வியாழன், 3 ஏப்ரல், 2014

சோர்ந்துவிட்ட திமுகவின் உண்மை தொண்டர்கள் ? ஜால்ராக்களை வைத்து அரசியல் செய்யும் ஸ்டாலின் ?

தமிழகத்தில், 1952, 1967ம் ஆண்டுகளில் நடந்த சட்டசபை தேர்தல்களை தவிர, 1996ல் நடந்த தேர்தல் வரை, சட்டசபை தேர்தலும், லோக்சபா தேர்தலும் ஒரே நேரத்தில் தான் வரும். அதனால், எந்த கட்சி சட்டசபையை பிடிக்க இருந்ததோ, அந்த கட்சியின் கூட்டணிக்கே லோக்சபா தேர்தலிலும் அதிக இடங்களில் வெற்றி கிடைக்கும்
1996க்கு பின், மத்திய அரசு நிலையாக அமையாததால், தொடர்ந்து 1998லும், 1999லும் லோக்சபா தேர்தல்கள் வந்தன. அதன்பின், தமிழகத்தில் சட்டசபை, லோக்சபா தேர்தல்கள் தனித்தனியாக நடந்தன. 1999க்கு பின், மாநிலத்தை ஆளும் கட்சி, மூன்று ஆண்டுகள் பதவியில் இருந்த பின்னரே, லோக்சபா தேர்தல் வருகிறது. அதனால், லோக்சபா தேர்தல், மாநிலத்தை ஆளும் கட்சிக்கு அரையிறுதி தேர்வை போல் அமைந்து விடுகிறது. 1991 முதல், வழக்கமாக, தி.மு.க.,வும், அ.தி.மு.க.,வும் மாறி மாறி தான் தமிழகத்தில் ஆட்சியில் அமர்ந்து வருகின்றனர். அதனால், அரைஇறுதி தேர்வாக வரும் லோக்சபா தேர்தலில், அவை வெற்றி பெறுவது இல்லை. உதாரணமாக, 1998ல் வந்த லோக்சபா தேர்தலின் போது, தி.மு.க., ஆட்சிக்கு வந்து இரண்டு ஆண்டுகள் ஆகி இருந்தன. அப்போது, பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்த அ.தி.மு.க., தான் வெற்றி பெற்றது. உஷாரான தி.மு.க., அடுத்து 1999ல், அ.தி.மு.க., சதியால் வந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வுடன் கூட்டணி வைத்து, அமோகமாக வென்றது.
அதற்கு பின், லோக்சபா தேர்தல்களில் தி.மு.க.,விற்கு தோல்வியே இல்லை. 2004ல், மாநிலத்தில் அ.தி.மு.க., ஆட்சியில் இருந்த போதும், 2009ல் மாநிலத்தில் தி.மு.க., ஆட்சியில் இருந்தபோதும், லோக்சபா தேர்தலில், தி.மு.க.,வே வென்றது.



14 ஆண்டுகள் தொடர்ந்து மத்திய அரசில் அங்கம் வகித்த இந்த மாபெரும் சாதனைக்கு,

* தேசிய அரசியல் போக்கை சரியாக கணித்து, அதற்கேற்ப சாதுர்யமாக கூட்டணி அமைப்பது

* தி.மு.க.,வின் செம்மையான கட்சி கட்டமைப்பை முழுமையாக பயன்படுத்தி, திறம்பட தேர்தல் நேர நிர்வாகம் செய்வது ஆகியவை தான் காரணங்கள். இந்த கண்ணோட்டத்தில், தி.மு.க., இந்த முறை மீண்டும் ஜெயிக்குமா என்றால், அது மிகவும் சிரமம் என்ற, பதிலே பல்வேறு தரப்புகளில் இருந்து வருகிறது. ஏனெனில், அந்த கட்சியை லோக்சபா தேர்தலில் வெற்றிபெற செய்த காரணிகள், இப்போது இல்லை என, அரசியல் பார்வையாளர்கள் தெரிவிக்கின்றனர். ஒவ்வொன்றாக பார்ப்போம். கூட்டணி: தனிப்பட்ட விருப்பு வெறுப்புகளுக்கு இடம் கொடுக்காமல், அரசியல் கணக்கிற்காகவே, 1999 முதல், தி.மு.க., லோக்சபா தேர்தல் கூட்டணி அமைத்து வருகிறது. ஆனால், இந்த முறை, கருணாநிதி குடும்ப உறுப்பினர்களின் விருப்பு வெறுப்புகள் மற்றும் தலைமையின் தளர்ச்சி, தி.மு.க., சரியான கூட்டணியை அமைப்பதில் இருந்து தடுத்துவிட்டன./div> தேர்தல் நிர்வாக திறன்: கூட்டணி போனால் போகிறது, தி.மு.க.,வின் தேர்தல் நிர்வாக பலத்தை வைத்தே, அந்த கட்சி வெற்றி பெறும் என, சில அரசியல் ஆய்வாளர்கள் கருதினர். அவர்கள் முன்வைத்த உதாரணம், 2009 லோக்சபா தேர்தல். அப்போது, இலங்கை பிரச்னையால், காங்கிரசுக்கு கடும் எதிர்ப்பு இருந்தது. தமிழகத்தில், தெருவுக்கு தெரு காங்கிரசுக்கும், தி.மு.க.,விற்கும் எதிரான கோஷங்கள் இருந்தன. இருப்பினும், சிறுபான்மையினர் ஓட்டு கருதி, கருணாநிதி காங்கிரஸ் கூட்டணியை விட விரும்பவில்லை. அதனால், பலவீனமான காங்கிரசோடு, தேர்தலை சந்தித்த தி.மு.க., மண்ணை கவ்வும் என, பல கருத்துக் கணிப்புகள், அந்த நேரத்தில் தெரிவித்தன. இருப்பினும், தி.மு.க., 18 இடங்களையும், காஙகிரஸ் 8 இடங்களையும் கைப்பற்றி, மகத்தான வெற்றி பெற்றன. இதற்கு முழு காரணம், தி.மு.க.,வின் கள நிர்வாக திறன். பிரசாரம் செய்வதோடு நிறுத்தி கொள்ளாமல், தி.மு.க., நிர்வாகிகளும், செயல்வீரர்களும், 'திருமங்கலம்' ரீதியில் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து, வாக்காளர்களை ஓட்டுச்சாவடி வரை அழைத்துச் சென்று, ஓட்டுப்போட வைத்தனர். இதனால், தி.மு.க., முதலீட்டுக்கு நல்ல லாபம் கிடைத்தது. ஆனால், இந்த முறை, இத்தகைய நிர்வாக திறனும் இல்லாத கட்சியாக தி.மு.க., காட்சி அளிக்கிறது. 2009ல், மொத்த கட்சி நிர்வாக கட்டமைப்பும், தலைமையின் பின்னால் அணிவகுத்து நின்று, காலால் இட்ட காரியங்களை தலையால் செய்து வந்தது. ஆனால், இந்த முறை, வேட்பாளர்கள் மேல் அதிருப்தி, உட்கட்சி பூசல் உள்ளிட்ட காரணங்களால், கட்சி பலம் இழந்து உள்ளது.

இதற்கு, சமீபத்தில் நடந்து வரும் சம்பவங்களே சான்று. தஞ்சாவூரில், வேட்பாளர் டி.ஆர்.பாலு ஆதரவாளர்களும், 'சீட்' கிடைக்காததால்

அதிருப்தியாளராக மாறிய, பழனிமாணிக்கம் ஆதரவாளர்களும் மோதிக் கொண்டதில், 10 பேர் படுகாயம் அடைந்தனர். 'சீட்' கிடைக்காதவர்கள் எல்லாம் தொகுதி தோறும் அதிருப்தியாளர்களாக மாறி, தேர்தல் பணியில் ஆர்வமில்லாமல் இருப்பதாக தகவல்கள் வருகின்றன.

தஞ்சாவூர் - பழனிமாணிக்கம், வேலூர் - துரைமுருகன், தூத்துக்குடி - அனிதா ராதாகிருஷ்ணன், திருநெல்வேலி - ஆவுடையப்பன் மற்றும் பூங்கோதை, தென்சென்னை - மா.சுப்ரமணியன், தர்மபுரி - முல்லை வேந்தன், கன்னியாகுமரி - ஹெலன் டேவிட்சன், திருச்சி - ரகுபதி, ஈரோடு - முத்துசாமி, திண்டுக்கல் - ஐ.பெரியசாமி, தேனி - செல்வேந்திரன் என, முழு நீள அதிருப்தியாளர்கள் பட்டியல், அக்கட்சியினரால் வாசிக்கப்படுகிறது. இந்த நிலையில், தி.மு.க.,வின் புகழ்பெற்ற ஓட்டுச்சாவடி மேலாண்மை உத்திகள் பலிக்காது. அதே போல், கடந்த தேர்தல்களை போல் அல்லாமல், இப்போது ஐந்து முனை போட்டி உள்ளதால், தி.மு.க., 9 - 10 இடங்களில் வெற்றி பெற்றாலே மிகை என்ற கருத்து, அரசியல் வட்டாரங்களில் நிலவுகிறது.  முழுக்க முழுக்க ஸ்டாலின் உருவாக்கிய குழப்பங்கள் இவை.  ஸ்டாலின் மாற்றிக் காட்டுவாரா? 

கருத்துகள் இல்லை: