நீ என்ன சாதி?-
உலகிலேயே மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று பெருமையடித்துக் கொள்கிறோம். மிக
அதிகமான வாக்காளர்கள் நேரடியாக பங்கேற்கும் தேர்தல் முறை இதுதான் என்று
பாடங்களில் எழுதி வைத்திருக்கிறார்கள். மக்களால் நேரடியாகத்
தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளால் நடத்தப்படும் ஜனநாயக அரசு என்று
பிபிசியில் செய்தி வாசிக்கிறார்கள்.
கள்ள வாக்குகளைத் தடுத்துவிட்டார்கள். செல்லாத வாக்குகளை முற்றிலும்
தவிர்த்துவிட்டார்கள். வாக்கு எண்ணிக்கையில் நடந்த குளறுபடிகள்
குறைக்கப்பட்டுவிட்டன. இப்படி ஏகப்பட்ட விஷயங்களைத் தேர்தல் ஆணையம்
செயல்படுத்திவிட்டது.
ஆனால் இது போதுமா?
கடந்த சில தேர்தல்களாக வாக்குகளை பண்டமாற்று பொருளாக மாற்றிவிட்ட
கலாச்சாரத்தை இனி எப்படித் தடுக்கப் போகிறார்கள்? தேர்தலில் சாதி, மதம்
உள்ளே புகுந்து நடத்திக் கொண்டிருக்கும் அழிச்சாட்டியங்களை எப்படி
நிறுத்தப் போகிறார்கள்? உண்மையிலேயே தகுதியான வேட்பாளர்கள்தான் நமக்குக்
கிடைக்கிறார்கள்? சரியான வேட்பாளர்களைத்தான் தேர்ந்தெடுக்கிறோமா? இப்படி
ஏகப்பட்ட கேள்விகள் தொக்கி நிற்கின்றன. ஜாதிரீதியான கணக்கு கூடல் அடிப்படையே நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி தோல்வியை தீர்மானிக்க போகிறது ! பல குப்பைகள் வெற்றி பெறப்போகின்றன , எல்லோருக்கும் அதிர்ச்சி காத்திருக்கு
கட்சிகள் தங்கள் வேட்பாளர்களை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கின்றன?
மக்கள் எந்த அடிப்படையில் தங்களது பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள்
போன்ற அடிப்படையான விஷயங்களை மேம்போக்காக ஆராய்ந்தாலே நமது தேர்தல்
முறையின் அத்தனை பெருமைகளும் பல்லிளித்துவிடும்.
அகில இந்திய அளவில் வேண்டாம்- தமிழ்நாட்டில் உள்ள முப்பத்தொன்பது
தொகுதிகளில் எந்தத் தொகுதியை வேண்டுமானாலும் எடுத்துக் கொள்வோம். பெரிய
கட்சிகள் எந்த அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுத்திருக்கின்றன?
இரண்டே விஷயங்கள்தான்: ஒன்று பணம், மற்றொன்று சாதி. இந்த இரண்டையும் தவிர
நம்மிடம் வேறு எந்தக் காரணத்தைச் சொன்னாலும் அது பொய்தான்.
அறுபது வருடங்களாக சாதியை ஒழிக்கப் போகிறோம் என்று நம்மிடம் சொல்லி
வருபவர்கள்தான் சாதியின் அடிப்படையில் வெற்றி வாய்ப்பை பார்க்கிறார்கள்.
இப்படி சாதியின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுப்பது வெறும்
தேர்தல் வெற்றியோடு நின்றுவிடுவதில்லை. தேர்தலுக்குப் பிறகும் இந்தப்
பிரிவினை அப்படியேதான் இருக்கப் போகிறது. கவுண்டர்கள் அதிகமாக இருக்கும்
தொகுதிகளில் ஏன் செட்டியாருக்கும், படையாச்சிக்கும்
வாய்ப்பளிக்கப்படுவதில்லை? வன்னியர்களின் தொகுதிகளில் ஏன் தேவர்களுக்கும்
முதலியார்களுக்கும் இடமளிக்கப்படுவதில்லை- இங்கெல்லாம் ஏன்
தலித்துக்களுக்கு ஸீட் தருவதில்லை என்று கேட்கவில்லை. இன்னொரு இடைநிலைச்
சாதிக்காவது வாய்ப்புக் கொடுக்கலாம் அல்லவா? கொடுக்க மாட்டார்கள். ஒரு சாதி
பெரும்பான்மையாக இருக்கும் ஒரு தொகுதியில் அதே சாதிக்காரன்தான்
நிறுத்தப்பட வேண்டும்.
இங்கு வேட்பாளர்களின் அடிப்படைத் தகுதி என்பதே சாதிதான். வேட்பாளர்
கட்சிக்காக என்ன செய்தார்? தொகுதிக்காக என்ன செய்தார்? சமூகத்திற்காக என்ன
செய்தார்? என்ற எந்தக் கேள்வியும் அவசியம் இல்லை. கட்சிகளும் இதையெல்லாம்
பார்ப்பதில்லை, வாக்காளர்களும் இதையெல்லாம் கண்டு கொள்வதில்லை. ‘நம்ம
சாதிக்காரனா?’ என்று பார்ப்பார்கள். ‘பணம் கொடுப்பியா?’என்று கேட்பார்கள்.
அவ்வளவுதான்.
ஊடகங்களும் வெட்கமேயில்லாமல் எழுதுகிறார்கள்- தர்மபுரி கலவரத்தின் காரணமாக
அன்புமணிக்கு வன்னியர் வாக்குகள் முழுமையாக வந்து சேரும் என்று பேசுவது
அங்கேயிருக்கும் தலித்துகளைத் தூண்டிவிடுவதுதானே? நீங்கள் தேர்தல் மூலமாக
பழி தீர்த்துக் கொள்ளுங்கள் என்று வன்னியர்களை உசுப்பிவிடுவதுதானே?
இப்படியே பல்லைக் கெஞ்சிக் கொண்டிருந்தால் எந்தக் காலத்தில் சாதியை
ஒழிக்கப் போகிறோம்?‘பொள்ளாச்சியில் கவுண்டர் வாக்குகளின் காரணமாக ஈஸ்வரன்
கடும் போட்டியைக் கொடுக்கிறார்’‘வேலூரில் முதலியார்கள் அதிகம் என்பதால்
ஏ.சி.சண்முகத்திற்கு வாய்ப்பிருக்கிறது’ ‘ராமநாதபுரத்தில் இசுலாமியர்கள்
வாக்குகள் இந்த முறை சிதறக் கூடும்’ என்று வரிக்கு வரி சாதியையும்
மதத்தையும் இழுக்கிறார்கள்- இவை வெறும் உதாரணங்கள்தான். இப்படி ஒவ்வொரு
வேட்பாளரின் வெற்றிவாய்ப்பையும் வெறும் சாதியின் அடிப்படையிலும், மதத்தை
முன்வைத்துமே கணித்து எழுதுகிறார்கள். சாதியின் அடிப்படையில்தான்
வேட்பாளர்களின் வெற்றிவாய்ப்பு நிர்ணயிக்கப்படுகிறது என்பதுதான் களத்தில்
நிலவும் உண்மை என்றாலும் ஊடகங்களுக்கு ஒரு பொறுப்புணர்ச்சி இருக்க
வேண்டுமல்லவா? அரசியல்வாதிகளைவிடவும் ஊடகவியலாளர்கள் ஒரு படி மேல் என்று
நம்புகிறோம். பிறகு ஏன் ஒரு சாதாரண புரிதல் கூட இல்லாமல் எழுதுகிறார்கள்.
ஒரு சாதியின் காரணமாக ஒரு வேட்பாளர் வெல்வார் என்று வெளிப்படையாக பேசச்
செய்வது ஒரு கொடூரம். குரூரமும் கூட. சாதியின் அடிப்படையில் வேட்பாளர்களைத்
தேர்ந்தெடுக்கும் அரசியல் கட்சிகள் அந்தப் பாவத்தைச் செய்தால், அதை
வெளிப்படையாக எழுதி ஊடகங்கள் அந்தப் பாவத்திற்கு மேலும் பாவம்
சேர்க்கின்றன.
சாதியை அடிப்படையாக வைத்து குறிப்பிட்ட சதவீத வாக்குகளை வளைத்தால் மட்டும்
போதாது அல்லவா? அதனால் ஒவ்வொரு கட்சிக்காரனுமே வாக்குக்காக காசு
கொடுக்கிறார்கள். ஆயிரம் கொடுப்பவர்களும் உண்டு; ஐந்நூறு கொடுப்பவர்களும்
உண்டு; முந்நூறு கொடுப்பவர்களும் உண்டு. நம்மவர்கள் யாரிடமும் வேண்டாம்
என்று சொல்வதில்லை. பணத்தை யார் வேண்டாம் என்பார்கள்? எல்லோரிடமும்
வாங்கிக் கொண்டு அதிகமாகக் கொடுப்பவர்களுக்கு வாக்களித்துவிடுகிறார்கள்.
சில வருடங்களுக்கு முன்பாக நடந்த உள்ளாட்சித் தேர்தலில் உணவு பரிமாறிய
இலையில் இருக்கும் சோறு மீது சத்தியம் வாங்கிக் கொண்டு காசு கொடுத்த வேலையை
செய்தார்கள். நேரில் பார்த்திருக்கிறேன். சத்தியம் செய்துவிட்டால் மாற்றி
வாக்களிக்க மாட்டார்கள் என்ற நம்பிக்கைதான். குழந்தைகளின் மீது சத்தியம்
வாங்குவது, கடவுளின் முன்பாக சத்தியம் வாங்கிக் கொண்டு பணம்
கொடுப்பதெல்லாம் கூட தேர்தல் பரப்புரையின் ஒரு அங்கமாகிவிட்டது.
சாதியின் அடிப்படையில் வேட்பாளர்களைத் தேர்ந்தெடுக்கும் போக்கு, பல கோடி
ரூபாய்களைக் கொட்டி வாக்குகளை விலைக்கு வாங்கும் கலாச்சாரம் என்று
நாறிக்கிடக்கும் இந்த லட்சணத்தில்தான் மிகப்பெரிய ஜனநாயக நாடு என்று படம்
ஓட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
தேர்தல் மாற்றித் தேர்தல் இந்தப் பிரச்சினைகள் சிக்கலாகிக் கொண்டேதான்
இருக்கின்றன. ஒரு கட்டத்தில் வெளிவரவே முடியாத சிக்கலில் இந்தியத் தேர்தல்
முறை மாட்டிக் கொள்ளப் போகிறது.
அமைதியான தேர்தலை நடத்துவது மட்டும் தேர்தல் ஆணையத்தின் கடமை இல்லை.
வெளிப்படையான தேர்தல் மட்டுமே இங்கு முக்கியமில்லை. தேர்தல் முறையின்
பிண்ணனியில் நம் கண்களுக்கே தெரியாமல் படர்ந்து கொண்டிருக்கும்
பார்த்தீனியத்தின் வேர்களில் கெரசின் ஊற்றுவதும் தேர்தல் ஆணையத்தின்
கடமைதான். இன்னும் ஐம்பது வருடங்களுக்குப் பிறகு தேர்தல் எப்படி நடக்க
வேண்டும் என்ற vision உடன் நடவடிக்கைகளை மேற்கொள்வதும் அவர்களின் பணிதான்.
இதையெல்லாம் இங்கு அமர்ந்து கொண்டு எழுதிவிட்டு போய்விடலாம். நூறு கோடி
மக்கள் வாழும் நாட்டில் இத்தனை தேர்தல்களை நடத்திப் பார்த்தால்தானே
தெரியும் என்று சொல்லலாம்தான். ஆனால் அடிப்படையான இந்தச் சிக்கல்களை சரி
செய்யாவிட்டால் இந்த ஜனநாயகம் என்பதெல்லாம் வெறும் கேளிக்கூத்தாகிவிடும்.
நீண்டகால நோக்கில் இந்த பிரச்சினைகளை அணுகத் தெரிந்த ஒரு தேர்தல் ஆணையர்
வந்தால் மட்டும் போதாத. தேசிய அளவில் இத்தகைய சீர்திருத்தங்களைப் பற்றி ஒரு
விவாதம் உருவாக வேண்டும். தேர்தலுக்கு தேர்தல் seasonal ஆக தேர்தல்
சீர்திருத்தங்கள் பற்றி பேசாமல் தொடர்ச்சியான உரையாடல்களால் மட்டுமே துளி
அசைத்துப் பார்க்கலாம். ஆனால் அதெல்லாம் இந்தியாவில் நடக்கும் என்று
நம்பிக்கையில்லை. இப்படியே உருட்டிக் கொண்டிருப்போம். நமது வேட்பாளர்கள்
இருபது கோடியைச் செலவு செய்து வென்றால் முதலீடு செய்த தொகையை மூன்றாவது
மாதத்தில் வாரிவிடலாமா அல்லது ஆறு மாதங்கள் தேவைப்படுமா என்று கணக்குப்
போட்டுக் கொண்டிருப்பார்கள். அதுதான் நடக்கும். nisaptham.com/
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக