சென்னை : பள்ளிக் கழிவறைக்குள் பூட்டி வைக்கப்பட்ட 6 வயது மாணவி
பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் பெற்றோர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை
ஏற்படுத்தியுள்ளது. இச்சம்பவம் குறித்து போலீஸார் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
சென்னை தேனாம்பேட்டை, ஆலயத்தமன் கோயில் தெருவைச் சேர்ந்த சேகர் என்பவரது 6
வயது மகள் தர்ஷினி. தியாகராய நகரில் உள்ள தனியார் பள்ளியொன்றில் முதலாம்
வகுப்பு படித்து வந்தார்.
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வழக்கம் போல பள்ளி சென்றார் தர்ஷினி. பாட
வேளையின் போது தனது தோழியுடன் கழிவறைக்குச் சென்றுள்ளார். அப்போது
விளையாட்டாக தர்ஷினி இருந்த கழிவறையை வெளியில் இருந்து பூட்டியுள்ளார்
அவரது தோழி. பின்னர் தனது வகுப்பிற்கு அவர் சென்று விட்டார்.
கழிவறையில் பூட்டப்பட்ட தர்ஷினி பயத்தில் அலறி இருக்கிறார். இருப்பினும்,
அவளது குரல் யாருக்கும் கேட்கவில்லை எனக் கூறப்படுகிறது. சுமார் 3 மணி
நேரத்திற்குப் பின்பே தர்ஷினி கழிவறைக்குள் சிக்கிக் கொண்டது பள்ளி
நிர்வாகத்திற்கு தெரிய வந்துள்ளது. மயங்கிய நிலையில் கழிவறையில் இருந்து
தர்ஷினியை மீட்ட நிர்வாகத்தினர், எழும்பூரில் உள்ள அரசு குழந்தைகள் நல
மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். ஆனால், சிகிச்சைப் பலனின்றி
தர்ஷினி பரிதாபமாக உயிரிழந்தார்.
இதனைத் தொடர்ந்து தர்ஷினியின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளியை
முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளிக்கு வரும் குழந்தைகளை
பாதுகாக்க வேண்டியது பள்ளி நிர்வாகத்தின் கடமை. ஆனால், கழிவறைக்குச் சென்ற
மாணவியை 3 மணி நேரம் கவனிக்காமல் கவனக்குறைவாக பள்ளி நிர்வாகத்தினர்
செயல்பட்டுள்ளனர்.
இதனாலேயே தர்ஷினி உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக சம்பந்தப்பட்ட பள்ளி
நிர்வாகத்தினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என போராட்டத்தில்
ஈடுபட்டவர்கள் முழக்கங்கள் எழுப்பினர்.
தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் இரு தரப்பிலும் விசாரணை நடத்தி
வருகின்றனர்.
Read more at://tamil.oneindia.com/
Read more at://tamil.oneindia.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக