கோகுல்ராஜ் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள யுவராஜை தேடப்படும்
குற்றவாளியாக அறிவித்து அவரது சொத்துக்களை முடக்க முடிவு
செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய தலித் மாணவர் கோகுல்ராஜ் கொலை
வழக்கில் சங்ககிரியைச் சேர்ந்த தீரன் சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ்
முக்கிய குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளார். இவர் மீது கடத்தல், கொலை,
வன்கொடுமை ஆகிய 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கடந்த
3 மாதமாக யுவராஜ் தலைமறைவாக உள்ளார்.
இந்த வழக்கின் விசாரணை அதிகாரியான திருச்செங்கோடு டிஎஸ்பி விஷ்ணுபிரியா,
கடந்த 18ம் தேதி தற்கொலை செய்து கொண்டார். இந்த இரண்டு வழக்குகளையும்
சிபிசிஐடி போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கோகுல்ராஜ் கொலை வழக்கு குறித்து சிபிசிஐடி ஏடிஎஸ்பி ஸ்டாலின் தலைமையிலான
குழுவினர் விசாரித்து வருகின்றனர். ஓமலூரில் உள்ள அவரது பெற்றோர்கள்,
உறவினர்களிடமும் விசாரணை நடத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் விஷ்ணுபிரியா தற்கொலைக்கான காரணம் குறித்து யுவராஜ் பேசிய
வாட்ஸ் அப் ஆடியோ ஞாயிறன்று வெளியானது. அதில் விஷ்ணு பிரியாவின்
தற்கொலைக்குக் காரணம் உயரதிகாரிகள்தான் என்று யுவராஜ், பரபரப்பு
குற்றச்சாட்டுகளைக் கூறியிருந்தார்.
விஷ்ணுபிரியாவை தற்கொலைக்கு தூண்டியவர்கள் குறித்த ஆதாரங்கள் அனைத்தும்
என்னிடம் உள்ளது என்று ஆடியோவில் அவர் கூறியது காவல்துறை வட்டாரங்களில்
மட்டுமல்லாது பொதுமக்களிடமும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதே நேரத்தில் கோகுல்ராஜ் கொலை வழக்கு பற்றி யுவராஜ் எந்த தகவலையும்
தெரிவிக்கவில்லை. இதனால் அவருக்கு கொலை சம்பவத்தில் தொடர்பிருப்பது உறுதி
செய்யப்பட்டுள்ளது என்கின்றனர் காவல்துறை அதிகாரிகள்.
இதனிடையே சிபிசிஐடி விசாரணைக்கு நேரில் வருமாறு நேற்று முன்தினம்
யுவராஜுக்கு சம்மன் அனுப்பப்பட்டது. இந்த சம்மனை சிபிசிஐடி எஸ்.ஐ ஓருவர்
சங்ககிரி அருகேயுள்ள கருங்காளிகாட்டில் உள்ள அவரது வீட்டுக்கு எடுத்து
சென்றனர். அப்போது வீட்டில் இருந்த யுவராஜின் தந்தை சுப்பிரமணி சம்மனை
பெற்றுக் கொண்டார். திங்கட்கிழமையன்று விசாரணைக்கு வரும் படி சம்மனில்
குறிப்பிடப்பட்டிருந்தது. ஆனால் நேற்று இரவு வரை யுவராஜ் விசாரணைக்கு
வரவில்லை.
இதனையடுத்து யுவராஜ் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் அவரை
தேடப்படும் குற்றவாளி என அறிவிக்க முடிவு செய்துள்ளனர். அதற்கு பின்பும்
சரண் அடையாவிட்டால் யுவராஜின் சொத்துக்களை பறிமுதல் செய்ய நீதிமன்றம் மூலம்
நடவடிக்கை எடுக்கவும் சிபிசிஐடி போலீசார் முடிவு செய்துள்ளதாக காவல்துறை
வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.
Read more at:/tamil.oneindia.com
Read more at:/tamil.oneindia.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக