திங்கள், 28 செப்டம்பர், 2015

த்ரிஷா இல்லன்னா நயன்தாரா! ஏன் அத்தனை விசில் பறக்கிறது. எதற்காகக் கைதட்டுகிறார்கள்?வெளியில் வரட்டும்..

nisaptham.com  உள்ளுக்குள் இருக்கும் கச்சடாக்களை பரிமாறிக் கொள்ள மனம் எத்தனித்துக் கொண்டேயிருக்கிறது. பதாகைகளிலும் விளம்பரத் தட்டிகளிலும் காத்ரீனா கைப்புகளும், பிரியங்கா சோப்ராக்களும் தூண்டிவிடும் பாலியல் உணர்வுகளை எல்லாம் யாரிடமாவது காட்டிவிட முடியாதா என்கிற ஏக்கம் சகல இடங்களிலும் நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய எத்தனிப்புகள் அத்தனையும் வெற்றியில் முடிவதில்லை. பாலியல் எத்தனிப்புகளில் கிடைக்கும் தோல்வி உண்டாக்கக் கூடிய விளைவுதான் பாலியல் வறட்சி என்பது. அத்தகைய பாலியல் வறட்சியின் நீட்சியாகத்தான் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களைப் பார்க்க வேண்டும். 
:த்ரிஷா இல்லன்னா நயன்தாரா படத்தை பார்த்துவிட்டேன். சமூக சிந்தனையாளர்களும் அறிவாளிகளும் இன்னபிற போராளிகளும் கழுவி ஊற்றி கொழுவில் ஏற்றும் ஒரு படத்தை பார்த்துவிட வேண்டும் என மனம் தத்தளிப்பது இயற்கைதானே? அமெரிக்காவுக்கு கிளம்பும் போதே இரண்டு இணையதளங்களைக் கொடுத்து அனுப்பியிருந்தார்கள். einthusan மற்றும் tamilgun. முதல் தளத்தை மேலாளர் மின்னஞ்சலில் அனுப்பியிருந்தார். இதே வேறு மேலாளராக இருந்தால் ஸ்டேட்டஸ் அனுப்பச் சொல்லி சாகடித்திருப்பார்கள். நல்ல மனுஷன் அவர். இரண்டாவது தளத்தை செந்தில் அறிமுகப்படுத்தினார். இவர் கரூர்காரர். டென்வரில்தான் கடந்த ஐந்தாறு வருடங்களாக இருக்கிறார்.
இந்தியாவில் இந்தத் தளங்களை அனுமதிக்கிறார்களா என்று தெரியவில்லை. முதல் தளத்தில் அத்தனை படங்களும் கிடைப்பதில்லை. ஆனால் படத்தின் தரம் பிரமாதமாக இருக்கிறது. இரண்டாவது படத்தில் புதுப்படங்கள் கூட இருக்கின்றன. ஆனால் தியேட்டரில் எடுத்த படங்களையெல்லாம் ஏற்றி வைத்திருக்கிறார்கள். த்ரிஷா இல்லன்னா நயன்தாரா தியேட்டர் பிரிண்ட். இத்தகைய படங்களைத் தியேட்டரில் அல்லது தியேட்டர் பிரிண்ட்டில் பார்க்கும் போதுதான் ஒரு தலைமுறையின் மனவோட்டத்தைப் புரிந்து கொள்ள முடிகிறது. எந்த வசனத்தையெல்லாம் ஃபேஸ்புக்கிலும் ட்விட்டரிலும் ஏறி மிதிக்கிறார்களோ அந்த வசனங்களுக்கு விசில் பறக்கிறது.
இந்தப் படத்தின் வருமானம் அட்டகாசம் என்றவொரு செய்தியைப் படித்தேன். இருக்காதா பின்னே? அடித்து நொறுக்குகிறேன் என்ற பெயரில் இவ்வளவு விளம்பரத்தைச் செய்து கொடுத்திருக்கிறார்கள். ‘அப்படியென்னதான் இருக்கிறது’ என்பதைப் பார்த்துவிடும் கூட்டம் ஒரு பக்கம் என்றால் ‘என்னமோ கில்மா இருக்கும் போலிருக்கு’ என்ற நினைப்பில் திரையரங்குக்கு செல்லும் கூட்டம் இன்னொரு பக்கம். நான் இரண்டாவது வகையறாவில் அடக்கம். இனி வரிசையாக இத்தகைய படங்கள் வரத் தொடங்கும். உண்மையில் இத்தகைய படங்களை இவ்வளவு தூரம் கிழித்தெறிய வேண்டியதில்லை. ‘இப்படியெல்லாம் படம் எடுக்கவே கூடாது’ ‘இதையெல்லாம் எழுதவே கூடாது’ ‘அதையெல்லாம் பேசவே கூடாது’ என்று வரைமுறைகளை எழுப்பி எல்லாவற்றையும் பூசி மொழுகித்தான் நமக்குள் புழு நெண்டிக் கிடக்கிறது. கழிவுகள் நிரம்பிய மனங்கள் இங்கே பெருகிக் கொண்டிருக்கின்றன.
வெறும் ரத்தினங்கள் மட்டுமில்லாது எல்லாக் குப்பைகளும் நிறைந்து கொண்டேயிருக்கட்டும். அந்தக் குப்பைகளின் வழியாகவும் ரத்தினங்களின் வழியாகவும் எல்லாவிதமான உரையாடல்களும் சாத்தியப்படட்டும். அதுதான் நம்மை அடுத்த கட்டத்துக்கு நகர்த்தும்.
இங்கு எத்தனை பேர் வெளிப்படையாக இருக்கிறோம்? எவ்வளவு விஷயங்களைத் தயக்கமில்லாமல் வெளியில் சொல்ல முடிகிறது? வெளியுலகத்துக்காக வேஷம் கட்டுகிறோம், எல்லாவற்றிலும் பொய்யைத்தான் வெளியில் வைக்கிறோம். உள்ளுக்குள் ஒரு மாதிரியாகவும் வெளியில் இன்னொரு மாதிரியாகவும் நடிக்கிறோம். ‘அதற்காக பெண்களை இவ்வளவு வெளிப்படையாக அவமானப்படுத்த அனுமதிக்க முடியுமா?’ என்று கேட்பதில் நியாயம் இல்லாமல் இல்லை. ஆனால் இப்படியான படங்கள் வரும்போதுதான் அவற்றுக்குக் கிடைக்கும் ஆதரவு வழியாக நாம் சார்ந்திருக்கும் சமூகத்தின் எண்ணங்கள் எப்படியிருக்கின்றன என்பதைப் புரிந்து கொள்ள முடியும். முற்றாக இந்தப் படங்களை தடுக்க வேண்டும் என்றில்லாது ஏன் இத்தகைய படங்கள் கொண்டாடப்படுகின்றன என்பதாக விவாதங்கள் அமைய வேண்டும். அதிலிருந்து உருவாகிவரும் புரிதல்கள் மிக முக்கியமானவையாக இருக்கக் கூடும். 
பெண்களை மதிக்கிறோம் என்ற பெயரில் வெளியில் வேஷம் போட்டுக் கொண்டு உள்ளுக்குள் ‘அவளைப் பத்தி தெரியாதா? சிரிச்சோம்ன்னா வந்துடுவா’ என்று பேசுகிற மனநிலைதான் புரையோடிக் கிடக்கிறது. பெரும்பாலான ஆண்கள் இப்படித்தான் இருக்கிறோம். ஆட்டோ ஓட்டுநரிலிருந்து லூயி பிலிப் சட்டையணிந்து பன்னாட்டு நிறுவனத்தின் கேண்டீனில் தேனீர் உறிஞ்சுபவர் வரை அத்தனை பேருக்கும் இது பொருந்தும். அத்தகைய உண்மையைத்தான் இத்தகைய படங்கள் வெளிச்சம் போட்டுக் காட்டுகின்றன என்று புரிந்து கொள்ள வேண்டியிருக்கிறது. 
பிரச்சினையின் அடிநாதத்தை புரிந்து கொள்ளாமல் விளைவுகளைச் சாடி பயனில்லை. த்ரிஷா இல்லன்னா நயன்தாரா பிரச்சினையில்லை. அது வெறும் விளைவுதான். 
யாராக இருந்தாலும் சரி- ஆண் பெண் உறவுகளுக்கிடையில் இங்கே காமம்தான் பிரதானம். இருபது வருடங்களுக்கு முன்பாக நிலைமை எப்படியிருந்தது என்று தெரியாது. அந்தக் காலத்தில் வாய்ப்புகள் குறைவு. எதிர்பாலினரை அணுகுவதும் கடினம். மீறி அணுகிப் பேசினாலும் யாருடைய கண்களிலாவது பட்டு விவகாரம் பற்றியெரியத் தொடங்கும். ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியில்லை. வாட்ஸப்பும் இன்பாக்ஸூகளும் எல்லாவற்றையும் எளிதாக்கியிருக்கிறது. அந்தரங்கங்கள் ரகசியமாக்கப்பட்டிருக்கின்றன. உள்ளுக்குள் இருக்கும் கச்சடாக்களை பரிமாறிக் கொள்ள மனம் எத்தனித்துக் கொண்டேயிருக்கிறது. பதாகைகளிலும் விளம்பரத் தட்டிகளிலும் காத்ரீனா கைப்புகளும், பிரியங்கா சோப்ராக்களும் தூண்டிவிடும் பாலியல் உணர்வுகளை எல்லாம் யாரிடமாவது காட்டிவிட முடியாதா என்கிற ஏக்கம் சகல இடங்களிலும் நிலவிக் கொண்டிருக்கிறது. இத்தகைய எத்தனிப்புகள் அத்தனையும் வெற்றியில் முடிவதில்லை. பாலியல் எத்தனிப்புகளில் கிடைக்கும் தோல்வி உண்டாக்கக் கூடிய விளைவுதான் பாலியல் வறட்சி என்பது. அத்தகைய பாலியல் வறட்சியின் நீட்சியாகத்தான் த்ரிஷா இல்லன்னா நயன்தாரா போன்ற படங்களைப் பார்க்க வேண்டும்.
நாம் பாவனை செய்து கொண்டிருப்பது போல நம்முடைய சமூகம் புனிதம் நிறைந்ததோ அல்லது வெளிப்படையானதோ இல்லை- காமம் பற்றிய முழுமையான புரிதல் இல்லாத, அடுத்தவர்கள் என்ன நினைப்பார்களோ என்று பயந்து, மூடி மறைக்கக் கூடிய, வக்கிரங்கள் நிறைந்த சமூகம்தான் இது. தொழில்நுட்பமும் அறிவியலும் பரவலாக்கப்படாத காலத்தில் இத்தகைய மூடி மறைத்தல் நல்லதாக இருந்திருக்கலாம். ஆனால் இப்பொழுது நிலைமை அப்படியில்லை. கண்ட குப்பைகளும் நமக்குள்ளாக சேர்ந்து கொண்டேயிருக்கின்றன. இந்தச் சூழலில் எல்லாவற்றையும் பேசிவிடுவதும், வெளிப்படையாக புரிந்து கொள்வதும்தான் நல்லது. ‘இந்தப் படம் பெண்களை இழிவுபடுத்துகிறது’ என்று ஃபேஸ்புக்கில் ஸ்டேட்டஸ் போடுவதும், ஆதிக் ரவிச்சந்திரன் மாதிரியானவர்கள் படமே எடுக்கக் கூடாது என்று பேசுவதும் நன்றாகத்தான் இருக்கிறது. ஆனால் ஏன் அத்தனை விசில் பறக்கிறது. எதற்காகக் கைதட்டுகிறார்கள்? உள்ளுக்குள் நினைத்துக் கொண்டிருப்பதை, வெளிப்படையாக தான் பேசாததை திரையில் பேசுகிறார்கள். அதனால் கைதட்டுகிறார்கள். இதுதான் கச்சடா. இது வெளியில் வரட்டும். அதுதான் நமக்கும் நல்லது அடுத்த சந்ததிக்கும் நல்லது.

கருத்துகள் இல்லை: