ஊட்டி: நீலகிரி தொகுதி அதிமுகவேட்பாளருக்கு ஆதரவாக பிரசாரம் செய்ய
அதிமுக கொள்கை பரப்பு இணைச் செயலாளர் நாஞ்சில் சம்பத் கலந்து கொண்ட
கூட்டத்தில் கவர்ச்சிகரமான குத்தாட்டம் இடம் பெற்றதால் கூடியிருந்த பெண்கள்
என்னடா கருமம் இது என்று முகம் சுளித்தபட இடத்தைக் காலி செய்ததால்
பரபரப்பு ஏற்பட்டது.
இப்போதெல்லாம் கொள்கையைச் சொல்லிக் கூட்டத்தைக் கூட்ட முடியாது. காரணம்
என்ன மாதிரியான கொள்கையை கட்சிகள் வைத்துள்ளன என்பது கட்சிகளுக்கேத்
தெரியவில்லை. இதனால் குத்தாட்டம், கவர்ச்சிகரமான ஆட்டம் பாட்டம் என்று சினிமாத்தனமாக
நடந்து கொண்டால்தான் கொஞ்சமாச்சும் கூட்டம் கூடுகிறது. குறிப்பாக
அதிமுகவின் தேர்தல் பிரசாரக் கூட்டங்களில்தான் கவர்ச்சிகரமான
குத்தாட்டங்கள் அதிகம் இருப்பதாக குற்றச்சாட்டு உள்ளது.
கவர்ச்சிகரமான முறையில் நடைபெறும் இந்தக் குத்தாட்டங்களைப் பார்க்க
மக்களும் ஓரளவு வருகின்றனர். குறிப்பாக ஆண்கள் கூட்டம் கட்டி ஏறுகிறது.
இந்த நிலையில் நீலகிரியில் அதிமுகவினரின் குத்தாட்டத்தால் பெண்கள் மிரண்டு
ஓடி விட்டனர்.
நீலகிரி அதிமுக வேட்பாளரை ஆதரித்து அதிமுக கொள்கை பரப்புச் செயலாளர்
நாஞ்சில் சம்பத் நேற்று ஊட்டி காபிஹவுஸ் பகுதியில் பேசினார். முன்னதாக
கூட்டத்தை கூட்டுவதற்காக நடன கலைஞர்களின் நடன நிகழ்ச்சி நடந்தது. அதைப்
பார்க்க மக்கள் கூடியிருந்தனர்.
நிகழ்ச்சியில் ஒரு நடன ஜோடி சற்று ஓவராகவே ஆடியது. அதாவது
கட்டிப்பிடித்தும், முகத்தை முகத்தோடு உரசியபடியும், முத்தமிட்டபடியும்
அவர்கள் ஆடிய ஆட்டம் அனைவரையும் நெளிய வைத்தது.
இதைப் பார்த்த பெண்கள் இதைப் பார்க்கவா வந்தோம், கருமம் என்று முகம்
சுளித்தபடி இடத்தைக் காலி செய்தனர். இதனால் அங்கு சலசலப்பு ஏற்பட்டது. இந்த
ஆட்டம், அலங்கோலம் எல்லாம் முடிந்த பின்னர் சம்பத் வந்தார். அவர்
வந்தபோதுதான் குத்தாட்டமும் நின்றது.
ஆனால் குத்தாட்டத்தை விட சம்பத்தின் பேச்சு ரொம்ப சுமாராக இருந்ததால்
கூடியிருந்த சிலரும் கூட மெல்லை கிளம்பிச் சென்றனர். ஆனாலும் சம்பத்
விடாமல் தொடர்ந்து பேசிக் கொண்டிருந்தார்.
tamil.oneindia.in
tamil.oneindia.in
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக