சனி, 5 ஏப்ரல், 2014

பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் டி.ஆர்.பாலுவின் கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனர்?


தஞ்சையில் டி.ஆர்.பாலு வெற்றி உறுதி” எனப் பேசிய அவரது ஆதரவாளர்களுக்கு, தி.மு.க.வின் பழைய வரலாற்றுச் சம்பவங்களை எடுத்துக்கூறி பழனி மாணிக்கம் பதிலடி கொடுத்துள்ளார்.
தி.மு.க. தலைவர் கருணாநிதி தேர்தல் பிரசாரத்தை இன்று கோவையில் தொடங்குகிறார். 12-ம் தேதி தஞ்சாவூரில் நடக்கும் பொதுக்கட்டத்தில் பேசுகிறார். தஞ்சைக்கு வரும் கருணாநிதியை வரவேற்பது குறித்தும், அடுத்தகட்ட தேர்தல் பிரசாரம் குறித்தும், தஞ்சை அறிவாலயத்தில் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டம் நடந்தது.
கூட்டத்தில் பேசிய தி.மு.க. தேர்தல் பணிக்குழுச் செயலாளர் எல்.கணேசன், முன்னாள் அமைச்சர் கோ.சி.மணி உட்பட பலரும், “டி.ஆர்.பாலு வெற்றிபெறுவது உறுதி. இப்போதே வெற்றி பெற்றுவிட்டார்” என்று பேசி டி.ஆர்.பாலுவின் மனதைக் குளிர வைத்தனர்.
இதையடுத்துப்  பேசிய மாவட்டச் செயலாளரான பழனி மாணிக்கம், தி.மு.க.வில் அண்ணா காலத்தில் நடந்த ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்தார்.

1962-ல் காஞ்சிபுரத்தில் அண்ணாவும், தென் சென்னையில் நாஞ்சில் மனோகரனும் போட்டியிட்டனர். இருவரும் இரு தொகுதியிலும் மாறிப் மாறிப் பிரசாரம் செய்வது என முடிவு செய்தனர். அதன்படி தனது தொகுதியில் பேசிய நாஞ்சில் மனோகரன், “எனது வெற்றி உறுதியாகவிட்டது. நாற்காலியும் தயராகிவிட்டது”  என்றார்.
அதன்பின் பேசிய அண்ணா, “யார் வெற்றி பெறுவார் என்பதை மக்கள்தான் தீர்மானிப்பார்கள். தேர்தலுக்கு முன்பாகவே இவ்வளவு தலைக்கனம் இருக்கக் கூடாது” என்றார்.
பின்னர் காஞ்சிபுரத்தில் அண்ணாவை ஆதரித்துப  பேசிய நாஞ்சில் மனோகரன், “தேர்தலில் வலுவான கூட்டணி அமைந்திருந்தாலும் வெற்றியை மக்களாகிய நீங்கள்தான் தர வேண்டும்” என்று அடக்கத்தோடு பேசினார்.
இதற்கு அடுத்துப் பேசிய அண்ணா, “நாஞ்சில் மனோகரனுக்கு இவ்வளவு தாழ்வு மனப்பான்மை இருக்கக் கூடாது. நாஞ்சில் மனோகரன் வெற்றிபெறுவது நேற்றே உறுதியாகிவிட்டது” என்றார்.
அண்ணாவின் இந்தப் பேச்சால் குழப்பமடைந்த நாஞ்சில் மனோகரன், “இப்படி மாறி மாறிப் பேசுகிறீர்களே” என அவரிடம் கேட்டார். அதற்குப் பதில் அளித்த அண்ணா, “அதுதான் தேர்தல்” என்றார்.
“எனவே, தேர்தலில் கட்சியினர் நன்கு உழைத்தால்தான் வெற்றி கிடைக்கும். உழைக்காமலே வெற்றி உறுதி என்று பேசக்கூடாது” எனக்கூறி பழனி மாணிக்கம் தனது பேச்சை முடித்தார்.
பழனி மாணிக்கத்தின் இந்தப் பேச்சு டி.ஆர்.பாலுவை மட்டுமின்றி கூட்டத்தில் பங்கேற்றவர்களை சிந்திக்க வைத்தது.
கூட்டம் முடியும் நேரத்தில் டி.ஆர்.பாலுவின் ஆதரவாளர் ஒருவர் எழுந்து, “தஞ்சை ஒன்றியத்திலிருந்து பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் யாரும் வரவில்லை. ஏன் கூட்டத்தைப் புறக்கணிக்கின்றனர்?” என சத்தமாக கேள்வி கேட்டார். இதையடுத்து அவரை வலுக்கட்டாயமாக கூட்டத்திலிருந்து நிர்வாகிகள் வெளியேற்றினர்.
இதைப் பார்த்துக்கொண்டிருந்த டி.ஆர்.பாலு எதுவும் பேசாமல் அமைதியாகவே இருந்தார்.
தஞ்சை ஒன்றியத்தில் பழனி மாணிக்கத்தின் ஆதரவாளர்கள் அதிகமாகவே உள்ளனர். பழனி மாணிக்கத்துக்கு தஞ்சை தொகுதி வழங்கப்படாததால் தேர்தல் பணியை முற்றிலுமாக அவரது ஆதரவாளர்கள் புறக்கணித்துள்ளதாகத் தெரிகிறது.
viruvirupu.com

கருத்துகள் இல்லை: