
கம்போடியாவில் இருந்து வந்தவர் ‘சமீபத்தில் நீங்கள் நடத்திய நிகழ்ச்சி ரொம்ப நல்ல நிகழ்ச்சி, தமிழ் நாட்டில் இருக்கும் பிள்ளைகளுக்கு தமிழ் பேசத் தெரியவில்லை. வேற்று மாநிலத்தவர் தமிழ் நல்லா பேசுறாங்க’ நிகழ்ச்சி நன்றாக இருந்தது என்று சொன்னார். நானும் சமூக வலைதளத்தில் பார்த்தேன் தமிழ் பேசத் தெரியாதவர்களை திட்டியிருந்தார்கள். அவர்களை திட்டுவதற்கு என்ன உரிமை இருக்கிறது. அவர்களை அந்த இடத்திற்கு கொண்டுவந்து வைத்தது, இன்று 40 - 50-ல் இருக்கும் தலைமுறையினர்தான். நீங்கள்தான் ஆங்கில வழி கல்வியில் சேர்த்துவிட்டீர்கள், மம்மீ, டாடி என்று ஆனந்த பெரு வெள்ளத்தில் அலைந்தது நீங்கள்தான். ஆங்கிலத்தின் மீது தீரா காதலும், பெரும் மோகமும் கொண்டது நீங்கள்தான். நாங்கள் இன்று வளர்ந்த சமூகம், தமிழை தேடி எடுக்கிறோம். நல்ல தமிழ் பேசுபவர்கள் விரைவாக பிரபலமாவது தற்போதுதான் நடக்கிறது. ஒரு மொழியை தொடர்ந்து புனிதப்படுத்திக்கொண்டே போகும்போது அந்த மொழி சுருங்கிக்கொண்டேபோகும். எதை நாம் விசாலத்துடன் அணுகுகிறோமோ அது விரிந்துகொண்டேபோகும் அதுதான் இயல்பு. விமர்சிப்பதற்காக மட்டும்தான் சமூக வலைதளங்கள் இருக்கிறது எனும் நோக்கத்துடன் அதனை எடுத்து செல்லாதீர்கள். ஒருவனின் சிறு தவறை சொல்லி, சொல்லி அவனின் படைப்பாற்றலை தடுக்காதீர்கள். கமல்ஹாசனே தவறாக அடிக்கிறார். அதன் பின் அவரே என்னுடை இந்த பதிவு தவறாகிவிட்டது என்று ஒத்துக்கொண்டு திருத்திக்கொள்கிறார்.
ஒருவன் அருமையான கருத்தை பதிவிடுகிறான். அதனை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து பகிரலாம் என்று பார்த்தால். அதன் கீழ் கருத்து பதிந்திருப்பவர் எல்லாம் மிக மோசமாக அவன் அம்மாவை பற்றியெல்லாம் தவறான வார்த்தையில் கருத்துக்களை பதிந்திருக்கிறான். இது எந்தவிதத்தில் நியாயம். யாராவது தவறு செய்தால், பக்குவமாக எடுத்து சொல்லுங்கள் அதை விட்டுவிட்டு திட்டாதீர்கள். நீங்கள் திட்டுவதால் அவனின் கருத்து வெளிப்படுதும் தன்மை தடைபடும்.
மொழியை மொழி சார்ந்த விஷயங்கள் மூலமாக
மட்டும் வளர்க்க முடியாது. மொழியை வளர்க்க அறிவியலும், உற்பத்தியும்,
வணிகமும் தேவைப்படுகிறது. ஆங்கிலம் மிகவும் சாதாரண மொழி, அது எப்படி உலகம்
முழுக்க பரவியது என்றால் ஆங்கிலத்திற்கு பின்னால் அறிவியலும்,
கண்டுபிடிப்புகளும் இருக்கிறது. ஒரு பொருளை எவன் கண்டுபிடிக்கிறானோ அவன்,
அவனின் மொழியில் பெயர் வைத்துகொள்கிறான். சோனி, ஹிட்டாச்சி, சாம்சங் போன்ற
பெயர்களை சொல்லவில்லையா அதுபோல்தான் நாம் கண்டுபிடித்தால் அதற்கு நம்
பெயர்தான். அப்படித்தான் ஒரு மொழி வளரும். திருக்குறள் உலகத்தின் எந்த
மொழியிலும் திருக்குறள்தான். அதை எவனாலும் மாற்றமுடியாது. அதுபோல்
திருவள்ளுவர்தான். பாரதி சொன்ன கருத்து பாரதியுடையதுதான்.
சீனர்கள் நம்மை அழிப்பதற்கு ஆங்கிலத்தை உயிரைக் கொடுத்து கற்றுவருகிறார்கள். ஆனால் அவனால் அவ்வளவு எளிதில் ஆங்கிலத்தை கற்றுக்கொள்ள முடியாது. கொஞ்சம் சிந்தித்து பாருங்கள் ஆங்கிலத்தின்மீது நம்மைப்போல் காமுற்றோர்கள் யாருமே கிடையாது. ஆனால், நம்மக்கே இன்னும் ஆங்கிலம் சரியாக வரவில்லை. ஆனால், எல்லா மொழியுமே சிறப்பானதுதான், அனைத்து மொழியையும் கற்றுக்கொள்வதில் தவறில்லை. இந்த தலைமுறையினரை நெருக்குதலில் இருந்து கொஞ்சம் சுதந்திரமாக விடுங்கள். அவன் சிந்தனைய வெளிபடுத்த மொழியை ஒரு கருவியாகத்தான் பார்க்கிறான். அதனால் சிறு தவறுகளை மன்னியுங்கள், சிறு தவறுகளை மன்னிக்கும் போது படைப்பாற்றல் அதிகரிக்கும், படைப்பாற்றல் அதிகமாகும்போது அவனுக்குள் பொறுப்பு அதிகமாகும், பொறுப்புகள் அதிகமாகும் போது, தவறாக எழுதக்கூடாது என்று அவனுக்கே தோன்றும். இளம் தலைமுறையின் படைப்பாற்றலை மொழி எனும் அடிப்படையில் நாம் மட்டுப்படுத்த பார்த்தால், நிச்சயமாக அடுத்த தலைமுறையிக்கு தன் மொழியை அகலமான பார்வைக்கு அது எடுத்து செல்லாது. இந்த சமூகம் வெற்றிபெற்றுவிட்டது நம்புங்கள், இந்த தமிழ் சமூக உலகம் முழுக்க வெற்றி பெற்றுள்ளது நம்புங்கள், வெற்றி பெற்றவனின் பிள்ளை தனது மொழியை பேசும் நம்புங்கள்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக