செவ்வாய், 29 செப்டம்பர், 2015

ஆபத்துக்கள் நிறைந்த நனோ தொழில் நுட்பம்


thayagam.com மனித இனத்தின் மாபெரும் கண்டுபிடிப்பு என்று வர்ணிக்கப்படும் தற்போதைய தொழில் நுட்பம் இந்த நனோ தொழில் நுட்பம். ஆனால், இதில் பல ஆபத்துக்கள் இருப்பதாக விஞ்ஞானிகள் கருதுகிறார்கள். நனோ துணிக்கைகள் புற்றுநோய், உடல் உள்ளுறுப்புகளுக்கு சேதம் ஏற்படுத்தல், சுற்றாடலை மாசு படுத்தல் போன்ற பாதிப்புகளை ஏற்படுத்துவதாக நம்பப்படுகிறது.
அதுசரி, நனோ தொழில்நுட்பம் என்பது தான் என்ன? டைட்டேனியம், நாகம், வெள்ளி போன்ற உலோகங்களை எரித்தோ, அரைத்தோ மிகவும் மெல்லிதான பவுடர் தயாரிக்கப்படுகிறது. மெல்லிதான என்றால் அதன் அளவு ஒரு மீட்டரை நூறு கோடியால் பிரித்து வரும் அளவு. ஒரு மயிரின் தடிப்பை பத்தாயிரம் தடவை பிரிக்கும் அளவு. இது ஒரு மூலக்கூறு அளவு வரைக்கும் செல்லும். இந்த பவுடரை வேறு பொருட்களுடன் கலந்து பூச்சாகப் பூசப்பட்டே இந்த நனோ துணிக்கைகள் பயன்படுத்தப்படுகின்றன. நனோ அளவில் இருக்கும் இந்தத் துணி;க்கைகள் புதிய இயல்புகளைப் பெறுகின்றன. மின்னைக் கடத்துதல், றப்பர் போல இழுபடுதல், ஒளியை ஒட்புக விடுதல், நிறம் மாறுதல் போன்ற இயல்களை இந்த துணிக்கைகள் கொண்டிருக்கின்றன. நனோ அளவில் அரைக்கப்படும் தங்கம் அதன் அளவைப் பொறுத்து சிவப்பாகவோ, நீலமாகவோ இருக்கும்.

இந்த மெலிதான பூச்சை கண்ணாடியில் பூசுவதால் அதற்கு வழுக்கும் தன்மையைக் கொடுக்கலாம். அப்போது அந்தக் கண்ணாடியில் தூசி பட்டுத் தங்கி அழுக்காக்காமல் வழுக்கி கீழே சறுக்க இந்தப் பூச்சு உதவும். ஒரு பிளாஸ்டிக் மேற்பரப்பில் இந்த பூச்சைப் பூசி, மின்சாரம் செல்ல வைக்கலாம்.
இன்று இந்த தொழில் நுட்பம் நாளாந்தம் நாங்கள் பாவிக்கும் பல்வேறு பொருட்களில் பயன்படுத்தப்படுகிறது. ஜேர்மன் விஞ்ஞானிகள் தக்காளிச் சாற்றை போத்தலில் இருந்து இலகுவாக வழுகிச் செல்வதற்காக போத்தலின் உட்பாகத்தில் நனோ துகள் பூச்சொன்றைப் பூசி, பாவித்து முடிந்த பின்னர், சாறு போத்தலின் உள்ளே இல்லாமல் துப்புரவாக இருக்கும் வகையில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தினர்.
நாங்கள் உண்ணும் பழங்கள், மரக்கறிகள் கடைகளில் பழுதுறாமல் நீண்ட காலம் இருக்கக் கூடியதாக நனோ துகள் பூச்சுப் பூசப்படுகிறது. நாங்கள் உண்ணும்போது இந்தத் துகள்களும் எங்கள் வயிற்றுக்குள் செல்வதால், நோய்கள் ஏற்படும் அபாயம் ஏற்படுகிறது. ஷம்பூக்கள், பற்பசைகள், முகப்பூச்சு அலங்காரப் பொருட்கள், சுவருக்கு அடிக்கும் வர்ணங்கள், உடைகள், மருந்துகள், என்பவற்றில் எல்லாம் இந்த நனோ துகள்கள் பயன்படுத்தப்படுகின்றன.
இந்த துணிக்கைகள் மிகவும் நுண்ணியவையாக இருப்பதால் சுவாசப்பை, தோல், இரத்தம், மூளை என்பவற்றையும் ஊடுருவிச் செல்லக் கூடியவை.
ஆய்வுகளைச் செய்து அதன் பாதிப்புகளை அறியாத வரைக்கும் இந்த நனோ துகள்கைள உணவுப் பொருட்களில் பாவனை செய்வதைத் தடை செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்த போதும் அரசாங்கங்கள் அதில் பெரிதாக இன்னமும் அக்கறை காட்டவில்லை.
இந்த துகள்களில் அதிகம் பாவிக்கப்படும் நனோ டைட்டேனியம் டையொக்சைட் உலகெங்கும் வருடாந்தம் சுமார் பத்து மில்லியன் கிலோ கிராம் வரை உற்பத்தி செய்யப்படுகிறது. இந்த இரசாயனம் கரைக்கப்பட்ட நீரைக் குடித்த எலிகளில் டி.என்.ஏ, நிறமூர்த்தங்களில் மாற்றம் ஏற்பட்டு, புற்றுநோய் ஏற்படுவது கண்டுபிடிக்கப்பட்டது. இந்த துகள்களைச் சுவாசித்த எலிகளில் சுவாசப் பை புற்று நோய் ஏற்பட்டிருந்து. இந்த துகள்கள் ஊசியால் ஏற்றப்பட்ட போது, எலிகளில் ஈரல் பாதிப்பு ஏற்பட்டது.
ஆனால், நனோ துகள்களால் பல்வேறு நன்மைகளைக் கொண்டு வர முடியும் என்று அதன் ஆதரவாளர்கள் வாதிடுகின்றனர். புற்றுநோயை அழிக்கும் மருந்துகள், சிறந்த சூரியக் கலங்கள், குறைந்த எரிபொருள் பயன்படுத்தும் வாகனங்கள், விமானங்கள் என்பவற்றை உருவாக்க இந்த தொழில் நுட்பம் பயன்படும் என்று அவர்கள் கூறுகின்றனர்.
ஆனால் இந்த தொழில் நுட்பம் அதிகளவு எரிபொருளை விரயமாக்குகிறது என்று விமர்சகர்கள் குற்றம் சாட்டுகின்றனர். பேஸ்போல் மட்டைகளையும் விளையாட்டு அம்புகளையும் உருவாக்கப்பயன்படும் ஒரு கிலோ நனோ துகள்களை உருவாக்க, 167 பரல் எண்ணெய் பயன்படுத்தப்படுகிறது.
இதை விட சீனாவில் 2009ல் பூசும் வர்ணம் தயாரிக்கும் தொழிற்சாலையில் பணி புரிந்த இரண்டு தொழிலாளிகள் இறந்ததுடன் ஐவர் சுகவீனம் உற்றனர். சரியான காற்றோட்டமோ, பாதுகாப்பு உபகரணங்களோ இல்லாமல் பணி புரிந்த இவர்களுக்கு சுவாசப்பையில் நோய் ஏற்பட்டதுடன் முகத்திலும் கைகளிலும் தோல் அரிப்பு ஏற்பட்டது. இவர்களின் சுவாசப் பையில் நனோ துகள்கள் காணப்பட்டன.
இவ்வாறான ஆபத்தான துகள்கள் எங்கள் உணவுகளிலும் கலக்கப்படுகின்றன என்பது தான் ஆபத்தான உண்மை. சப்புகின்ற இனிப்புகள், சொக்கலேட், இனிப்பு போன்ற உணவு வகைகள், சூரியக் கதிர்களில் இருந்து பாதுகாக்கும் பூச்சு, பற்பசை என்பவற்றில் எல்லாம் இந்த துகள்கள் சேர்க்கப்படுகின்றன.
விஞ்ஞானமும் தொழில் நுட்பமும் வளர்கின்றன தான். ஆனால் அவற்றை வைத்து பணம் சம்பாதிக்கும் நிறுவனங்கள் அவற்றால் ஏற்படும் பாதிப்புகளை மூடி மறைக்கவே விரும்புகின்றன. மனித இனம் தனக்கான சவக்குழியைத் தோண்டிக் கொண்டே இருக்கிறது.

கருத்துகள் இல்லை: