திங்கள், 31 மார்ச், 2014

பெண் கவிஞர் சல்மா : இந்திரா உள்பட பெண் தலைவர்கள் மோசமாக நடந்து கொண்டனர்!


பெண் கவிஞர் சல்மா.| கோப்புப் படம்.
பெண் கவிஞர் சல்மா.| கோப்புப் படம்.
நாட்டின் பெரிய பொறுப்புக்கு வந்த பெண் தலைவர்களெல்லாம் பெரும்பாலும் மோசமாகவே நடந்து கொண்டார்கள் என்று திமுக மகளிரணி பிரச்சாரக் குழுச் செயலாளரும், பிரபல பெண் கவிஞருமான சல்மா கூறியுள்ளார்.
திமுகவில் அழகிரிக்கு எந்த செல்வாக்கும் இல்லை என்பது தேர்தல் முடிவில் தெரியும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
திமுக பொதுக்குழு உறுப்பினரும், திமுக எம்.பி. கனிமொழியின் தோழியுமான கவிஞர் சல்மா ’தி இந்து’வுக்கு அளித்த பேட்டி வருமாறு:
இந்த தேர்தலில் நீங்கள் தமிழகம் முழுவதும் பிரச்சாரம் செய்வீர்களா?
எனது சொந்தத் தொகுதியான கரூரில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக முஸ்லிம்கள் வசிக்கும் பகுதிகளில் வீடு, வீடாகச் சென்று வாக்குக் கேட்டுள்ளேன். எனது சொந்தப் பகுதியான வல்லநாடு, துவரங்குறிச்சி போன்ற பகுதிகளில் நான் அனைத்து முஸ்லிம் பெண்களுக்கும் நன்கு அறிமுகமானவள்.
எனவே எனது தொகுதியில் பிரச்சாரம் செய்வதுதான் திருப்தி அளிக்கிறது. மேலும் கள்ளக்குறிச்சி, கோவை தொகுதிகளில் போட்டியிடும் எங்கள் நண்பர்களுக்காகவும் பிரச்சாரம் செய்ய உள்ளேன். பட்டுக்கோட் டையில் டி.ஆர்.பாலுவுக்கு ஆதரவாகப் பிரச்சாரம் செய்துள்ளேன்.
திமுகவில் உங்களுக்கு சரியான முக்கியத்துவம் இல்லையென்று கூறப்படுகிறதே?
அப்படியெல்லாம் எதுவுமில்லை. ஊடகங்கள் எதையாவது எழுதினால் அதற்கு நான் பொறுப்பல்ல. வரும் 13-ம் தேதி கூட எங்கள் ஊருக்குத் தலைவர் (கருணாநிதி) வரவுள்ளார். அதற்கான முழு ஏற்பாட்டில் தீவிரமாக உள்ளோம்.
வெற்றி வாய்ப்பு எப்படி உள்ளது?
மிகவும் நன்றாக உள்ளது. ஜெயல லிதாதான் போகுமிடங்களெல்லாம் ஒரே மாதிரியாகப் பேசுகிறார். அவரது பேச்சு மக்களுக்குப் பிடிக்கவில்லை. மின்வெட்டு பெரும் பிரச்சினையாக உள்ளது. பல நேரங்களில் நாங்கள் கிராமங்களுக்குப் பிரச்சாரத்துக்குப் போகும்போது மின்சாரம் இருப்ப தில்லை. இருண்டு கிடக்கின்றன.
ஒரு பெண் பிரதமராக வந்தால் வரவேற்பீர்களா?
நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வருவது ஆணா, பெண்ணா? என்பது முக்கியமல்ல. நல்ல நிர்வாகம் தெரிந்தவராக இருக்க வேண்டும். பொதுவாக நாட்டின் தலைமைப் பொறுப்புக்கு வந்துள்ள பெரும்பாலான பெண்கள் மோசமாகவே நடந்து கொண்டுள்ளார்கள் என்பதுதான் வரலாறு. இலங்கையின் சந்திரிகா, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, மேற்கு வங்கத்தின் மம்தா பானர்ஜி, தமிழகத்தின் ஜெயலலிதா என அனைவருமே மோசமாக நடந்து கொண்டதுதான் வரலாறாக உள்ளது. பெண் தலைமைப் பொறுப்புக்கு வர வேண்டும் என்பதற்காகக் கெட்டதை ஏற்றுக்கொள்ள முடியாது.
அழகிரியின் நீக்கம் கட்சியைப் பாதிக்குமா?
அழகிரியை நீக்கியது கட்சியைப் பெரிதாக பாதிக்கும் என்று சொல்ல முடியாது. அவருக்கு மக்கள் மத்தியி லோ, தொண்டர்கள் மத்தியிலோ செல்வாக்கு இல்லை. இது தலைமை க்கும் தெரியும். அதனால்தான் தயக்கமின்றி அவரை நீக்கியுள்ளனர். அழகிரியின் செல்வாக்கு என்னவென்று இந்தத் தேர்தலுக்குப் பிறகு தெரிந்து விடும்.
முக்கியமான நெருக்கடி காலத்தில், கட்சியைத் தென் மாவட்டங்களில் வளர்த்தவரைப் புறக்கணிப்பது சரியா?
திமுகவில் 40 ஆண்டுகளுக்கு மேலாக அனைத்து வகையிலும் பணியாற்றி, கட்சியை வளர்த்தவர் தளபதிதான் (ஸ்டாலின்). எனவே அவருக்குதான் செல்வாக்கு உள்ளது.
கனிமொழிக்கும் உங்களுக்கும் இடையிலான நட்பில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?
கனிமொழி, கட்சியின் தலைமைப் பொறுப்பில் இருப்பவர். நான் அவருக்குக் கீழ் பணியாற்றும் நிலையில் உள்ள தொண்டர் என்பதுதான் எங்களுக்குள் இருக்கும் உறவு. இதில் எந்தக் காலத்திலும் மிகுந்த நெருக்கமோ, விரிசலோ ஏற்பட்டதில்லை. இருவரும் கட்சிப் பணியாற்றும் நல்ல நண்பர்கள். இதைத் தவிர அவருக்கும், எனக்கும் சண்டையோ, விரோதமோ இல்லை. அது மீடியாக்களின் கற்பனை.
இவ்வாறு அவர் கூறினார்.
கவிஞர் சல்மாவுக்கு இந்த ஆண்டுக்கான இலக்கியப் பெண் எழுத்தாளருக்கான பெமினாவின் ’வுமன் ஆப் வொர்த் ’ என்ற விருது, சனிக்கிழமை வழங்கப்பட்டுள்ளது.  tamil.thehindu.com/

கருத்துகள் இல்லை: