ஞாயிறு, 6 ஜனவரி, 2019

கேரளா அரசுக்கு பாஜக மிரட்டல் .. ஆட்சி கவிழ்ப்பு ? அரசியல் சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டி இருக்கும்


தினத்தந்தி  : அய்யப்ப பக்தர்கள் மீதான வன்முறையை நிறுத்தாவிட்டால், அரசியல் சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டி இருக்கும் என்று கேரள அரசுக்கு பா.ஜனதா எச்சரிக்கை விடுத்துள்ளது.
புதுடெல்லி, சபரிமலையில் அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்ய அனுமதி அளிக்கப்பட்டதற்கு எதிராக மாநிலம் முழுவதும் போராட்டம் நடந்து வருகிறது. இதற்கு மத்தியில் கடந்த 2–ந்தேதி பலத்த பாதுகாப்புடன் 50 வயதுக்கு உட்பட்ட 2 பெண்கள் சபரிமலை அய்யப்பனை தரிசித்தனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து மாநிலம் முழுவதும் தொடர்ந்து போராட்டம் நடந்து வருகிறது.
குறிப்பாக கடந்த 3–ந்தேதி கேரளா முழுவதும் நடந்த முழு அடைப்பு போராட்டத்தைத் தொடர்ந்து பல இடங்களில் வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன. ஆளும் மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு மற்றும் பா.ஜனதாவினரின் வீடு மற்றும் அலுவலகங்கள் மாறி மாறி தாக்குதலுக்கு உள்ளாகி வருகின்றன.
இதுவரையில் 3000 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். போராட்டம் காரணமாக பதற்றமான நிலை தொடர்கிறது. > இந்நிலையில்  பக்தர்கள் மீதான வன்முறையை நிறுத்தாவிட்டால், அரசியல் சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டி இருக்கும் என்று கேரள அரசுக்கு பா.ஜனதா எச்சரிக்கை விடுத்துள்ளது.

பா.ஜனதா செய்தித்தொடர்பாளர் ஜி.வி.எல்.நரசிம்ம ராவ் டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசுகையில்,  சபரிமலை பிரச்சினையில் நடப்பவை அனைத்தும் கேரள அரசின் சதியுடன்தான் நடக்கின்றன. சபரிமலை பிரச்சினை போர்வையில் கேரள அரசு ஓட்டு வங்கி அரசியலில் ஈடுபட்டுள்ளது என குற்றம் சாட்டினார்.
பா.ஜனதா, ஆர்.எஸ்.எஸ். தொண்டர்கள் மீது மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் தாக்குதல் நடத்துவது வழக்கமானதுதான். ஆனால், அதையும் தாண்டி பக்தர்கள் மீதும் தாக்குதல் நடத்தி வருகிறார்கள். இந்திய ஜனநாயக வாலிபர் சங்கம் போன்ற அமைப்புகளை சேர்ந்தவர்களை கொண்டு கேரள அரசு வன்முறையை கட்டவிழ்த்து விட்டு வருகிறது. வன்முறை அரசியலில் ஈடுபட்டு வருகிறது. இது, அரசு ஆதரவு பெற்ற வன்முறை ஆகும். இந்த வன்முறையை கேரள அரசு உடனே நிறுத்திக் கொள்ள வேண்டும். இனிமேலும் வன்முறை நீடித்தால், அரசியல் சட்டப்பிரிவை பயன்படுத்த வேண்டி இருக்கும் என்று எச்சரிக்கை விடுத்தார்.
மேலும்  சபரிமலை விவகாரம் ஆண்–பெண் சமத்துவம் சம்பந்தப்பட்டது கிடையாது என்ற நரசிம்ம ராவ், இது, கடவுள் நம்பிக்கை, பாரம்பரியம் சம்பந்தப்பட்டது. இதை கேரள அரசும், ஊடகங்களும் புரிந்து கொள்ள வேண்டும். முத்தலாக் பிரச்சினையையும், சபரிமலை விவகாரத்தையும் முடிச்சுப் போட்டு யாரும் குழப்பிக் கொள்ளக்கூடாது. முத்தலாக் பிரச்சினை, கணவன்–மனைவி உரிமை சம்பந்தப்பட்டது. அது, மத பிரச்சினை அல்ல. அதனால்தான், இஸ்லாமிய நாடுகளில் கூட முதலாக் முறை தடை செய்யப்பட்டுள்ளது என்று கூறினார்

கருத்துகள் இல்லை: