பாஜகவும், அதன் தலைவர்களும் வெறுப்பு அரசியலை பரப்பி வருவதாக, காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி கடுமையாக விமர்சித்தார்.
அசாம் மாநிலத்தின் லக்கிம்பூரில் இன்று (ஞாயிறு) நடைபெற்ற தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி பேசும்போது, "நாடு முழுவதும் வலம் வரும் எதிர்கட்சியினர் பெரிய பெரிய விஷயங்களைப் பேசி வருகிறார்கள்.
குறிப்பாக, பாஜகவினரின் பேச்சுக்கும் செயலுக்கும் இடையே மிகப் பெரிய அளவில் வேறுபாடுகள் இருக்கின்றன. அவர்கள் ஆட்சியில் இருந்த காலத்தில் என்ன செய்தார்கள்?'' என்று கேள்வி எழுப்பினார்.
பாஜகவின் பிரச்சார முறையை விமர்சித்த சோனியா, அக்கட்சியும் அதன் தலைவர்களும் வெறுப்பு அரசியலைப் பரப்புவதாக, நரேந்திர மோடி உள்ளிட்டோரை கடுமையாக குற்றம்சாட்டினார்.
"நம் நாட்டைப் நாட்டை பிளவுபடுத்தும் சக்தியாகவே பாஜக இருக்கிறது. நாட்டை பலவீனப்படுத்தும் வகையில் அக்கட்சியினர் செயல்படுகின்றனர். அதேவேளையில், தேசத்தைக் கட்டமைக்கும் பணியில் காங்கிரஸ் ஈடுபட்டுள்ளது. நாட்டின் கலாச்சாரத்தையும் பண்பாட்டையும் மேம்படுத்தும் வகையில் காங்கிரஸ் கட்சியினர் செயல்படுகின்றனர்" என்றார் அவர்.
காங்கிரஸ் 2009 தேர்தலில் அளித்த வாக்குறுதிகளில் பெருமளவில் நிறைவேற்றப்பட்டுவிட்டது என்றவர், "எதிர்வரும் தேர்தலையொட்டி வெளியிட்டுள்ள வாக்குறுதிகளையும் முழுமையாக நிறைவேற்றுவோம். பாஜகவைப் போல் நாங்கள் பொய்யான வாக்குறுதிகளை அளிப்பதில்லை" என்றார் சோனியா.
அசாம் மாநில முன்னேற்றத்துக்கு மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்ட நடவடிக்கைகளை பட்டியலிட்ட அவர், "பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், அடித்தட்டு மக்களின் நலனில் காங்கிரஸ் மிகுந்த அக்கறை கொண்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், ஊரக வேலைவாப்பு உறுதியளிப்புத் திட்டங்களால் மக்கள் பலனடைந்து வருகின்றனர்" என்றார் சோனியா காந்தி  tamil.thehindu.com/