தமிழகத்தில்
மதுகுடிப்பவர்களின் எண்ணிகை சுமார் இரண்டு கோடி என்றும், அதனால்
இந்தியாவிலேயே மதுகுடிப்பவர்களின் எண்ணிகையில் தமிழகம் இரண்டாவது இடம்
வகிக்கிறது என்றும் புள்ளி விவரம் தெரிவிக்கிறது. தொழில் முதலீட்டை
ஈர்க்கக்கூடிய மாநிலங்களின் வரிசையில் பனிரெண்டாவது இடத்தில் தமிழகம்
இருக்கிறது என்று உலக வங்கி கூறுகிறது இதுதான் தமிழகத்தின் உண்மை நிலை.
எந்த துறையில் முதலிடத்தில் இருக்கவேண்டுமோ அதில் கடைசி இடத்திலும், கடைசி
இடத்தில் இருக்கவேண்டிய துறையில் முதலிடத்திலும் இருப்பதுதான் தமிழக
முதலமைச்சர் ஜெயலலிதாவினுடைய அதிமுக அரசின் நான்கரை ஆண்டு சாதனையாகும்.
ஒவ்வொரு
ஆண்டும் மதுவிற்பனை அதிகரிக்கிறது என்றால், மதுபானத்தின் விலையை
உயர்த்தியுள்ளோம் அதனால்தான் வருமானம் அதிகரித்துள்ளது என்று வியாக்கியானம்
பேசுகிறார் அமைச்சர். டாஸ்மாக் மூலம் மதுவகைகள் 2014 – 2015ல் 8.05 கோடி
பெட்டிகள் கொள்முதல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் 2011 - 2012ல் அதிமுக
ஆட்சிக்கு பிறகு வந்தபோது கொள்முதல் செய்யப்பட்டதற்கும், தற்போதைய
கொள்முதலுக்கும் சுமார் இரண்டு கோடி பெட்டிகள் அதிகரித்துள்ளன. அதாவது
சுமார் 96 கோடி பாட்டில்கள் அதிகமாக விற்பனையாகி உள்ளதாக பல்வேறு ஆய்வுகள்
கூறுகின்றன.
சட்டமன்றத்தில்
சட்டமன்ற உறுப்பினர்கள் மதுவிலக்கு குறித்து பேசினால் மதுகுடிப்பவர்களை
நீங்கள் திருத்துங்கள், உங்கள் கட்சி திருத்தட்டும், மதுக்குடிப்பவர்களை
உங்கள் கட்சியிலிருந்து நீக்குங்கள் என்று ஆணவத்துடன் கேலியும், கிண்டலும்
செய்து கொண்டு அனைத்து அரசியல் கட்சிகளும் மதுக்குடிப்பதை தடுத்திட
பிரச்சாரம் செய்யலாம் வாருங்கள் என்றும் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன்
தரம்தாழ்ந்து பேசுகிறார். மக்கள் நலனுக்காக பல பிரச்சனைகளில்
அனைத்துக்கட்சி கூட்டத்தை கூட்டச்சொல்லி தமிழகத்தின் அனைத்து அரசியல்
கட்சிகளும் கோரிக்கை விடுத்தும், “செவிடன் காதில் ஊதிய சங்காக”,
இருந்துகொண்டு செவி சாய்க்காத இந்த அதிமுக அரசு, மதுப்பிரச்சனையில் மட்டும்
அனைவரும் ஒன்று சேரலாம் என்றுகூறுவது நகைப்புக்குரியதாகும். இதைச்
சொல்வதற்கு உங்களுக்கு வெட்கமாக இல்லையா? எதற்காக நீங்கள் அமைச்சராக
இருக்கிறீர்கள்? மதுகுடிப்பவர்களை தடுக்க முடியவில்லை, திருத்த முடியவில்லை
என்றால், உங்களுக்கு ஆட்சியும், அதிகாரமும் எதற்காக? ஆட்சியை விட்டு
விட்டு போய்விடுங்கள். மதுவில் இருந்து மக்களை மீட்டெடுக்க எங்களுக்குத்
தெரியும். மதுவிலக்கை அமல்படுத்த முடியாது என்று அறிவித்தபிறகு,
தமிழ்நாட்டில் எதற்காக மதுவிலக்குத்துறை? அதற்கு மதுவிற்பனைத்துறை என்று
பெயர் வைத்து நத்தம் விஸ்வநாதனை அமைச்சராக்கலாம்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக