விழுப்புரம் நரேந்திரமோடி பிரதமரானால் இந்தியா வல்லரசாகும் என்று விழுப்புரத்தில் நடந்த தேர்தல் பிரசாரத்தில் பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
விழுப்புரம் பாராளுமன்ற தொகுதி தே.மு.தி.க. வேட்பாளர் உமாசங்கருக்கு ஆதரவு திரட்டுவதற்காக பிரேமலதா விஜயகாந்த் நேற்று மாலை விழுப்புரம் வந்தார். விழுப்புரம் பழைய பஸ் நிலையம் அருகே நேற்று மாலை திறந்தவேனில் நின்றபடி, அவர் பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசியதாவது:–
வல்லரசு நாடாக...
நடைபெற உள்ள தேர்தல் மிகவும் முக்கியமான தேர்தல் ஆகும். உங்களுடைய வாக்கினை நன்றாக சிந்தித்து பதிவு செய்ய வேண்டும். இதுவரை தமிழகத்தில் இரண்டு முனை போட்டி தான் நடைபெற்றுள்ளது. தற்போது 5 முனை போட்டி நடைபெறுகிறது. இதில் வெற்றி வேட்பாளர் உமாசங்கருக்கு நீங்கள் முரசு சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
நரேந்திரமோடி எப்படி குஜராத் மாநிலத்தை முதன்மை மாநிலமாக வைத்துள்ளாரோ அதேபோல் அவர் பிரதமரானால் இந்தியாவை லஞ்சம், ஊழல் இல்லாத வல்லரசு நாடாக மாற்றுவார்.
விழுப்புரம் நகராட்சியில் 42 வார்டுகள் உள்ளன. எந்தவொரு அடிப்படை வசதிகளும் செய்து தரவில்லை. பாதாள சாக்கடை திட்டம் இதுவரை முடிக்கப்படவில்லை. விழுப்புரம் நகராட்சியில் மக்களின் அடிப்படை பிரச்சினைகளை தீர்க்கவில்லை. விழுப்புரம் மாவட்டத்தில் 144 தடை உத்தரவு எவ்வளவு காலத்திற்கு இருந்தது என்பது உங்களுக்கு தெரியும்.
யார் பிரதமர்?
ஆட்சிக்கு வந்தவுடன் 3 மாதத்தில் மின்வெட்டு பிரச்சினையை தீர்ப்போம் என்று கூறினார்கள். இப்போதும் மின்வெட்டு உள்ளது. உரம் விலை உயர்வால் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். குடிநீர் பிரச்சினை, பஸ் கட்டணம் உயர்வு, பால் விலை உயர்வு பற்றி கேட்டதற்கு சட்டமன்றத்தில் இருந்து நீக்குகிறார்கள்.
நரேந்திரமோடிதான் பிரதமர் என்று தெளிவாக சொல்லி நாங்கள் ஓட்டு கேட்கிறோம். ஆனால் அ.தி.மு.க., தி.மு.க.வினால் யார் பிரதமர் என்று சொல்ல முடியுமா, எந்த அணியில் இருக்கின்றோம் என்று சொல்ல முடியுமா.
தி.மு.க., காங்கிரஸ் செய்த ஊழலால் இன்றைக்கு நாடு தலைகுனிந்து நிற்கிறது. நாடு முழுவதும் 320 தொகுதிகளில் பா.ஜ.க. கூட்டணி தனி பெரும்பான்மை பெறும். வாஜ்பாய் ஆட்சியில் தங்க நாற்கரம் சாலை கொண்டு வந்ததுபோல், நரேந்திரமோடி ஆட்சியில் அனைத்து நதிகளும் ஒன்றிணைக்கப்படும். மாற்றம் வரவேண்டும் என்றால் மாற்றத்தின் மூலம் நல்லரசும், இந்தியா வல்லரசாகவும் மாற நீங்கள் முரசு சின்னத்திற்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு பிரேமலதா விஜயகாந்த் பேசினார்.
இதேபோல் வளவனூர், மடப்பட்டு, திருவெண்ணெய்நல்லூர், திருக்கோவிலூர், எறையூர், எலவனாசூர்கோட்டை ஆகிய இடங்களிலும் பிரேமலதா விஜயகாந்த் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டார். dailythanthi.com
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக