தொல்காப்பியர் காலத்துக்கு முன்னரே,
தமிழ்மொழி இயல், இசை, நாடகம் என முத்தமிழாகத் தழைத்துச் செழித்து
விளங்கியது. ஆனால், “தமிழ் மொழி இசைக்கு உரியதில்லை, தெலுங்கிலும்,
வடமொழியிலும் உள்ள இசைநயம் தமிழுக்கு இல்லை; சங்கீதம் நாதவித்தை; அங்கே
மொழிப் பிரச்சனையைப் புகுத்தக் கூடாது; தமிழில் பாடினால் இசை நயம் குன்றிப்
போகும்; கர்நாடக சங்கீதத்தின் புனிதம் கெட்டுவிடும்; தமிழில் உயர்ந்த
பாடல்களும் இல்லை” என்றெல்லாம் ஒரு கூட்டம் கூச்சலிட்டது. தமிழ் நாட்டில்
பிறந்த, தமிழைத் தாய்மொழியாகக் கொண்ட தமிழர்கள்தான் இத்தகைய கூச்சலை
கூச்சமின்றி கூறித் திரிந்தனர். இச்சூழலில் தமிழுணர்வு கொண்ட தமிழர்கள்
குமுறி எழுந்தனர்.
“சங்க
காலத்திலும், சமய இலக்கியத்திலும் வளமும் நலமும் ஊட்டிய தமிழிசைக்கு
எதிர்ப்பா? வேற்றுமொழிப் பாடல்களைத் தமிழ் மக்களிடையே, தமிழ் நாட்டிலேயே,
பாடுகிற அவலம் பரவி வருவதை வேருடன் நீக்கியாக வேண்டும்” எனத் தமிழ்ச்
சான்றோர், ‘தமிழிசைச் சங்க’த்தை 1940 ஆம் ஆண்டு தோற்றுவித்தனர். தமிழிசைச்
சங்கத்தின் இரு கண்களாக செட்டி நாட்டரசர் அண்ணாமலையாரும், டாக்டர்
ஆர்.கே.சண்முகமும் விளங்கினர்.
தமிழிசைச் சங்கம் பல மாநாடுகளை நடத்தியது. தமிழிசையின் செழுமைக்குத் தொண்டாற்றியது. தமிழர்களிடம் தமிழுணர்வை ஊட்டியது.
தமிழிசையின்
உயிர் நாடியான பண்களைப் பற்றிய ஆராய்ச்சியில் மிகுந்த ஆர்வம் கொண்டு, பண்
ஆராய்ச்சிக்குழுவை உருவாக்கினார் ஆர்.கே.சண்முகம்.
இயற்றமிழ்,
இசைத்தமிழ் முதலியவற்றிற்குத் தொண்டாற்றியதுடன், நாடகத் தமிழுக்கும்
புத்துயிரளிக்கும் பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டார்.
கொட்டையூர் சிவக்கொழுந்து தேசிகரால் இயற்றப்பெற்ற ‘சரபேந்திர பூபால
குறவஞ்சி’ நாடகத்தை, தமிழிசைச் சங்கத்தில் பன்முறை நிகழ்வித்தார். அரசியல்
சூழல் காரணமாகப் பல்லாண்டு காலமாக மறைந்து கிடந்த ‘குறவஞ்சி’
நாடகத்திற்குப் புத்துயிர் அளித்தார். வானொலியிலும் அந்நாடகத்தை ஒலி
பரப்பச் செய்தார்.
ஜி.யு.போப் மொழி
பெயர்த்த திருவாசகத்தை படித்து வியந்து, “எங்கோ பிறந்து, தமிழ்நாட்டிற்கு
வந்து, திருவாசகச் சிறப்பை உலகமறியச் செய்திருக்கும் அறிஞர் ஜி.யு.போப்
எழுத்தைப் படித்த பிறகல்லவா, எனக்கு திருவாசகப் பெருமை தெரிய வந்துள்ளது!
என் தாய்மொழியில் எழுதப் பெற்ற அருள் நூலை, அயல் மொழியாளர் எடுத்துரைக்க,
நான் அறிந்து கொள்ளும் அவலத்தை என்னவென்று நினைக்க?” என உள்ளார்ந்து
வருந்திய அப்பெருமகனார், அன்றிலிருந்து தமது வழக்கத்தையும், பழக்கத்தையும்
மாற்றிக் கொண்டார்.
திருவாசகம்,
தேவாரம், திவ்வியப் பிரபந்தம் என, அருள் நூல்களை மிகுந்த ஆர்வத்துடன்
படித்தார். ஓர் தமிழாசிரியரைக் கொண்டு முறையாகத் தமிழ் இலக்கிய
இலக்கணங்களைக் கற்றுத் தேர்ந்தார்.
தமிழ்
நூல்களைச் சந்திபிரித்துப் பதிப்பிப்பதே சிறப்பெனக் கருதினார். அத்தகைய
தமது நோக்கத்தைச் செயற்படுத்தும் விருப்பத்தில், தம்மை மிகவும் கவர்ந்த
சிலப்பதிகாரத்துக்குத் தாம் கற்ற குறிப்புகளையெல்லாம் திரட்டி, ஓர் சிறந்த
உரை எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார். தமிழ் அறிஞர் உலகம், கூர்ந்த
மதிபடைத்த ஆர்.கே.சண்முகம் செட்டியாரின் உரைநூலைப் பாராட்டிப் போற்றியது!
சிலப்பதிகாரப்
பதிப்பின் முன்னுரையில், “சிலம்பைப் படிக்கப் படிக்க என் உள்ளத்தில்
மகிழ்ச்சியும், துக்கமும் கலந்து எழுந்தன. உலகில் பல மொழிகளில்
உருவாகியுள்ள பெருங்காப்பியங்களில் சிலப்பதிகாரம் எத்தகைய
சிறப்பிற்குரியதென்பதை அறிந்தபோது நெகிழ்ந்து மகிழ்ந்தேன். நம் தமிழ்
முன்னோர் நமக்குத் தந்த இப்பெருஞ்செல்வத்தைப் பற்றி இதுகாறும் அறியாமலும்
அனுபவிக்காமலும் இருந்துவிட்டோமே” என வருந்தினேன்.
“நான்
வாழும் நாடு இளங்கோவடிகளும், கம்பனும் பிறந்த நாடு; ஷேக்ஸ்பியரும்,
மில்டனும் பிறந்த நாடன்று என உணர்ந்தேன்” எனக் குறிப்பிட்டுள்ளார்.
‘பண்டிதமணி’
கதிரேசன், ஆர்.கே.சண்முகம் பதிப்பித்த சிலப்பதிகாரத்தைப் பாராட்டியதோடு,
தாமும் அதே முறையில் திருவாசகத்தை உரையுடன் பதிப்பித்தார்.
ஆர்.கே.சண்முகம்,
பத்துப்பாட்டில் ஒன்றாகிய, ‘குறிஞ்சிப்பாட்டு’ இலக்கியத்தை, இனிமையும்,
எளிமையும் கொண்ட உரைநடையில் எழுதிப் பதிப்பித்து வெளியிட்டார்.
கோயம்புத்தூரில்
கந்தசாமி செட்டியாரின் தவப்புதல்வனாக 17.10.1892 ஆம் நாள் பிறந்தார்
ஆர்.கே.சண்முகம். கோவை இலண்டன் மிஷன் உயர்நிலைப் பள்ளியில் பயின்றார்.
பின்னர் சென்னைக் கிறித்துக் கல்லூரியில் சேர்ந்து பட்டம் பெற்றார். சென்னை
சட்டக்கல்லூரியில் சேர்ந்து பயின்று வழக்குரைஞர் பட்டம் பெற்றார்!
சென்னை
சட்டக்கல்லூரியில் பயிலுகின்றபோதே, பொது வாழ்வில் ஈடுபாடு கொண்டு, கோவை
நகராண்மைக் கழக உறுப்பினராகவும், பின்னர் துணைத் தலைவராகவும்
பணியாற்றினார்.
சட்டமன்றத் தேர்தலில்
1920 ஆம் ஆண்டு போட்டியிட்டு வெற்றி பெற்றார். சட்டமன்ற உறுப்பினரானது
முதல் அரசியலில் தீவிரமாக ஈடுபட்டார். அவரது, சட்ட, பொருளாதார அறிவு
நுட்பத்தையும், பேச்சாற்றலையும் கருதி மத்திய அரசு அவரை இந்திய நாட்டுப்
பிரதிநிதியாக பல பன்னாட்டு மாநாடுகளுக்கும், கருத்தரங்கங்களுக்கும்
அனுப்பியது.
புகழ்மிக்க பொருளாதார
மேதையாக விளங்கிய டாக்டர் ஆர்.கே.சண்முகம், கொச்சி சமஸ்தான மன்னரின்
வேண்டுகோளுக்கிணங்க 1935 ஆம் ஆண்டு ‘திவான்’ பொறுப்பை ஏற்றார்.
விடுதலை
பெற்ற இந்தியாவின் அமைச்சரவையில், பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆர்.கே.சண்முகம்
செட்டியாரை முதலாவது நிதியமைச்சராக நியமனம் செய்தார். பிரிட்டனிடமிருந்து
‘ஸ்டர்லிங்’ கையிருப்பை இந்தியாவிற்கு பெற்றுத் தந்து பெருமைச் சேர்த்தார்.
நேர்மையான நிதியமைச்சராகவும் விளங்கினார்.
சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தின் துணை வேந்தராகவும், சென்னை சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும் சிறப்பாகப் பணியாற்றினார்.
அரசியல்
அறிஞராகவும் - பொருளாதாரச் செம்மலாகவும் விளங்கினார். தமிழ், தமிழிசை,
தமிழ்ப்பண், தமிழ்நாடகம் முதலியவை ஓங்கி உயர்ந்து சிறப்படைவதற்கு தமது
வாழ்நாள் முழுவதும் தொண்டாற்றினார்.
“அரசாங்கம்
தமிழில் நடைபெற வேண்டும்; சட்டமன்றத்தில் தமிழில்தான் உரையாற்ற வேண்டும்;
பொருளாதாரத்தைத் தமிழில் ஆராய வேண்டும்; அறிவியலைத் தாய் மொழியான
தமிழில்தான் கற்க வேண்டும்” என்பதை வலியுறுத்தினார். ‘தமிழிசைத் தளபதியாக’
விளங்கிய ஆர்.கே.சண்முகம் தமது அறுபத்து ஒன்றாம் வயதில் 1953 ஆம் ஆண்டு
இயற்கை எய்தினார். அவர் மறைந்தாலும், தமிழிசைக்கு அவர் ஆற்றிய தொண்டு
என்றும் நிலைத்து நிற்கும்!
- பி.தயாளன் keetru.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக