வெள்ளி, 4 ஏப்ரல், 2014

Jeya's Crowd secret தேர்தல் கமிஷன் 'ஸ்டிங் ஆபரேஷன் :அம்பலம்! முதல்வர் பிரசாரத்திற்கு திருப்பி விடப்படும் 'தனியார் பஸ்கள்


முதல்வர் ஜெயலலிதாவின், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு, ஆட்களை அழைத்து வர, தனியார் பஸ்கள் கண்டிப்பாக வர வேண்டும்' என, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.,க்கள்) கட்டாயப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மை என்பது, தேர்தல் கமிஷன் நடத்திய, 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம், தெரிய வந்துள்ளது. அதைத் தொடர்ந்து, விதிகளுக்கு புறம்பாக, வெளியூர்களுக்கு செல்லும், தனியார் பஸ் உரிமையாளர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்டி, போக்குவரத்து கமிஷனருக்கு, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம், புதுச்சேரி உட்பட, 40 லோக்சபா தொகுதிகளிலும், அ.தி.மு.க., தனித்து போட்டியிடுகிறது. இத்தொகுதிகளில் பிரசாரம் செய்வதற்காக, முதல்வர் ஜெயலலிதா, ஹெலிகாப்டரில் ஒவ்வொரு ஊராக சென்று வருகிறார். அவர் செல்லும் ஊரில், ஒரு மைதானத்தில், பிரசார பொதுக்கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. அந்தப் பகுதிக்கு, மாவட்டம் முழுவதும் இருந்து, தொண்டர்கள் வருகின்றனர். கூட்டத்தை அதிகமாக காட்ட வேண்டும் என்பதற்காக, கட்சியினர் வாகனங்களில், பொதுமக்களை அழைத்து வருகின்றனர். இதற்காக, தனியார் பஸ்கள், அதிக அளவில் பயன்படுத்தப்படுகின்றன. வழக்கமான வழித்தடங்களில் ஓடும் தனியார் பஸ்களை, பிரசாரத்திற்கு ஆட்களை ஏற்றிச் செல்லும்படி, ஆர்.டி.ஓ.,க்கள் வற்புறுத்துவதாக, குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தனியார் பஸ்கள் அனைத் தும், முதல்வர் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு, திருப்பி விடப்படுவதால், வழக்கமான வழித்தடங்களில் உள்ள கிராம மக்கள், பஸ் வசதியின்றி அவதிப்படுகின்றனர். இரு தினங்களுக்கு முன், கோவையில் முதல்வர் பிரசார கூட்டம் நடந்தது. இக்கூட்டத்திற்கு, தனியார் பஸ்களில், ஆட்களை அழைத்து வந்துள்ளனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மார்க்சிஸ்ட் கட்சி சார்பில், மாவட்ட கலெக்டரிடம் புகார் அளிக்கப்பட்டது. அம்மனுவில், 'தேர்தல் விதிகளுக்கு புறம்பாக, வழக்கமான வழித்தடங்களில், பஸ்களை இயக்காமல், முதல்வர் கூட்டத்திற்கு, ஆட்களை ஏற்றிச் சென்ற பஸ் உரிமையாளர்கள் மீது, நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கு உடந்தையாக இருந்த, அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, வலியுறுத்தியிருந்தனர்.


இது தொடர்பாக, தொடர்ந்து புகார் வந்ததால், உண்மை நிலையை கண்டறிய, தேர்தல் பணியில் ஈடுபட்ட அதிகாரிகள், 'ஸ்டிங் ஆப்ரேஷன்' நடத்த திட்டமிட்டனர். அதன்படி, அதிகாரிகள், முதல்வர் கூட்டத்திற்கு, கட்சியினரை அழைத்து வந்த, தனியார் பஸ் டிரைவர்களிடம், கட்சி தொண்டர் போல் பேச்சு கொடுத்தனர். அதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்தனர். அப்போது, டிரைவர்கள், 'வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களின் வற்புறுத்தல் காரணமாகவே, நாங்கள் வருகிறோம்' என, தெரிவித்துள்ளனர். இக்காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. அதன்பின் இத்தகவல், தமிழகத் தலைமை தேர்தல் அதிகாரி பிரவீன்குமாருக்கு தெரிவிக்கப்பட்டது. அவர் உடனடியாக, போக்குவரத்து துறை கமிஷனரை அழைத்து,'இது போன்ற புகார் எழாமல் இருக்க, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். விதிகளுக்கு புறம்பாக, வேறு இடங்களுக்கு இயக்கப்படும், பஸ்கள் மீது, உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, உத்தரவிட்டுள்ளார். அவர், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களை, தொடர்பு கொண்டு, தேர்தல் கமிஷன் எச்சரிக்கையை தெரியப்படுத்தி, விதிகளுக்கு புறம்பாக, வழித்தடங்களில் இயங்காமல், தேர்தல் பிரசார கூட்டங்களுக்கு, ஆட்களை ஏற்றி செல்லும், பஸ் உரிமையாளர்கள் மீது, சட்டப்படி நடவடிக்கை எடுக்கும்படி தெரிவித்துள்ளார்.

- நமது நிருபர் -ஜெயலலிதாவின், தேர்தல் பிரசார பொதுக்கூட்டத்திற்கு, ஆட்களை அழைத்து வர, தனியார் பஸ்கள் கண்டிப்பாக வர வேண்டும்' என, வட்டார போக்குவரத்து அலுவலர்கள் (ஆர்.டி.ஓ.,க்கள்) கட்டாயப்படுத்துவதாக எழுந்த குற்றச்சாட்டு உண்மை என்பது, தேர்தல் கமிஷன் நடத்திய, 'ஸ்டிங் ஆபரேஷன்' மூலம், தெரிய வந்துள்ளது.அதிகாரிகள், முதல்வர் கூட்டத்திற்கு, கட்சியினரை அழைத்து வந்த, தனியார் பஸ் டிரைவர்களிடம், கட்சி தொண்டர் போல் பேச்சு கொடுத்தனர். அதை ரகசியமாக வீடியோவில் பதிவு செய்தனர். அப்போது, டிரைவர்கள், 'வட்டாரப் போக்குவரத்து அலுவலர்களின் வற்புறுத்தல் காரணமாகவே, நாங்கள் வருகிறோம்' என தெரிவித்துள்ளனர். இக்காட்சி வீடியோவில் பதிவு செய்யப்பட்டது. இவ்வளவு தெரிந்தும் பிரவீண்குமார், அம்மாவின் ஆதரவாளர் என்பதால், எந்த கடுமையான நடவடிக்கையும் எடுக்க மாட்டார். அவர்களை மன்னித்து, இனி ( அடுத்த தேர்தலில் ) நேர்மையாக நடந்து கொள்ளுங்கள் என்று அன்போடு அறிவுரை வழங்கி அனுப்பிவிடுவார் எனபது நிச்சயம்
 

கருத்துகள் இல்லை: